சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

மாநில வக்பு வாரிய அதிகாரிகளுக்கான பயிற்சி : அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி உரையாற்றினார்

Posted On: 28 JAN 2021 1:04PM by PIB Chennai

வளர்ச்சியின் அலையை, வீழ்ச்சியின் தடுமாற்றத்தால் தடுத்த நிறுத்த முடியாது. கண்ணியத்துடனான வளர்ச்சி, பாகுபாடற்ற வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாடு புரட்சிகரமான  விளைவுகளை ஏற்படுத்தியதுடன் முதன்மைப் பிரிவு வளர்ச்சியில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் சரிசமமான கூட்டாளியாக செயல்படுவதாக மத்திய சிறுபான்மை  நலத்துறை அமைச்சர் திருமுக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

இன்று, புதுதில்லியில் மாநில வக்பு வாரியங்களின் அதிகாரிகளுக்கு மத்திய வக்பு கவுன்சில் நடத்திய பயிற்சி நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக நாடு முழுவதும் வக்பு சொத்துக்களின் மீது சமூகப் பொருளாதார, கல்வி நடவடிக்கைகள், திறன் மேம்பாட்டுக்காக மிகப்பெரிய அளவில் உள்கட்டமைப்பை உருவாக்கியிருப்பதாகக் கூறினார். வக்பு ஆவணங்கள் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளதன் வாயிலாக வக்பு கொள்ளை கும்பலின் பிடியிலிருந்து வக்பு சொத்துக்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

கடந்த ஆறு வருடங்களில் பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டத்தின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், பெண்கள் விடுதிகள், மருத்துவமனைகள், பல்முனை சமுதாயக் கூடம், பொது சேவை மையங்கள், வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு மையங்கள், இதர அடிப்படை உள்கட்டமைப்புகளை வக்பு நிலங்களில் ஏழை மக்களுக்காக அரசு உருவாக்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இந்த அடிப்படை உள்கட்டமைப்புகள் ஏழைகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு தரமான கல்வியையும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உறுதி செய்திருப்பதாக திரு நக்வி குறிப்பிட்டார்.

சிறுபான்மை சமூக வளர்ச்சிக்காக நாட்டில் வெறும் 90 மாவட்டங்கள் முன்னதாக கண்டறியப்பட்டதாகத் தெரிவித்த திரு நக்வி, நாட்டிலுள்ள 308 மாவட்டங்களிலும் 870 தொகுதிகளிலும் 331 நகரங்களிலும் ஆயிரக்கணக்கான கிராமங்களிலும் சிறுபான்மையினருக்கான வளர்ச்சித் திட்டங்களை அரசு விரிவுபடுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர், லே-கார்கிலில் வக்பு வாரியங்களை அமைப்பதற்கான பணிகள் துவங்கி விட்டதாக திரு நக்வி தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர், லே-கார்கிலில் உள்ள வக்பு  சொத்துக்கள் சமூக நலனிற்காக முறையாகப் பயன்படுத்தப்படுவதை வக்பு வாரியங்கள் உறுதி செய்யும். பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டத்தின்கீழ் ஜம்மு-காஷ்மீர், லே-கார்கிலில் உள்ள வக்பு சொத்துக்களில் சமூக- பொருளாதார, கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான போதிய நிதி உதவியை மத்திய அரசு வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692886

******

(Release ID: 1692886)



(Release ID: 1692925) Visitor Counter : 207