மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

பரிக்‌ஷா பே சர்ச்சா 2021 நிகழ்ச்சிக்கான முன்பதிவு துவக்கம்: மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’

Posted On: 18 FEB 2021 10:49AM by PIB Chennai

நான்காவது ஆண்டாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் கலந்துரையாடும் பரிக்ஷா பே சர்ச்சா 2021  நிகழ்ச்சிக்கான முன்பதிவு துவங்கி இருப்பதாக, மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால்நிஷாங்க்தமது சமூக ஊடகத்தின் வாயிலாக இன்று தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கலந்துரையாடலின் போது தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான முறையில் பிரதமர் நேரலையில் பதிலளிப்பார். இந்த வருட நிகழ்ச்சி, காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://innovateindia.mygov.in/ppc-2021/ என்ற தளத்தின் மூலம் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வினால் ஏற்படும் மன உளைச்சல் சம்பந்தமான கேள்விகளை எழுப்பலாம் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட  கேள்விகள் நிகழ்ச்சியில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார். இதே தளத்தில் நடைபெறும் இணையதள போட்டிகளின் மூலம் நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் பங்கேற்பாளர்கள் தங்களது மாநிலம்/ யூனியன் பிரதேசத்தில் இருந்து காணொலி வாயிலாக கலந்துரையாடலில் கலந்து கொள்வார்கள் என்றும் அமைச்சர் கூறினார். 2021 மார்ச் 14-ஆம் தேதி வரை இந்த இணையதளத்தின் வாயிலாக போட்டிகளில் பங்கேற்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698948



(Release ID: 1699063) Visitor Counter : 218