சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
2021-ஆம் ஆண்டின் போலியோ சொட்டு மருந்து திட்டம்: குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
Posted On:
30 JAN 2021 6:26PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி 2021-ஆம் ஆண்டின் போலியோ சொட்டு மருந்து திட்டத்தை இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘போலியோ ஞாயிறு' என்று அழைக்கப்படும் தேசிய போலியோ சொட்டு மருந்து தினம் ஜனவரி 31-ஆம் தேதி (நாளை) கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு குடியரசு தலைவரும், திருமதி சவிதா கோவிந்தும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்கள். இந்தியாவிலிருந்து போலியோவை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் 5 வயதிற்குட்பட்ட சுமார் 17 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக சொட்டு மருந்து வழங்கப்படும்.
துவக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கொவிட் பெருந்தொற்று காலகட்டத்திலும், தடுப்பூசிகளால் கட்டுப்படுத்தப்படும் நோய்களிலிருந்து இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளையும் பாதுகாக்கும், இந்தியாவின் உறுதித்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய குடியரசுத் தலைவருக்கும், அவரது துணைவியாருக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த திட்டத்தின் வெற்றி குறித்து பேசிய அமைச்சர், “இந்தத் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு உலகளவில் ஏற்பட்ட போலியோ பாதிப்பில், 60 சதவீதம் பாதிப்பு இந்தியாவில் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி நாட்டின் கடைசி பாதிப்பு ஹவுராவில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, கடந்த பத்து ஆண்டுகளில் போலியோ பாதிப்பற்ற நாடாக இந்தியா விளங்குகிறது”, என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
குழந்தைகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் உலகளாவிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் நுரையீரல் அழற்சி, ரோட்டா வைரஸ், தட்டம்மை ரூபெல்லா தொற்று நோய் போன்ற நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் புதிதாக வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693598
***************
(Release ID: 1693623)
Visitor Counter : 321