பிரதமர் அலுவலகம்

உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட செயல்திறன் மிக்க கொரோனா தடுப்பு நடவடிக்கை மனித குலத்தை மிகப் பெரும் சோகத்திலிருந்து காப்பாற்றியது: பிரதமர்
தற்சார்பு இந்தியா இயக்கம் உலக நலனுக்கும், உலக விநியோக சங்கிலிக்கும் உறுதி பூண்டுள்ளது: பிரதமர்
எப்டிஐ நடைமுறைகளுக்கு உகந்த வரி பரிபாலன முறையை இந்தியா வழங்குகிறது: பிரதமர்
நாட்டின் டிஜிட்டல் தோற்றம் முழுமையாக மாறியுள்ளது: பிரதமர்
எளிதான வாழ்க்கை முறை, எளிதாக தொழில் புரிவதற்கு ஏற்ற சூழல், பருவநிலை சார்ந்த மேம்பாடு ஆகியவற்றுக்கு உகந்த நீடித்த நகரமயமாக்கத்தில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது: பிரதமர்

Posted On: 28 JAN 2021 8:53PM by PIB Chennai

உலகப் பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாட்டில், பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். மனித குலத்துக்கு நன்மை பயக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும்நான்காவது தொழில் புரட்சிகுறித்து உரையாற்றிய அவர், தலைமை செயல் அலுவலர்களுடனும் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நெருக்கடியான கால கட்டத்திற்கு இடையே, தாம் 130 கோடி மக்களிடமிருந்து நம்பிக்கை, நேர்மறையான சிந்தனை ஆகியவை பற்றிய செய்தியை கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டார்கொரோனா தொற்றைக் கையாளுவதில் ஆரம்பத்தில் சில சந்தேகங்கள் ஏற்பட்ட போதிலும், அதனைக் கையாளுவதில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு உலகுக்கு அதன் திறனை நிரூபித்துள்ளதாக அவர் கூறினார். கோவிட் தடுப்பு பயிற்சி, உள்கட்டமைப்பு, மனித வள ஆற்றல், தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றின் மூலம், தொற்றைக் கண்டறிந்து, அதனைக் கட்டுப்படுத்தி, அதிகபட்சமாக மக்களைக் காப்பாற்றுவதில் முன்னோடியாக இந்தியா திகழ்ந்தது என அவர் கூறினார். உலகின் 18 சதவீத மக்கள் இந்தியாவில் வசித்த போதிலும், மக்களுக்கு மிகப்பெரிய சோகம் ஏற்படாமல் தடுத்து வெற்றியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். உலகின் மிகப் பெரிய தடுப்பூசி போடும் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருவது பற்றியும் அவர் தெரிவித்தார். விமானப் போக்குவரத்து தடைபட்டிருந்த நேரத்திலும், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து விநியோகத்தை இந்தியா மேற்கொண்டது பற்றி அவர் விளக்கினார். இன்று, தடுப்பூசி, அதற்கான கட்டமைப்பு பற்றிய வினாக்களுக்கு ஆன்லைன் மூலம் இந்தியா பதில் அளித்து, பயிற்சி அளித்து வருகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், மேலும் சில தடுப்பூசிகள் விரைவில் வரவுள்ளதாகக் கூறிய அவர், இதன் மூலம் உலகுக்கு பெரிய அளவில் உதவ முடியும் என்றார்.

பொருளாதார சூழலில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி மாநாட்டில் பிரதமர் தெரிவித்தார். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொண்டு, இந்தியா பொருளாதார நடவடிக்கைகளை பராமரித்து வருவதாக அவர் கூறினார். இதன் மூலம் வேலைவாய்ப்புக்கு சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். முதலில் ஒவ்வொருவரது உயிரைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்திய நாங்கள், இப்போது நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார் அவர். இந்தியாவின் தன்னிறைவு நோக்கம், நான்காவது தொழில் புரட்சிக்கு பெரும் வலிமையை அளிக்கும் என்று திரு. மோடி  கூறினார்.

தொடர்பு, தானியங்கி முறை, செயற்கை நுண்ணறிவு அல்லது எந்திர கற்றல், விரைவான தரவுகள் என்ற நான்கு அம்சங்களில் தொழில் புரட்சி 4.0-வுக்கு இந்தியா பாடுபட்டு வருவதாக பிரதமர் கூறினார். தரவு கட்டணங்கள் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும் ஸ்மார்ட் போன்கள் இணைப்பு பரந்து விரிந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு அல்லது எந்திர கற்றல் பிரிவில் இந்தியா சிறந்து விளங்குகிறது. டிஜிடல் கட்டமைப்பு வளர்ந்து வருவதால், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் டிஜிட்டல் தீர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் 130 கோடி பேருக்கும் தனித்துவ ஆதார் எண்கள் உள்ளதாகவும், அவை வங்கி கணக்குகளுடனும், போன்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். யுபிஐ மூலம் டிசம்பரில் மட்டும் 4 டிரில்லியன் ரூபாய்க்கு பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொற்று காலத்தில், 760 மில்லியன் இந்தியர்களுக்கு 1.8 டிரில்லியன் ரூபாய் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பட்டதாக அவர் தெரிவித்தார். மக்களுக்கு தனித்துவ சுகாதார அடையாள அட்டை வழங்குவது குறித்த இயக்கத்தை இந்தியா துவங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

தற்சார்பு இந்தியா இயக்கம், உலக நலனுக்கும், உலக விநியோக சங்கிலிக்கும் பணியாற்ற உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். எப்டிஐ நடைமுறைகளுக்கு உகந்த வரி பரிபாலன முறையை இந்தியா வழங்குகிறது என்று கூறிய  பிரதமர், இந்தியாவின் பிரம்மாண்டமான நுகர்வோர் தளம், உலக பொருளாதாரம் மேலும் வளர உதவும் என்றார்.

தொழில்நுட்பம் என்பது, வாழ்க்கையை சிரமமில்லாமல் நடத்த உதவ வேண்டுமே அல்லாமல், அது ஒரு சிக்கவைக்கும் பொறியாக மாறிவிடக் கூடாது என்று பிரதமர் எச்சரித்தார்நாம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா நெருக்கடி, மனித குலத்தின் மதிப்பை நமக்கு உணர்த்தியுள்ளது எனக்கூறி அவர் உரையை நிறைவு செய்தார்.

வினா, விடை அமர்வின் போது, பிரதமர், சிமென்ஸ் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜோ கேசரிடம் தற்சார்பு இந்தியா இயக்கத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கினார். இந்தியாவை ஏற்றுமதி மையமாக மாற்றுவது இந்த நோக்கத்தின் தலையாய பகுதி என்று அவர் கூறினார். 26 பில்லியன் டாலர் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு உலக நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஏபிபி சிஇஓ ஜோர்ன் ரோசென்கிரனுக்கு திரு. மோடி  அளித்த பதிலில், நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு திட்டங்களைப் பட்டியலிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மாஸ்டர் கார்டு சிஇஓ அஜய் பங்காவுக்கு  அண்மைக் காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பெரும் நிதி சலுகைகள் குறித்து பிரதமர் தெரிவித்தார். சிறு, குறு, நடுத்தர தொழில்களை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். ஐபிஎம்மின் அரவிந்த் கிருஷ்ணாவுக்கு டிஜிடல் இந்தியாவின் சிறப்பு அம்சங்களை பிரதமர் விளக்கினார். நாட்டின் டிஜிடல் தோற்றம் முழுமையாக மாறியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். என்இசி கார்ப்பரேசன் தலைவர் நோபுரோ எண்டோவுக்கு இந்தியாவின் நகரமயமாக்கம் குறித்து பிரதமர் விளக்கினார். சிரமமில்லாத எளிதான வாழ்க்கை முறை, எளிதாக தொழில் புரிவதற்கு ஏற்ற சூழல், பருவநிலை சார்ந்த மேம்பாடு ஆகியவற்றுக்கு உகந்த நீடித்த நகரமயமாக்கத்தில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் கூறினார். இந்த அர்ப்பணிப்பு, 2014 முதல் 2020 வரை நகர்ப்புற இந்தியாவில் 150 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு வழிவகுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.



(Release ID: 1693157) Visitor Counter : 237