குடியரசுத் தலைவர் செயலகம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை-சிறப்பம்சங்கள்

Posted On: 29 JAN 2021 12:36PM by PIB Chennai

நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட மூன்று முக்கிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியுள்ளது என்றும், இச்சட்டங்களால் 10 கோடி விவசாயிகள் பயன் பெற்றிருப்பதாகவும் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

 

இன்று நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தொடரில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், தற்போது நடைமுறையில் உள்ள உரிமைகளும், வசதிகளும், புதிதாக இயற்றப்பட்ட சட்டங்களின் காரணமாக, விவசாயிகளுக்கு வ்வித பாதிப்தையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார். இந்த வேளாண் சீர்திருத்தங்கள் குறித்து நாட்டில் கடந்த 20 ஆண்டு காலமாக விவாதிக்கப்பட்டு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென்ற கருத்து பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார். இக் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின் போதும் பிரதிபலித்தது என்றும் அவர் கூறினார்.

 

இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று கூறிய குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றத்தின் முடிவை அரசு மதிக்கிறது என்றும், அந்த முடிவை ஏற்கும் என்றும் கூறினார்.

 

ஜனநாயகத்தின் மதிப்புக்கும், அரசியல் சாசனத்தின் புனிதத் தன்மைக்கும் அரசு உயர்ந்த மதிப்பளிக்கிறது என்று தெளிவுபடுத்திய குடியரசுத் தலைவர், இந்தச் சட்டங்கள் தொடர்பாக உருவாகியுள்ள தெளிவற்ற புரிதல்களைக் களைய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது என்று கூறினார்.

 

பேச்சு சுதந்திரம்; ஜனநாயக முறையில் அமைதியான போராட்டங்களை நடத்துவது; ஆகியவற்றுக்கு அரசு எப்போதும் மதிப்பளித்துள்ளது என்று கூறிய குடியரசுத் தலைவர், குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை அவமதிப்பது; குடியரசு தினம் போன்ற நன்னாளை அவமதிப்பது; போன்ற சமீபத்திய நிகழ்வுகள் துரதிருஷ்டவசமானது என்று கூறினார்.

 

நாட்டின் அரசியல் சாசனம் நமக்குப் பேச்சுரிமையை அளித்துள்ளது என்று கூறிய குடியரசுத் தலைவர், அதே சமயம் நாம் அதே அளவு கண்ணியத்துடன் சட்டங்களையும், விதிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

 

சுவாமிநாதன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது என்றும், உற்பத்திச் செலவில் குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் குடியரசுத் தலைவர் கூறினார். அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையில் சாதனை அளவிலான விளைபொருட்களைக் கொள்முதல் செய்வது மட்டுமல்லாமல், கொள்முதல் மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.

 

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும், இந்த விவசாயிகளுக்கு, செலவினங்களுக்காக ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது என்றும், இதற்காக, பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

 

இந்தியர்களின் ஒற்றுமையுணர்வு, அர்ப்பணிப்பு உணர்வு, ஆகியவை காரணமாக பல்வேறு இன்னல்களை நாடு எதிர்கொள்ள முடிந்துள்ளது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில், நம் நாட்டு மக்கள் பலரை எதிர்பாராத நேரத்தில் நாம் இழக்க நேர்ந்தது என்றும், கொரோனா தொற்று, உலகின் ஒவ்வொரு தனி மனிதரையும், ஒவ்வொரு நாட்டையும் பாதித்துள்ளது என்றும், ஆனால் இந்தியா பெருந்தொற்று காலத்திலிருந்து புது சக்தியுடன் உலக அரங்கில் மீண்டெழுந்துள்ளது என்றும் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். அரசு உரிய காலத்தில், அளவீடுகளின் படி, முடிவுகளை மேற்கொண்டதால், நம்மால் நம் நாட்டு மக்களில், பல லட்சக்கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது என்பது தமக்கு திருப்தி அளிக்கிறது என்று அவர்  கூறினார்.

 

தற்போது கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது என்றும், அதே சமயம், ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

 

கொரோனா பெருந்தொற்று காலத்தின் போதும், இந்தியா உலகத்தின் மீதான பொறுப்புகளை, எத்தகைய நேர்மையுடன் மேற்கொண்டது என்பதை உலகே கண்டது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்ட 'வசுதைவக குடும்பகம்' என்ற கூற்றுக்கேற்ப இந்தியா, தனது உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டது மட்டுமல்லாமல்,150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்கியது என்றும் அவர் கூறினார். இந்த நோய்க்கான தடுப்பு மருந்து உலக அளவில் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதி கொண்டுள்ளது என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

 

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக சாதனை அளவிலான பொருளாதார ஊக்குவிப்பு நிதி தொகுப்பு ஒன்றை அரசு அறிவித்து, எந்த ஒரு ஏழை மனிதரும் பட்டினியாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ததாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். பிரதமரின் ஏழைகள் நலத் திட்டத்தின் கீழ், எட்டு மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம், இலவசமாக 80 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டது; புலம்பெயர் தொழிலாளர்கள், பணியாளர்கள், தங்கள் இல்லங்களில் இருந்து தொலை தூரங்களில் பணியாற்றுபவர்கள் ஆகியோரின் துயர நிலை குறித்து அரசு கவனத்தில் கொண்டது என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

 

அரசு தனது அனைத்து முடிவுகளின் மூலம், கூட்டாட்சி வடிவமைப்பின் கூட்டு வலிமைக்கு, முன்னெப்போதும் இல்லாத ஒரு சான்றாக உருவெடுத்துள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக ஜனநாயகம் வலுவடைந்துள்ளது மட்டுமல்லாமல், அரசியல் சாசனத்தின் கௌரவத்தையும் அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

 

அறிவியல் திறன், தொழில்நுட்ப நிபுணத்துவம், புதிதாக தொழில் தொடங்குவதற்கு ஏற்ற வலுவான சூழல் ஆகியவை இந்தியாவிடம் உள்ளது என்பதை, மிகக் குறுகிய காலத்தில் 2200 க்கும் அதிகமான ஆய்வுக்கூடங்களை ஏற்படுத்தியது; ஆயிரக்கணக்கான செயற்கை சுவாசக் கருவிகள், தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகள், பரிசோதனைக் கருவிகள் தயாரித்தது; போன்றவற்றின் மூலம் தற்சார்பு நிலை அடைந்து நிரூபித்துள்ளது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். உலகிலேயே மிக பெரிய அளவிலான தடுப்பு மருந்து செலுத்தும் திட்டத்தை இந்தியா செயல்படுத்துகிறது என்பது மிகவும் பெருமிதம் அளிப்பதாகும் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டு தடுப்பு மருந்துகளும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

 

உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி வழங்க தேவையான மருந்தை பல்வேறு நாடுகளுக்கும் கிடைக்கச் செய்தது இந்தியாதான் என்று அவர் கூறினார். இதன்மூலம் இத்தகைய இக்கட்டான சூழலில், மனிதகுலத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையையும் இந்தியா பூர்த்தி செய்துள்ளது என்று கூறினார்.

 

அரசு எடுத்து வரும் முயற்சிகளின் விளைவாக தற்போது ஏழை மக்கள் எளிய முறையில் சுகாதார வசதிகளின் பயன்களைப் பெறுகின்றனர்; இதனால் அவர்கள் தங்கள் நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு செலவிடும் தொகை படிப்படியாகக் குறைந்து வருகிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஆயுஷ்மான் பாரத் - பிரதமர் ஜன்ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஒன்றரை கோடி ஏழை மக்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெறும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஏழை மக்கள் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்த முடிந்துள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

 

சென்ற ஆண்டு நாம் வெளிப்படுத்திய ஒருங்கிணைந்த ஒற்றுமையைப் போலவே, அதே வலிமையுடன் இந்த ஆண்டும், புதிய குறிக்கோள்களை நாம் அடைய வேண்டும். ஒரு காலத்தில் செய்து முடிப்பது மிகவும் கடினம் என்று கருதப்பட்ட பல பணிகளை, கடந்த சில ஆண்டுகளில் இந்தியா, செய்து முடித்துள்ளது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

 

அரசியல் சாசனம் 370 ரத்து செய்யப்பட்டதற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு புதிய உரிமைகளும், அதிகாரங்களும் கிடைத்துள்ளன.

 

- குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது

 

- பாதுகாப்புப் படை தலைமை அதிகாரி (சீஃப் ஆஃப் டிஃபன்ஸ் ஸ்டாஃப்) பதவி ஏற்படுத்தப்பட்டதால் நாடு பயனடைந்துள்ளது.

 

- இராணுவப் படைகளில் பெண்கள் பங்கேற்பது அதிகரித்து வருகிறது.

 

- உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, ராமர் கோயில் கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது.

 

- வர்த்தகம் செய்வது எளிது என்ற தரவரிசைப் பட்டியலில் இந்தியா சாதனை அளவு மேம்பாட்டை அடைந்துள்ளது

 

நாடு முழுவதும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக, மருத்துவக் கல்வியை விரிவுபடுத்துவது, அதே அளவு முக்கியத்துவம் கொண்டதாகும் என்று கூறிய குடியரசுத் தலைவர், 2014 ஆம் ஆண்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன; ஆனால் இன்று நாட்டில் 562 மருத்துவ கல்லூரிகள் உள்ளன என்று தெரிவித்தார். பிரதமர் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவக் கழகங்களை அமைப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

 

தற்சார்பு இந்தியா திட்டம் என்பது இந்தியாவிலேயே தயாரிப்பது என்ற அளவில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு இந்தியனுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்கான இயக்கமாக இருக்க வேண்டும் என்றும் நாட்டின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக இருக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

 

தற்சார்பு கொண்ட ஆதர்ச கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று தேசப்பிதா மகாத்மா காந்தி எண்ணியிருந்தார். இந்த எண்ணத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக கிராமங்களில், பன்முக வளர்ச்சிக்காக அரசு அயராது உழைத்து வருகிறது. 2022ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் நல்லதொரு வீடு அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

 

இந்திய அரசியல் சாசனத்தின் முதன்மைச் சிற்பியாக மட்டுமின்றி நாட்டின் நீர் கொள்கைக்காகவும் வழி காட்டியவராக பாபாசாகேப் அம்பேத்கார் திகழ்ந்தார். அண்ணல் அம்பேத்கார் கொள்கையால் ஊக்கம் பெற்ற அரசு, தற்போது ஜல் ஜீவன் இயக்கம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக கூறினார். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கப்படுவதற்கான திட்டம் மட்டுமல்லாமல், நீர்வளப் பாதுகாப்புக்கான பணிகளும், துரிதகதியில் முன்னேறி வருகின்றன என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

 

இருபத்தோராம் நூற்றாண்டின் தேவைகளைக் கருத்தில் கொண்டு நமது கிராமங்களிடையேயான தொடர்பை மேம்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன், மத்திய அரசு, கிராமப்புற சாலை தொடர்பை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். பிரதமர் கிராம சாலை திட்டத்தின் கீழ் 6.42 லட்சம் கிலோமீட்டர் சாலை வசதி நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்புகள், பள்ளிகள், சந்தைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் 1.25 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.
 

கிராமப்புறங்களில் சாலைகள் போடுவது மட்டுமல்லாமல் இணையதள சேவையை அளிப்பதும் மிகவும் முக்கியமாகும்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் கிடைப்பதை உறுதிப்படுத்திய பிறகு அரசு கண்ணாடி இழை தொடர்பின் மூலமாக, நாட்டிலுள்ள 6 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களை இணையதளம் மூலம் இணைப்பதற்கான இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

 

நமது சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், சிறு குறு நடுத்தரத் தொழில்கள் நாட்டின் பல்வேறு கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் உள்ளன; இவை நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும் என்று கூறிய குடியரசுத் தலைவர், இந்தியா தற்சார்பு கொண்ட நாடாக உருவாக, இந்தத்தொழில் பிரிவுகளிடம் ஒப்பற்ற ஆற்றல் உள்ளது என்று குறிப்பிட்டார்.

 

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 50 சதவிகிதம் இந்தப் பிரிவுகளைச் சாரும் என்று கூறிய குடியரசுத் தலைவர், தற்சார்பு இந்தியா உருவாவதற்கான இயக்கத்தின் கீழ்,  எம் எஸ் எம் இ பிரிவுக்கான பங்கை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் பெண் தொழில்முனைவோர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். பெண்களுக்கு சுய வேலை வாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை வழங்குவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் இதுவரை 25 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் இதில் சுமார் எழுபது சதவிகிதம் பெண் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

 

பெண்கள் சமபங்கு அளிப்பதை உறுதிப்படுத்துவது முக்கியம் என்று அரசு கருதுவதால், பல்வேறு துறைகளிலும் மகளிருக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்திய விமானப் படையிலும், இராணுவக் காவல் படைப் பிரிவிலும் சண்டையிடுதல் பிரிவில் முதன்முறையாக பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது; நிலத்தடி சுரங்கங்களிலும் திறந்தவெளிச்சுரங்கங்களிலும் இரவு நேரங்களில் பெண்கள் பணிபுரிய அனுமதி போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

 

இருபத்தோராம் நூற்றாண்டின் சவால்களையும், உலக அளவிலான தேவைகளையும் கருத்தில் கொண்டு அரசு, தேசிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் முதன்முறையாக மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பாடங்களை தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பாடத்திட்டத்தை படிக்கும்போது இடையில் தாம் தேர்ந்தெடுத்த பாடங்களை மாற்றிக் கொள்வதற்கான வசதியும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள பிரிவினர், தரமான கல்வி பெறுவதன் மூலமாகத் தான், சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கான பயணத்தைத் தொடங்க வேண்டும் என்பதில் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. மூன்று கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரசின் பல்வேறு கல்வி உதவித்தொகைகளின் மூலமாக பயனடைந்து வருகிறார்கள் என்றும் குடியரசுத்தலைவர் கூறினார்.

 

கல்வி மேம்பாடு மட்டுமல்லாமல், பணி நியமனங்களுக்கான வழிமுறைகளை எளிமைப்படுத்துவதற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவுகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பல இளைஞர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இளைஞர்கள் பல்வேறு தேர்வுகளை எழுதி சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லாத வகையில் அரசு தேசியப்பணி நியமன முறையை ஏற்படுத்தியுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

.

இந்தியாவில் முன்னேறி வரும் நவீன தொழில்நுட்பம் மற்றும் ஒவ்வொரு இந்தியரும் நவீன தொழில்நுட்பத்தை எளிதில் பெற முடிகிறது என்பதும் தற்சார்பு இந்தியா என்ற குறிக்கோளை அடைவதற்கான முக்கிய குறியீடுகள் ஆகும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

 

ஜன்தன் வங்கிக் கணக்குகள், ஆதார் அட்டை, அலைபேசி பயன்பாடு ஆகியவை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உதவுகின்றன. இந்த மூன்று திட்டங்களால் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய், தவறானவர்களின் கைகளில் சென்று சேராமல் காப்பாற்ற முடிந்துள்ளது.

 

நம்முடைய சொந்த செயற்கைக்கோள் நாவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் 'நாவிக்' , நம் நாட்டின் பெருமையை மேலும் அதிகரித்துள்ளது என்று கூறிய குடியரசுத்தலைவர், இதன் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பயனடைவதாகக் குறிப்பிட்டார்.

 

தற்போதைய நாடாளுமன்ற வளாகம் நமது இன்றைய தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என்பதை முந்தைய அரசுகளின் பதவிக் காலத்தின் போதும், நாடாளுமன்ற அவைகளிலும் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஒன்றை எழுப்ப வேண்டும் என்று முந்தைய அரசுகளும் முயற்சிகள் மேற்கொண்டன. நாடு விடுதலையடைந்து 75வது ஆண்டை நெருங்கும் நேரத்தில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன என்பது மகிழ்ச்சி தரும் விஷயம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது கடமைகளைச் சிறந்த முறையில் செய்யும் வகையில், மேலும் சிறந்த வசதிகள் அவர்களுக்குக் கிடைக்கும் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

தொழில்துறைக்கு, தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், மூலதனம் எளிதில் கிடைப்பதும் இன்றியமையாததாகும் என்று கூறிய குடியரசுத்தலைவர், இதற்காக நாட்டின் வங்கி அமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். பல சிறிய வங்கிகளை ஒன்றிணைத்து, பெரிய, வலுவான வங்கியாக ஏற்படுத்துவது, இந்த திசை நோக்கிய ஒரு நடவடிக்கையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று எனது அரசு ஊக்குவித்து வருகிறது என்று கூறிய குடியரசுத் தலைவர், இன்று உள்ளுர் என்று உரக்கச் சொல்வோம் என்பது மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது என்று கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மீது உணர்வுபூர்வமான பற்றுதலை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதேசமயம், பொருட்கள் அனைத்தும், மிக உயர்ந்த தரத்திலானவையாக இருப்பதும் உறுதி செய்யப்படுவதாக குடியரசுத் தலைவர் கூறினார்.

 

நாட்டின் கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்காக 110 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய கட்டமைப்பு பைப்லைன் குழாய் இணைப்பு திட்டம் குறித்தும், எனது அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார். பாரதமாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், புதிதாக ஆறு எக்ஸ்பிரஸ் வழிச் சாலைகள் மற்றும் 18 புதிய கட்டுப்பாட்டுக்குட்பட்ட வழித்தடங்கள் ஆகியவற்றுக்கான பணிகளும் நடைபெற்று வருவதாகவும், குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

 

நாடு, எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரமாக மாற வேண்டும் என்பதற்காக, வாயு இணைப்பு தொடர்பான பணிகள் விரைவுபடுத்தப் பட்டுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள உரத் தொழிற்சாலைகளுக்கும், இதர தொழிற்பிரிவுகளுக்கும், வாயு இணைப்பு அளிப்பதற்கான தூத்துக்குடி- இராமநாதபுரம் வாயு குழாய் இணைப்பு திட்டப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் கொச்சி- ங்களூரு வாயு குழாய் இணைப்புத் திட்டம், நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சியை அரசு ஒரு வாய்ப்பாகக் கருதுகிறது. எனவேதான், நகர்ப்புற கட்டமைப்பு வசதிக்காக, பெருமளவிலான முதலீடு செய்யப்படுகிறது. நகரங்களில் உள்ள ஏழை மக்களுக்காக, ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 40 லட்சம் வீடுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு விட்டன.

 

வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட எனது அரசின் கொள்கைகள், ஜம்மு காஷ்மீர் மக்களின் முழுமையான ஆதரவையும் பெற்றுள்ளன. சில வாரங்களுக்கு முன்னால், ஜம்மு-காஷ்மீர் மாவட்ட கவுன்சில்களுக்கான தேர்தல், நாடு விடுதலை அடைந்த பிறகு முதன்முறையாக, வெற்றிகரமாக, நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் பெருமளவில் பங்கேற்றது, ஜம்மு-காஷ்மீர், புதிய ஜனநாயக எதிர்காலத்தை நோக்கி துரிதகதியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதைக் காண்பித்துள்ளது. புதிய உரிமைகள் வழங்கப்பட்டதால், இந்தப் பகுதியில் உள்ள மக்கள், அதிகாரம் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

 

கொரோனா வைரஸ் தொற்று காலத்தின் போது, அரசு பல்வேறு நெருக்கடிகளைச் சமாளித்து கொண்டிருந்தபோது, எல்லைப்பகுதியில் அரசின் திறனைச் சோதிக்கும் வகையிலான சில சவால்கள் எழுந்தன. இரு தரப்பு உறவுகள், ஒப்பந்தங்கள் எதையும் பொருட்படுத்தாமல் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் அமைதியைக் குலைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் நமது பாதுகாப்புப் படையினர் தக்க நேரத்தில் துணிச்சலாகவும், வீரத்துடனும் இவற்றை எதிர்கொண்டது மட்டுமல்லாமல், எல்லைப்பகுதி நிலையை மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும், முறியடித்தனர். நமது வீரர்கள் வெளிப்படுத்திய கட்டுப்பாடு, துணிவு, வீர தீரம் ஆகியவை மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவை. 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கால்வான் பள்ளத்தாக்கில், நமது நாட்டின் பாதுகாப்பிற்காக, 20 வீரர்கள் தங்களது இன்னுயிரை ஈந்து மிகப்பெரிய தியாகம் செய்தனர். இந்தத் தியாகிகளுக்கு, ஒவ்வொரு குடிமகனும் நன்றிக்கடன்பட்டவராவார்.

 

எனது அரசு விழிப்புடன் இருக்கிறது. நாட்டின் நலனைப் பாதுகாப்பதில் முழு உறுதி பூண்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக, எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில், கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

 

வருங்காலத்தில், இந்தியா மிகப் பெரிய பங்காற்ற வேண்டியுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, நமது ராணுவம் தயார் நிலையில் இருப்பதை வலுப்படுத்த வேண்டும் என்று எனது அரசு கருதுகிறது.

இந்திய ராணுவப் படையின் திறனை அதிகரிக்கும் வகையில், புதிய ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. பாதுகாப்புத் துறையில் சுய சார்பை அடைய அதிக முனைப்பு மேற்கொள்ளப்படுகிறது. 48,000 கோடி ரூபாய் மதிப்பிலான, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் போர் விமானமான தேஜஸ் விமானம் 83ஐ வாங்குவதற்காக, எச் ஏ எல் நிறுவனத்திற்கு அரசு, ஆணை வழங்கியது. இந்தியாவில் தயாரிப்போம் என்பதை ஊக்குவிப்பதற்காக, பாதுகாப்புத் துறை தொடர்பான 100 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. சூப்பர்சானிக் டார்பிடோக்கள், விரைந்து எதிர்வினையாற்றும் ஏவுகணைகள், டாங்கிகள், ரைஃபிள்கள் போன்றவையும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. பாதுகாப்புத் துறை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதியிலும் இந்தியாவின் பங்கு விரைவாக அதிகரித்து வருகிறது.

 

இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம், இ என் எஸ் பி ஏ சி ஈ அமைக்கப்பட்டதையடுத்து, விண்வெளித் துறையில் பெரும் சீர்திருத்தங்கள் விரைவுபடுத்தப்படும். சந்திரயான் 3, ககன்யான், சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் எஸ் எஸ் எல் வி போன்ற முக்கியமான பணிகளில் நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் பணியாற்றி வருகிறார்கள் என்பதில் நாம் பெருமையடைகிறோம். அணுசக்தித் துறையிலும் நாடு சுயசார்பு அடைவதை நோக்கி, வேகமாக முன்னேறிக் கொண்டு வருகிறது.

 

இன்று இந்தியா, உலகில் மிக வெகுவாக முன்னேறி வருகிறது. தனது புதிய அடையாளத்திற்கு ஏற்ற வகையில் தனது உறுதிப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நம்மை நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்த 2021 ஆம் ஆண்டு இந்தக் காரணத்திற்காகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சில நாட்களுக்கு முன், நாடு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாளான 23 ஜனவரி தினத்தை பராக்ரம நாளா கொண்டாடியது. இந்தண்டு, நாம், நேதாஜி அவர்களின் 125வது பிறந்த ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். இதைச் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்காக, எனது அரசு, உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. குரு தேஜ்பகதூர் அவர்களின் 400 ஆவது பிரகாஷ் பர்வ் நாளையும் மிகுந்த வணக்கத்துடன் நாம் கொண்டாடவிருக்கிறோம். இந்தியா விடுதலைடைந்து 65 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில், அம்ருத் மஹோத்சவ் கொண்டாட்டங்கள், இந்த ஆண்டு முதல் நடைபெறத் தொடங்கும் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693145

*****



(Release ID: 1693407) Visitor Counter : 828