விவசாயத்துறை அமைச்சகம்
நாட்டின் உணவுதானிய உற்பத்தி 140 லட்சம் டன்களில் இருந்து 240 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது: திரு நரேந்திர சிங் தோமர்
Posted On:
10 FEB 2021 6:20PM by PIB Chennai
உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைவதை நோக்கி நாடு முன்னேறி வருவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் இன்று கூறினார்.
பிரதமரின் அறைகூவலை தொடர்ந்து தானியங்களின் இறக்குமதி குறைந்துள்ளது,
இதனால் வருடத்திற்கு ரூ. 15,000 கோடி மிச்சமாகிறது என்று சர்வதேச தானியங்கள் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் கூறினார்.
கடந்த ஐந்தாறு வருடங்களில் நாட்டின் உணவுதானிய உற்பத்தி 140 லட்சம் டன்களில் இருந்து 240 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது என்று திரு நரேந்திர சிங் தோமர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே, நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பிகார், சத்திஸ்கர், கேரளா, மேற்கு வங்கம், அசாம், கர்நாடகா, ஜார்கண்டில் மற்றும் திரிபுராவில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இங்கு 2021 பிப்ரவரி 9 வரை 622.20 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதே காலத்தில் 530.18 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு இது வரை செய்யப்பட்டுள்ள நெல் கொள்முதல் 17.35 சதவீதம் அதிகமாகும்.
மேலும், மாநிலங்கள் வேண்டுகோள்படி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 51.92 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைந்தால், மற்ற மாநிலங்களில் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, வேண்டுகோள் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும்.
------
(Release ID: 1696921)