பிரதமர் அலுவலகம்
பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுகள் பெற்றவர்களுடன் பிரதமரின் கலந்துரையாடலின் ஆங்கில சாராம்சம்
Posted On:
25 JAN 2021 9:12PM by PIB Chennai
பிரதமரின் தேசிய சிறார் விருதுகள் பெற்ற உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதலாக, நீங்கள், உங்கள் பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் என எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்திருப்பீர்கள். அதே போன்று நானும் உங்களைச் சந்திக்க மிக்க ஆவலுடன் இருந்தேன். ஆனால் கொரோனா காரணத்தினால் நாம் மெய்நிகர் நிகழ்ச்சியின் மூலமாகச் சந்திக்கிறோம்.
அன்புள்ள குழந்தைகளே
நீங்கள் தற்போது பெற்றுள்ள விருதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால், இது கொரோனா காலத்தின் போது நீங்கள் ஆற்றிய பணிக்காக வழங்கப்படும் விருதாகும். இவ்வளவு இளம் பருவத்தில் நீங்கள் ஆற்றியுள்ள பணி மிகவும் வியக்கத்தக்கது. எதிர்காலத்தில் நீங்கள் விளையாட்டு வீரராக, அறிவியலாளராக, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, அரசியல் தலைவராக வரும்போது இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைவதை அனைவரும் காண்பர். உங்கள் அனைவரது சாதனைகளையும் விளக்கும் காணொளி ஒன்று இங்கு காண்பிக்கப்பட்டது. மும்பையைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயனின் சாதனையைப் பற்றி நான் அறிவேன். 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் நான் காம்யா குறித்து ஒருமுறை குறிப்பிட்டுள்ளேன்.. நான் காம்யாவிடம் ஒரு வினா எழுப்ப விரும்புகிறேன்.
வினா: காம்யா, நீ எதுவும் செய்யாமல் இருப்பாய் என்று நான் நினைக்கவில்லை. தற்போது நீ எந்தெந்த மலைகளை எல்லாம் ஏறி வெற்றி பெற்றுள்ளாய்? சமீபகாலமாக நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அல்லது கொரோனா காரணமாக ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா?
விடை: ஐயா, கொரோனா காரணமாக நாடு முழுவதும் எல்லோருக்கும் சில பிரச்னைகள் உள்ளன. ஆனால் நீங்கள் கூறியது போல, நாம் சும்மா இருந்து விட முடியாது. கொரோனாவிற்குப் பின் நாம் வலுவுடன் மீண்டு வர வேண்டும். எனவே கொரோனா காலத்தின்போது நான் என் பயிற்சியையும், இதர பணிகளையும் வழக்கம்போல் தொடர்ந்தேன். தற்போது ஜம்மு காஷ்மீரின் குல்மார்கில் எங்கள் பயிற்சியைத் தொடர்கிறோம். வட அமெரிக்காவில் உள்ள டெனாலி மலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஏறவிருக்கிறேன். அதற்காகப் பயிற்சி எடுத்து வருகிறேன்.
வினா: நீங்கள் இப்போது பாரமுல்லாவில் இருக்கிறீர்களா?
விடை: ஆம் ஐயா. அலுவலகத்தினர் கடந்த மூன்று நாட்களாக 24 மணி நேரமும் பணியாற்றி எங்களுக்கு உதவி புரிந்தார்கள் அதனால்தான் எங்களால் பாரமுல்லாவுக்கு வந்து உங்களைச் சந்திக்க முடிந்தது.
வினா: வேறு யார் யார் உங்களுடன் இருக்கிறார்கள்? அவர்களை அறிமுகப்படுத்துங்கள்
விடை: ஐயா என்னுடைய பெற்றோர்
தந்தை: வணக்கம்
பிரதமர் நரேந்திர மோடி: உங்களுக்கு எனது பாராட்டுக்கள். நீங்கள் உங்கள் மகளுக்கு ஊக்கமளித்து, அவளுக்கு உதவி செய்திருக்கிறீர்கள். இந்தப் பெற்றோருக்கு எனது வணக்கம்.
வினா. நீங்கள் மலை ஏறுகிறீர்கள்… உலகம் முழுவதும் சுற்றி வருகிறீர்கள். நீங்கள் எவ்வாறு இந்த ஆண்டை செலவழித்தீர்கள்? கொரோனா காரணமாக எல்லாமே மூடப்பட்டிருந்ததே?
விடை: நான் கொரோனா காலத்திலும் வாய்ப்பு இருந்ததைப் பார்த்தேன்.
வினா: அதாவது ஒரு நெருக்கடி காலத்தையும் நீங்கள் ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொண்டீர்கள்...
விடை: ஆமாம் ஐயா
வினா: விளக்கமாகக் கூறுங்கள்
விடை: இப்போது என்னால் மலை ஏற முடியாது ஆனால் மற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும் என்று நான் நினைத்தேன். அதனால் பல பள்ளிகளிலும், அமைப்புகளிலும் இணையவழிக் கருத்தரங்குகளை நடத்துகிறேன். எனது குறிக்கோள் குறித்தும் அவர்களிடம் பேசுகிறேன்.
வினா: நீங்கள் உடற்பயிற்சிக்கும் ஏதாவது செய்தாக வேண்டுமே…
விடை: நாங்கள் ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங் பயிற்சி செய்தாக வேண்டும். ஆனால் முதல்முறையாக பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது எங்களுக்கு இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நாங்கள் மும்பை வந்த பிறகு, நாங்கள் மும்பையில் எங்கள் வீட்டின் இருபத்தோரு மாடிக் கட்டிடத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவோம். வார விடுமுறை நாட்களில் சஹ்யாத்ரி பகுதியில் ட்ரெக்கிங் செல்வோம்.
வினா: நீங்கள் மும்பையின் குளிர்காலம் பற்றி அறிந்திருக்க மாட்டீர்கள்… பாரமுல்லா மிகவும் குளிராக இருக்கும்.
விடை: ஆமாம் ஐயா
மாண்புமிகு பிரதமரின் குறிப்பு: கொரோனா எல்லோரையும் பாதித்துள்ளது. நம் நாட்டின் எதிர்காலத் தலைமுறையான, இப்போதைய குழந்தைகள் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பெரும் பங்கு வகித்துள்ளனர். முதலில் இருபது வினாடிகளுக்கு கைகளைக் கழுவ வேண்டும் என்பதை, குழந்தைகள் பின்பற்றினார்கள். அதன்பிறகு சமூக ஊடகங்களில், குழந்தைகள், கொரோனாவுக்கு எதிரான வழிமுறைகளை கூறத் தொடங்கினார்கள். இப்போது குழந்தைகள் இந்த விருதுகளைப் பெறுகிறார்கள் குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ளும் கலாச்சாரம் நம்முடைய கலாச்சாரம். “எங்கள் குழந்தைகள் சொல்லிவிட்டார்கள் என்றால் நாங்கள் அதை கண்டிப்பாகச் செய்வோம்” என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். தூய்மை இந்தியா இயக்கம் அப்படித்தான் குழந்தைகளால் எடுத்துக் கூறப்பட்டது. குழந்தைகளுடைய தொடர்பு இருந்ததால், அந்த இயக்கம் வெற்றி அடைகிறது. காம்யாவிற்கும், அவரது பெற்றோருக்கும், பயிற்சியாளர்களுக்கும், அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். உங்களது அடுத்தடுத்த முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அடுத்து, விளையாட்டுத் துறையில் மிகச் சிறந்த சாதனை புரிந்த ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த சவிதா குமாரியிடம் பேசுவோம்.
வினா: உங்களுக்கு எப்படி வில்வித்தை அல்லது துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் ஏற்பட்டது? இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி உதித்தது? குடும்பத்தினரின் ஆதரவு எப்படி கிடைத்தது? உங்களது வெற்றிக்கதை நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஊக்கமளிப்பதாக அமையும், கூறுங்கள்.
விடை: நான் படித்த பள்ளி கஸ்தூரிபா காந்தி மகளிர் பள்ளி. அங்குதான் எனக்கு வில்வித்தையில் ஆர்வம் ஏற்பட்டது.
வினா: நீங்கள் நாட்டுக்காக பதக்கங்களை வென்று வரத் தொடங்கி உள்ளீர்கள். என்னுடைய பாராட்டுக்கள். உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?
விடை: நான் சர்வதேச தங்கப்பதக்கத்தை வெல்ல வேண்டும். தேசியகீதம் இசைக்கப்படும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
வினா: அருமை. உங்களுடன் யார் இருக்கிறார்கள்?
விடை: என் பெற்றோர் இருக்கிறார்கள்.
வினா: சரி. அவர்கள் விளையாடி இருக்கிறார்களா? உங்கள் தந்தை ஏதேனும் விளையாட்டில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறாரா? இல்லையா? சரி. நீங்கள்தான் முதலில் தொடங்கினீர்கள்…
விடை: ஆமாம் ஐயா.
வினா: நீங்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது உங்கள் பெற்றோர் கவலைப்படுவதில்லையா….
விடை: ஐயா எங்களுடைய பயிற்சியாளர் எங்களோடு துணையாக வருவார்
வினா: சரி
மாண்புமிகு பிரதமரின் குறிப்பு: நீங்கள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்ல வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் நீங்கள் ஊக்கமளிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஜார்க்கண்ட் மாநிலப் பெண் குழந்தைகள், விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குகிறார்கள். சிறிய கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் வரும் உங்களைப் போன்றவர்கள், நாட்டின் பெயரை உலகிற்கு அறியச் செய்கிறார்கள். சவிதா உங்களுக்கு வாழ்த்துக்கள்.
சவிதா: நன்றி ஐயா
பிரதமர் மோடி: மணிப்பூரிலிருந்து குமாரி நவீஷ் கீஷம் தன்னுடைய மிகச்சிறந்த சித்திரக்கலைக்காக விருது பெற்றுள்ளார். தேசிய சிறார் விருதுகள் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது.
வினா: நவீஷ் நீங்கள் மிக அழகாக சித்திரம் தீட்டியிருக்கிறீர்கள்… வடகிழக்குப் பகுதி வண்ணமயமான பகுதியாகும். நீங்கள் சுற்றுச்சூழல் மற்றும் பசுமை தொடர்பான சித்திரங்கள் தீட்டுகிறீர்கள். ஏன் இந்த வகையான சித்திரங்களே நீங்கள் தீட்டுகிறீர்கள்?
விடை: ஐயா மதிய வணக்கம். உங்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது, உண்மையிலேயே கௌரவமானதாகும். என்னுடைய பெயர் வனீஷ். நம்முடைய சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் அசுத்தம் அடைந்து வருகிறது இம்பால் பகுதியில் நிறைய மாசு உள்ளது. இங்கு நிறைய மரக்கன்றுகள் நட்டு, நம்முடைய சுற்றுச்சூழல், செடிக் கொடிகள், விலங்குகள் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நம்முடைய வனப் பகுதிகளையும் பாதுகாக்க விரும்புகிறேன். இந்தச் செய்தியை மக்களுக்கு பரவச் செய்ய வேண்டும். ஒரு ஓவியனாக என்னால் இதைச் செய்ய முடியும். எனவே சுற்றுச்சூழல் தொடர்பான சித்திரங்கள் தீட்டுவது எனக்கு விருப்பமானதாக உள்ளது.
வினா: உங்கள் குடும்பத்தில் வேறு யாரேனும் சித்திரம் தீட்டுவார்களா? தாய், தந்தை, அண்ணன், மாமா அல்லது வேறு யாராவது…
விடை: இல்லை ஐயா. என்னுடைய தந்தை ஒரு வியாபாரி. தாய் இல்லத்தரசி. நான் மட்டும்தான் ஓவியக் கலைஞர்.
வினா: உங்களுடைய பெற்றோர் உங்களுடன் இருக்கிறார்களா?
விடை: இருக்கிறார்கள்
வினா: உங்களை அவர்கள் திட்டுவார்களா? ஏன் எப்போது பார்த்தாலும் ஓவியம் வரைந்து கொண்டே இருக்கிறாய்? நீ ஏன் படிக்கக் கூடாது? நீ ஏன் சமைக்க கூடாது? வீட்டு வேலை செய்யக்கூடாது என்றெல்லாம் அவர்கள் உங்களைத் திட்டுவார்களா?
விடை: இல்லை ஐயா. அவர்கள் எனக்கு மிகவும் ஆதரவு தருகிறார்கள்.
பிரதமர்: அப்படியென்றால் நீ மிகவும் அதிர்ஷ்டசாலி. நீங்கள் மிகவும் இளம் பருவத்தில் உள்ளீர்கள். உங்கள் எண்ணம் மிகப் பெரியதாக உள்ளது. ஓவியம் தவிர வேறு பொழுதுபோக்கு என்ன?
விடை: ஐயா எனக்கு பாடுவது பிடிக்கும். தோட்டக் கலையும் பிடிக்கும்.
மாண்புமிகு பிரதமரின் குறிப்பு: நவீஷ், நான் மணிப்பூருக்கு பலமுறை வந்துள்ளேன். அங்குள்ள இயற்கை என்னை வெகுவாக ஈர்க்கிறது. வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒவ்வொருவரும் இயற்கையைப் பாதுகாப்பவர்களாக உள்ளனர். இது மிகச்சிறந்த கலாச்சாரமாகும்.
வினா: நீங்கள் பாடுவீர்கள் என்று குறிப்பிட்டீர்கள். ஏதாவது பாட முடியுமா?
விடை: ஆமாம் ஐயா. நான் மிகப்பெரிய பாடகர் அல்ல ஆனாலும் எங்களின் நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பாடுகிறேன்.
பிரதமர்: அற்புதமாக உள்ளது. நீங்கள் பாட்டுத் துறையிலும் ஏதாவது செய்ய வேண்டும். எனக்கு கர்நாடக சங்கீதம் பற்றித் தெரியாது. உங்கள் பாடல் கேட்பதற்கு அருமையாக இருந்தது. என்னுடைய ஆசிகள் பல.
நண்பர்களே,
நம்நாட்டுக் குழந்தைகள், பல துறைகளில் மிகுந்த திறமை உடையவர்களாக இருக்கிறார்கள். கர்நாடகத்தைச் சேர்ந்த ராகேஷ் கிருஷ்ணா, விவசாயம் தொடர்பான புதுமையான கண்டுபிடிப்புக்காக தேசிய விருது பெற்றுள்ளார். ராகேஷ் உங்களுக்கு எனது பாராட்டுக்கள். உங்களுடன் பேச ஆவலாக உள்ளேன்.
வினா: ராகேஷ், உங்களுடைய இளம் வயதிலேயே நீங்கள் விவசாயிகளைப் பற்றி சிந்திக்கிறீர்கள். நீங்கள் அறிவியல் படிக்கும் மாணவர். எனவே ஆராய்ச்சியும் புதுமையும் இயல்பாகவே வந்துவிட்டது. ஆனால் விவசாயிகளுக்காக புதுமையான விஷயங்களைக் கண்டறிவது என்பது சாதாரண விஷயமல்ல. உங்களுக்கு எவ்வாறு இந்தப் பணி மீது ஆர்வம் ஏற்பட்டது?
விடை: ஐயா முதலில் என்னுடைய வணக்கங்கள். ஐயா, எனக்கு எப்போதுமே அறிவியலிலும், புதுமையான கண்டுபிடிப்புகள் மீதும் ஈடுபாடு அதிகம். என்னுடைய தந்தை ஒரு விவசாயி. நானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். இதோ என்னுடைய தாயும், தந்தையும். விவசாய நடைமுறைகளில் பல பிரச்னைகள் இருப்பதை நான் கவனித்தேன். நான் இதற்காக ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. நம்முடைய விவசாயிகளுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனவே தொழில் நுட்பத்தில் புதுமையாக செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். ஐயா, தற்போதுள்ள கருவிகளை விட நான் வடிவமைத்துள்ள கருவிகள் 50% அதிக லாபம் அளிப்பவையாக இருக்கும்.
வினா: நீங்கள் இதை உங்கள் தந்தையுடன் வயல்களில் பரிசோதித்து பார்த்திருக்கிறீர்களா?
விடை: ஆமாம் ஐயா. நாங்கள் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறோம். ஐயா, என்னுடைய கருவி 10 முதல் 15 சதவிகிதம் குறைவான காலத்தில் விவசாயப்பணிகளை முடித்துவிடும். என்னுடைய இயந்திரங்கள் பிற இயந்திரங்களை காட்டிலும் அதிக லாபம் கொடுப்பவையாக உள்ளதாகப் பரிசோதனைகள் காண்பித்துள்ளன. விவசாய வேலை தெரிந்த பணியாளர்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவர்களுக்கான ஊதியம் மிக அதிகமாக உள்ளது. எனவே பல வேலைகளைச் செய்யும் ஒரு இயந்திரத்தை நான் கண்டுபிடித்திருக்கிறேன். இந்த இயந்திரத்தைக் கொண்டு ஒரு விவசாயி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியும். இதன் மூலம் பணமும் நேரமும் மிச்சமாகும்.
வினா: நீங்கள் அதைத் தயாரித்தீர்கள். இதுகுறித்து செய்தித் தாள்களிலும் குறிப்பிடப்பட்டது. மக்கள் இது பற்றி அறிந்து கொண்டனர். உங்களுடைய கருவியை, பெரிய அளவில் தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள், வர்த்தக நிறுவனங்கள் அல்லது புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் வந்தார்களா? இது போன்று ஏதேனும் நடந்ததா?
விடை: ஆமாம் ஐயா, இரண்டு மூன்று நிறுவனங்கள் இது குறித்து விசாரித்தார்கள். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற புதுமைப்படைப்புகள் விழாவில் நான் கலந்து கொண்டபோது, அவர்கள் என்னை சந்தித்தார்கள். ஆனால் என்னுடைய புரோடோடைப் (மாதிரி வடிவம்) இன்னும் தயாராகவில்லை. நான் அது தொடர்பாக இப்போது பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
வினா: சரி உங்களுடைய ஆசிரியர்கள் உங்களுக்கு உதவுகிறார்களா அல்லது ஏதேனும் விஞ்ஞானி அல்லது உலகின் வேறு எங்கிருந்தாவது யாராவது உங்களுக்கு உதவுகிறார்களா? உங்களை ஆன்லைன் மூலமாக யாராவது தொடர்பு கொண்டுள்ளார்களா.
விடை: ஆமாம் ஐயா, என்னுடைய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் எனக்கு ஊக்கமளித்து வழிகாட்டி வருகிறார்கள். கடினமாக உழைக்கும் என்னுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்னுடைய பயணத்தின் ஒவ்வொரு அடிக்கும் ஊக்கமளித்து வருகிறார்கள். நான் இப்போது இவ்வாறு இருப்பதெல்லாம் அவர்களால்தான். அவர்கள் அளித்த ஊக்கத்தினால் தான் நான் இந்த நிலையை அடைந்துள்ளேன்.
பிரதமர்: தாங்கள் விவசாயத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் தங்களுடைய மகனையும் விவசாயத்தில் தொடர்புடையவராக இருக்கச் செய்த உங்களது பெற்றோருக்கு எனது பாராட்டுக்கள். மகனுடைய திறமை விவசாயத்திற்குப் பயன்படுகிறது. உங்களுக்கு பாராட்டுக்கள்.
மாண்புமிகு பிரதமரின் குறிப்பு: ராகேஷ், நவீன விவசாயம் நமது நாட்டின் இன்றைய தேவையாக உள்ளது. இவ்வளவு சிறிய வயதில் இதை நீங்கள் புரிந்து கொண்டது மட்டுமல்லாமல், விவசாயத்தை நவீனமயமாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயன்று வருகிறீர்கள். நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நாம் இப்போது உத்தரப்பிரதேசம், அலிகாரைச் சேர்ந்த மோகமத் ஷதாப்பிடம் பேசுவோம்.
வினா: நீங்கள் அமெரிக்காவுக்கான தூதராக உள்ளீர்கள். நீங்கள் ஸ்காலர்ஷிப் பெற்று அலிகாரில் இருந்து அமெரிக்கா சென்றீர்கள். பல விருதுகளைப் பெற்றிருக்கிறீர்கள். பெண்கள் அதிகாரம் பெறவேண்டும் என்பதற்காகப் பணியாற்றி வருகிறீர்கள். இந்தப் பணிகளை எல்லாம் செய்வதற்கான ஊக்கம் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
விடை: மாண்புமிகு பிரதமர் அவர்களே, நான் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பதினோராம் வகுப்பு மாணவன். எனது பெற்றோர் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களிடமிருந்து எனக்கு இந்த ஊக்கம் கிடைத்தது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பெயருக்குப் பெருமை சேர்க்கவும், நாட்டிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதும் என் விருப்பம்.
வினா: உங்கள் பெற்றோரும் இதுபோல் ஏதேனும் செய்து வருகிறார்களா அல்லது நீங்கள் மட்டும் தானா?
விடை: என்னுடைய பெற்றோர்கள் தொடக்கத்திலிருந்தே எனக்கு ஆதரவளித்து வருகின்றனர். ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் நாட்டிற்கு ஏவுகணை அளித்தார். அதனால் நமது நாடு யாரையும் நம்பி இருக்கவில்லை. அதுபோல நானும் ஏதாவது செய்ய வேண்டும். இந்த நாடு என்னைப் பல்லாண்டுகள் நினைக்க வேண்டும் எனும் வகையில் நான் ஏதேனும் செய்ய வேண்டும் என்று என்னுடைய பெற்றோர்கள் என்னிடம் வலியுறுத்துவார்கள்.
வினா: நீங்கள் ஏற்கனவே இந்தியாவிற்கு நற்பெயரை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறீர்கள். எதிர்காலத்தில் என்ன செய்யவிருக்கிறீர்கள்?
விடை: ஆமாம் ஐயா, நான் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக விரும்புகிறேன். நம்முடைய சமுதாயத்திற்குத் தொண்டாற்ற விரும்புகிறேன். ஐநாவில் மனித உரிமைக்காக நான் பணியாற்ற விரும்புகிறேன். ஐநாவில் என்னுடைய தேசத்தின் கொடி பறக்கவேண்டும்.
மாண்புமிகு பிரதமரின் குறிப்பு: சிறப்பு. இந்தியாவின் புகழைப் பரவச் செய்வதும், இந்தியாவின் அடையாளத்தை வலுப்படுத்துவதும் இன்றைய இளைஞர்களின் பெரும் பொறுப்பாகும். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுக்கு சரியான வழி காட்டிய உங்களுடைய பெற்றோருக்கும் எனது பாராட்டுக்கள். உங்கள் பெற்றோர் கூறியது போல நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள். நாம் இப்போது குஜராத்தைச் சேர்ந்த மந்த்ரா ஜிதேந்திர ஹர்காணியிடம் பேசலாம் நீச்சல் துறையில் சிறந்து விளங்குவதற்காக அவருக்கு தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது
வினா:மந்த்ரா எப்படி இருக்கிறீர்கள்? உங்களுடன் வேறு யார் இருக்கிறார்கள்?
விடை: என்னுடன் என் பெற்றோர்கள் இருக்கிறார்கள்
விடை: மந்த்ரா, நாடு முழுவதும் இன்று உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் கிராமமான வாத்நகரில் ஒரு பெரிய குட்டை இருந்தது நாங்கள் அனைவரும் அதில் நீச்சலடிப்போம். அந்த நீச்சலுக்கும், நீங்கள் இப்போது நீச்சல் அடிப்பதற்கும் பெருமளவில் வேறுபாடு உள்ளது. இதற்கு அதிக அளவிலான பயிற்சியும், முயற்சியும் வேண்டும். நீச்சலில் சாதனை படைக்கும் நீங்கள், பலருக்கும் ஊக்கமளிப்பவராக உள்ளீர்கள். உங்களுடைய குறிக்கோள் என்ன? என்ன செய்ய விரும்புகிறீர்கள்? கூறுங்கள்.
விடை : வணக்கம் ஐயா வணக்கம். உலகிலேயே மிகப்பெரிய நீச்சல் வீரராக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. உங்களைப் போல் உருவாகி நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்பதும் என்னுடைய ஆசை.
வினா:: உங்களுக்கு மிகப்பெரிய கனவு இருக்கிறது. உங்கள் பெற்றோரின் வாழ்க்கையின் கனவாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் மீது இந்த அளவிற்கு கவனம் செலுத்தும் உங்கள் பெற்றோர், மற்ற எல்லாப் பெற்றோர்களுக்கும் ஊக்கமளிப்பவர்களாக உள்ளனர். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். நீங்கள் உற்சாகத்துடன் பேசுகிறீர்கள். இதுவே மிகப்பெரிய விஷயம் உங்களுக்கு எனது பாராட்டுக்கள். உங்களுடைய பயிற்சியாளர் நீங்கள் என்னை சந்திக்க முடியும் என்று உங்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என்று என்னிடம் கூறப்பட்டது. நீங்கள் ஏன் உங்கள் பயிற்சியாளருடன் இதுகுறித்து சண்டையிடவில்லை?
விடை: நீங்கள் இங்கு வாருங்கள் ஐயா நாங்கள் உங்களுக்கு தேநீர் தருகிறோம்
வினா: நான் அடுத்த முறை குஜராத் வரும்போது நீங்கள் என்னை வந்து சந்திப்பீர்களா?
விடை: நிச்சயமாக
வினா: நீங்கள் ராஜ்கோட்டில் காட்டியா நம்கீனுடன் வர வேண்டும். அவர் என்ன கூறுகிறார்?
விடை: ஐயா, நீங்கள் வரும்போது உங்களுக்கு ஜிலேபி காட்டியா நம்கீன் எல்லாம் கொண்டு வருவதாகச் சொல்கிறார். உங்களுக்கு வேண்டுமென்றால் அவர் உங்களுக்கு தேநீரும் தருவார்.
மாண்புமிகு பிரதமரின் குறிப்பு: உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். நீங்கள் எல்லோரும் நல்ல விஷயங்களைக் கூறினீர்கள். அன்புள்ள குழந்தைகளே,
ஒரு சிறு எண்ணம் சரியான செயலுடன் தொடர்பு படுத்தப்பட்டால் மிகப் பிரமாதமான முடிவுகள் கிடைக்கும் என்பதையே இந்தக் கலந்துரையாடலும், இந்த விருதுகளும் காண்பிக்கின்றன. உங்களுடைய விருதுகள் ஒரு சிறு எண்ணத்தின் விளைவாகத் தான் தொடங்கியிருக்கும். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சௌஹர்த்யா டே, இதற்கு ஒரு உதாரணம். அவர் நம் நாட்டின் போற்றத் தகுந்த வரலாற்றையும், புராணக் கதைகளையும் எழுதுகிறார். எழுதவேண்டும் என்ற எண்ணம் உதித்த போது அவர் சும்மா உட்கார்ந்திராமல், எழுதத் தொடங்கினார். அதாவது சரியான செயலைச் செய்தார். இப்போது அதன் பலனை நாம் அனைவரும் பார்க்கிறோம். இதேபோல் அசாமில் இருந்து தனுஜ் சாம்தார்; பீஹாரிலிருந்து ஜோதி குமாரி, மகாராஷ்டிராவிலிருந்து காமேஸ்வர் ஜெகன்நாத் வங்குமாரே ஆகியோர் உள்ளனர். அவர்கள் இரு குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றினார்கள். சிக்கிமிலிருந்து ஆயுஷ் ரஞ்சன், பஞ்சாபிலிருந்து நம்யா ஜோஷி ஆகியோரும் உள்ளனர். “ஒரு இந்தியா உன்னத இந்தியா” என்பதற்கு நீங்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறீர்கள். உங்கள் அனைவருடனும் பேச வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன் ஆனால் நேரமின்மை காரணமாக அது முடியவில்லை.
நண்பர்களே,
சமஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் இருக்கிறது. எந்த ஒரு வேலையையும் கடின உழைப்பின் மூலமாகவும், உற்சாகத்தின் மூலமாகவும் தான் செய்து முடிக்க முடியும், வெறும் கற்பனை செய்து கொள்வதால் மட்டுமே செய்ய முடியாது. உங்கள் அனைவரையும் பார்க்கும் உங்கள் நண்பர்கள், உங்கள் துணைவர்கள், நட்புகள் மற்றும் நாட்டிலுள்ள பிற குழந்தைகள், உங்களைப் பற்றி செய்தித்தாள்களில் படிப்பவர்கள், தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள் ஆகிய அனைவருமே உங்களிடமிருந்து ஊக்கம் பெறுவார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் புதிய உறுதிமொழிகள் எடுத்துக் கொள்வார்கள். அவற்றை அடைவதற்காக தங்களாலான சிறந்த முயற்சிகளை மேற்கொள்வார்கள். அவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஊக்கமடைவார்கள். இது ஒரு தொடராக அமையும்.
அன்புள்ள குழந்தைகளே
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இது உங்கள் வாழ்க்கையின் ஒரு சிறிய மைல்கல்லேயாகும். இந்த வெற்றியில் நீங்கள் தொலைந்து விடாதீர்கள். இங்கிருந்து நீங்கள் செல்கையில் உங்களை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் பெயர் செய்தித்தாள்களில் வரும். உங்களிடம் நேர்காணல் நடத்துவார்கள். இவை எல்லாவற்றுக்கும் உங்கள் செயல்களும் உங்களுடைய உறுதிப்பாடுமே காரணம் என்பதை நீங்கள் எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவே நீங்கள் உங்கள் செயல்களை நிறுத்தி விட்டால் அல்லது அவற்றுடன் தொடர்பற்று போய்விட்டால் இந்தப்பாராட்டுக்களே, உங்களுக்குத் தடைகளாகிவிடும். நீங்கள் இதை விட சிறந்த வெற்றிகளை வாழ்க்கையில் பெற வேண்டும்.
உங்களுக்கு நான் இன்னும் ஒரு ஆலோசனை தருகிறேன். நீங்கள் ஏதாவது ஒன்றைப் படித்துக் கொண்டிருப்பீர்கள் உங்களுக்கு எது விருப்பமாக இருந்தாலும், நீங்கள் ஆண்டொன்றுக்கு ஒரு வாழ்க்கை வரலாறு நூலையாவது படியுங்கள். தத்துவஞானி, எழுத்தாளர், விவசாயி, அறிவியலாளர், விளையாட்டு வீரர் என்று யாருடைய வாழ்க்கை வரலாறாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு ஆண்டில் ஒரு வாழ்க்கை வரலாறாவது படியுங்கள்.
என் இளைய நண்பர்களே,
இவை எல்லாவற்றுக்கும் நீங்கள் முக்கியத்துவம் அளியுங்கள். இன்னும் மூன்று விஷயங்களைக் கூற விரும்புகிறேன்.
முதலில் தொடர்ச்சி என்பதற்கான உறுதிப்பாடு: அதாவது உங்களுடைய பணியை எப்போதும் நீங்கள் நிறுத்தி விடக்கூடாது. தொய்வடைந்து விடக்கூடாது. ஒரு பணி நிறைவடைந்ததும் அதற்கு முன்னரே நீங்கள் அடுத்த பணி என்ன என்பதைப் பற்றி சிந்தித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாவது நாட்டிற்கான உறுதிப்பாடு: நீங்கள் எது செய்தாலும் அது உங்களுக்காக மட்டுமானதாக இருக்கக்கூடாது. என்னுடைய பணி எனக்கான பணி என்ற சிந்தனை நம்மை குறுகிய எல்லைக்குள் வைத்து விடும். நீங்கள் நாட்டுக்காகப் பணியாற்றும் போது நீங்கள் மேலும் நல்ல சிந்தனையுடன் செயல்பட முடியும். உங்களுடைய எண்ணம் மாறுபடும். உங்களுடைய பணிக்காக பலர், ஏதேனும் ஒன்றைச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். இந்த ஆண்டு நமது நாடு எழுபத்தைந்தாவது விடுதலை ஆண்டைக் கொண்டாடவிருக்கிறது நாடு மேலும் முன்னேறுகையில் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும்.
மூன்றாவதாக எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்கான உறுதிப்பாடு
ஒவ்வொரு முறை வெற்றி பெறும் போதும் நீங்கள் மேலும் பணிவுடன் இருக்க வேண்டும் என்று உறுதி மேற்கொள்ளுங்கள். நீங்கள் பணிவுடன் இருந்தால், உங்கள் வெற்றியை உங்களுடன் இணைந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கொண்டாடுவார்கள். இந்த மூன்று விஷயங்களையும் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். குழந்தைகள் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.
நன்றி
பொறுப்பு துறப்பு: இது பிரதமர் உரையின் சற்றேறக்குறைய தோராயமான மொழியாக்கம். பிரதமர் ஹிந்தி மொழியில் உரையாற்றினார்.
******
(Release ID: 1692796)
Visitor Counter : 219
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam