மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

விலங்குகளின் நல்வாழ்வு, பாதுகாப்பிற்கான விருதுகள் : வழங்கியது இந்திய விலங்குகள் நல வாரியம்

Posted On: 17 FEB 2021 9:34AM by PIB Chennai

1960-ஆம் ஆண்டின் விலங்குகளைக் கொடுமைப் படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் 4-ஆவது பிரிவின் கீழ் விலங்குகளின் பாதுகாப்பு, நல்வாழ்விற்காக அமைக்கப்பட்ட நாட்டின் உயரிய அமைப்பான இந்திய விலங்குகள் நல வாரியம்,   விலங்குகள் நல்வாழ்வுத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான 14 பிராணி மித்ரா விருதுகளையும், ஜீவ்தயா விருதுகளையும் வழங்கியது.

வசந்த பஞ்சமி புனித தினத்தன்று மத்திய கால்நடை பராமரிப்பு, மீன் மற்றும் பால்வளத் துறை அமைச்சர்‌ திரு கிரிராஜ் சிங் இந்த விருதுகளை வழங்கி, அனைத்து விலங்கு பிரியர்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

விலங்குகள் நல்வாழ்வில் தன்னலமற்ற சேவையை வழங்கிய விருது பெற்றவர்களுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். தனி நபர்களுக்கும், விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இது போன்ற விருதுகள் வழங்கப்படுவது மக்களிடையே விலங்குகளைப் பாதுகாக்கும் உணர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார். நமது தாய் நாட்டில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியத்துடனும் பிற உயிரினங்களுடன் இணைந்து வளமுடன் வாழ வேண்டுமென்பதே நமது நாட்டின் முக்கிய தத்துவம் என்றும் அவர் வலியுறுத்தினார்.  இந்திய விலங்குகள் நல வாரியம், விலங்குகள் நல்வாழ்வு அமைப்புகள் மற்றும் விலங்குகளின் மீது அன்பு செலுத்துவோர் ஆகியோர் எறும்பு முதல் யானை வரை அனைத்து விலங்குகளின் பாதுகாப்பிலும், நல்வாழ்விலும் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான பசுக்களைப் பராமரிக்கும் கோசாலைகளைப் பாராட்டிய அமைச்சர், இந்த கோசாலைகள் சுய சார்புடன் செயல்படுவதற்காக புதுமையான திட்டங்கள், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698588

•••••••••••••••


(Release ID: 1698709) Visitor Counter : 353