வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தொழிற்சாலைகளுக்கு ஒற்றை சாளர அனுமதி முறை

Posted On: 05 FEB 2021 3:06PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணை அமைச்சர் திரு சோம் பர்காஷ், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

தொழிற்சாலைகளுக்கு பல்வேறு அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள் அளிப்பதற்கு ஒற்றை சாளர முறையை அமைப்பதற்காக மத்திய அரசு பணியாற்றி வருகிறது. இதன் மூலம், முதலீட்டாளர்கள் பல்வேறு தளங்கள்/அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது.

கடந்த மூன்று வருடங்களில், தெலங்கானாவில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஹைதரபாத் பார்மா சிட்டி என் ஐ எம் இசட் என்னும் தேசிய முதலீட்டு மற்றும் உறபத்தி மண்டலம் அமைப்பதற்கு தொழில்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை இறுதி ஒப்புதல் அளித்தது.  தொழிற்பூங்காக்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைப்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வந்தாலும், பல்வேறு திட்டங்களின் மூலமாக மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது.

புது நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக ஸ்டார்ட் அப் இந்தியா சீட் ஃபண்ட் என்னும் திட்டத்திற்கு 2021-22-ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த நான்கு வருடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய புது நிறுவனஙளுக்கு அடுத்த நான்கு வருடங்களில் ரூ 945 கோடி வழங்கப்படும். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி, கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ஏற்றுமதிகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. 2021 ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகளின் மதிப்பு $304.53 பில்லியனாக இருந்தது. ஒட்டுமொத்த இறக்குமதிகளின் மதிப்பான $293.56 பில்லியனோடு ஒப்பிடும் போது, இது $10.97 பில்லியன் அதிகமாகும்.

கொவிட் பெருந்தொற்றை கருத்தில் கொண்டு வெளிநாட்டு வர்த்தக கொள்கை (2015-20), 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி வரி சலுகைகள் மற்றும் வட்டி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய விவசாயத்துறையின் ஏற்றுமதி சாத்தியங்களை முழுவதும் பயன்படுத்தும் விதத்திலும், விவசாயத்தில் இந்தியாவை சர்வதேச சக்தியாக உருவாக்கும் நோக்கிலும், விவசாயிகளின் வருவாயை பெருக்கும் எண்ணத்திலும், விரிவான வேளாண் ஏற்றுமதி கொள்கையை அரசு அறிமுகப்படுத்தியது.

பொருள்-மாவட்ட ரீதியான குழுக்கள் நாடு முழுவதும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் திருச்சி, தேனி மற்றும் பொள்ளாச்சி மாவாட்டங்களை இணைத்து வாழைப்பழ குழு உருவாக்கப்பட்டுள்ளது,

இதற்கிடையே, 2021-22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் நாட்டின் புது நிறுவனங்களுக்கு (ஸ்டார்ட் அப்) ஊக்கமளிக்கும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொகபத்ரா கூறியுள்ளார்.

புதுதில்லியில் ஊடகங்களிடம் பேசிய அவர், ஒரு நபர் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் நடவடிக்கைகள் புது நிறுவனங்களுக்கும், புதுமையாளர்களுக்கும் நேரடியாக பலனளிக்கும் என்றார்.

மேலும் பேசிய அவர், காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரித்திருப்பதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் நேர்மறை விளைவுகள் ஏற்படும் என்று கூறினார்.

2021-22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இது குறித்து செய்யப்பட்டுள்ள அறிவிப்பின்படி காப்பீட்டு நிறுவனங்களில் நேரடி அந்நிய முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும், இருந்த போதிலும், நிறுவனங்களின் இயக்குநர் குழுக்கள் மற்றும் உயர் பதவிகளில் இந்தியர்களே பெருமளவில் இருப்பார்கள் என்றும் கூறினார்.

தொழில் செய்வதை எளிதாக்கும் நோக்கில், ஒழுங்குமுறை தாக்கல் சுமைகளை 2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை குறைத்துள்ளதாக டாக்டர் குருபிரசாத் மொகபத்ரா தெரிவித்தார்.

தொழில்கள் மற்றும் மக்களின் ஒழுங்குமுறை தாக்கல் சுமைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை 2020 ஆகஸ்ட் 15-க்குள், அதாவது நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில், செய்து முடிக்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவுறுத்தியிருப்பதாகவும், இதை நோக்கி இந்திய அரசு முழு அளவில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695463

                                                                                                      -------



(Release ID: 1695582) Visitor Counter : 203