பிரதமர் அலுவலகம்

மேற்குவங்கத்தில் முக்கியமான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம் தான் இந்தியாவிற்கு தற்போது தேவை: பிரதமர்

மேற்குவங்கத்தை முக்கிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மையமாக உருவாக்குவதற்கு நாங்கள் தளர்வறியாமல் பணியாற்றுகிறோம்: பிரதமர்

Posted On: 07 FEB 2021 7:55PM by PIB Chennai

மேற்கு வங்கத்தின் ஹால்டியா பகுதிக்கு இன்று சென்ற பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிரதமரின் உர்ஜா கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, 348 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தோபி – துர்காபூர் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை  நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஹால்டியா சுத்திகரிப்பு வளாகத்தில் இரண்டாவது கேட்டலிடிக் ஐசோவேக்ஸ் பிரிவுக்கு அடிக்கல் நாட்டியதுடன், தேசிய நெடுஞ்சாலை எண் 41-ல் ஹால்டியா, ரானி சக்கில் 4 வழித்தடம் கொண்ட ரயில்வே மேம்பாலம் - மற்றும் – மேம்பாலத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேற்குவங்க ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தற்சார்பு இந்தியாவுக்கான இணைப்பு மற்றும் சுகாதாரமான எரிவாயு சம்பந்தமாக, மேற்குவங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கு இன்று ஓர் முக்கியமான நாள் என்று கூறினார்.

இந்த நான்கு திட்டங்களும் எளிதான வாழ்க்கை முறையையும், இந்த பகுதியில் எளிதான வர்த்தகம் மேற்கொள்வதையும் மேம்படுத்தும். ஏற்றுமதி- இறக்குமதியின் முக்கிய முனையமாக ஹால்டியா வளர்ச்சி அடைவதற்கு இந்த திட்டங்கள் உதவிகரமாக இருக்கும்.

எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் தான் தற்போது இந்தியாவிற்கு மிகவும் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்த தேவையை பூர்த்தி செய்வதில்  ஒரே நாடு, ஒரே எரிவாயு தொகுப்பு, ஓர் முக்கிய நடவடிக்கையாகும். இதனை செயல்படுத்துவதற்காக இயற்கை எரிவாயுவின் விலையை குறைத்து, எரிவாயுக் குழாய் இணைப்புகளை விரிவுபடுத்தும் பணிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. 

நமது முயற்சிகளின் பயனால் அதிக எரிவாயுவை உபயோகிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. குறைந்த செலவில் சுகாதாரமான எரிசக்தியை ஊக்குவிப்பதற்காக நிதிநிலை அறிக்கையில் ஹைட்ரஜன் இயக்கம் பற்றிய அறிவிப்பு வெளியானது.

கிழக்கு இந்தியாவின் வாழ்க்கை மற்றும் வர்த்தக தரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ரயில்வே, சாலை, விமானம், துறைமுகங்கள், நீர்வழி சார்ந்த பணிகளை பிரதமர் பட்டியலிட்டார்.

எரிவாயு பற்றாக்குறையின் காரணமாக இந்த பகுதியில் தொழில்துறை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு தீர்வு காணும் வகையில் கிழக்கு இந்தியாவை கிழக்கு மற்றும் மேற்கு துறைமுகங்களுடன் இணைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதிதான் பிரதமரின் உர்ஜா கங்கா திட்டம். 350 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தோபி – துர்காபூர் குழாய்வழி திட்டத்தின் மூலம் மேற்குவங்கம் நேரடியாகப் பயனடைவதுடன், பிஹார் மற்றும் ஜார்க்கண்ட்டின் 10 மாவட்டங்களும் பயனடையும். இந்த கட்டுமான பணியின் வாயிலாக உள்ளூர் மக்களுக்கு 11 லட்சம் வேலை நாட்களுக்கான பணிகள் வழங்கப்பட்டன.

சமையலறைகளுக்கு தூய்மையான எரிவாயு இணைப்பும், வாகனங்களுக்கு தூய்மையான இயற்கை எரிவாயுவும் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும். சிந்திரி மற்றும் துர்காபூர் உர ஆலைகள் இடையறாத  எரிவாயுவைப் பெறும். துர்காபூர்- ஹால்டியா பிரிவில் ஜக்திஷ்பூர்- ஹால்டியா மற்றும் பொக்காரோ-தம்ரா குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு கெயில் மற்றும் மேற்குவங்கத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

உஜ்வாலா திட்டத்தின் வாயிலாக இந்த பகுதியில் திரவ பெட்ரோலிய எரிவாயுவின் தேவை அதிகரித்திருப்பதால், இந்த பகுதியில் திரவ பெட்ரோலிய எரிவாயுவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 36 லட்சம் பட்டியல்/ பட்டியல் பழங்குடி பெண்களை உள்ளடக்கிய மகளிருக்கு மேற்குவங்கத்தில் 90 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டன. கடந்த ஆறு வருடங்களில் மேற்கு வங்கத்தில் சமையல் எரிவாயுவின் பயன்பாடு 41 சதவீதத்திலிருந்து 99 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஹால்டியாவின் திரவ பெட்ரோலிய எரிவாயு இறக்குமதி முனையத்திலிருந்து இணைப்புகள் வழங்கப்படுவதாலும், இவர்களில் ஒரு கோடி பேர் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் என்பதாலும்,அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்த முனையம் முக்கிய பங்கு வகிக்கும்.

தூய்மையான எரிவாயுவை வழங்குவதில் நாம் மேற்கொண்டுள்ள உறுதிக்கிணங்க பிஎஸ்-6 எரிவாயு முனையத்தின் திறனை அதிகரிப்பதற்கான பணிகள் இன்று தொடங்கப்பட்டது. இந்த இரண்டாவது கேட்டலிடிக் டிவாக்சிங் பிரிவு உயவு சார்ந்த எண்ணெய்கள் தொடர்பான ஏற்றுமதியில் நமது சார்பை குறைக்கும். “ஏற்றுமதி திறனை நம்மால் உருவாக்கும் வகையிலான ஒரு நிலையை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்”, என்று பிரதமர் கூறினார்.

மேற்குவங்கத்தை முக்கிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மையமாக உருவாக்குவதற்கு நாங்கள் தளர்வறியாமல் பணியாற்றுவதாக பிரதமர் தெரிவித்தார். இதற்கு துறைமுகங்களாலான வளர்ச்சி ஓர் சிறந்த மாதிரியாகும். கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தை நவீனமயமாக்க ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஹால்டியா கப்பல் நிறுத்துமிடத்தின் திறனையும், அண்டை நாடுகளுடனான இணைப்பையும் மேலும் வலுப்படுத்துமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். 

புதிய மேம்பாலங்களும்  உள்நாட்டு நீர் நிலைகள் ஆணையத்தின் பல்முனை முனையங்களும் இணைப்பை மேம்படுத்தும். “தற்சார்பு இந்தியாவிற்கான மிகப்பெரும் சக்தியாக ஹால்டியாவை இது உருவாக்கும்”, என்று தெரிவித்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

------(Release ID: 1696028) Visitor Counter : 10