பிரதமர் அலுவலகம்

கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்த தின விழாவில் பிரதமர் கலந்து கொண்டார்


இந்தியாவின் வலிமை மற்றும் உத்வேகத்தின் சின்னம் நேதாஜி ; பிரதமர்

Posted On: 23 JAN 2021 6:46PM by PIB Chennai

கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்த தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். கொல்கத்தா விக்டோரியா நினைவு மண்டபத்தில் நடைபெற்றபராக்கிரம தினவிழாவுக்கு அவர் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், நேதாஜி பற்றிய நிரந்தர கண்காட்சி மற்றும் படக்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். ‘ அமர நூதன் ஜவ்போனோரி தூத்என்ற கருப்பொருளின் அடிப்படையிலான கலை நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, எல்ஜின் சாலையில் உள்ள நேதாஜி சுபாஷ் போசின் இல்லமான , நேதாஜி பவனுக்கு  சென்ற பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்துக்கு சென்றார். அங்கு, ‘’ 21-ம் நூற்றாண்டில் நேதாஜி சுபாஷின் மரபை ஆய்வு செய்தல்’’ என்னும் சர்வதேச மாநாடு மற்றும்  கலைஞர்கள் முகாமுக்கு ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. விக்டோரியா நினைவு மண்டபத்துக்கு செல்வதற்கு முன்பாக,   மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் கலைஞர்களுடன்  பிரதமர் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்திய சுதந்திரக் கனவுக்கு  புதிய வழியைக் காட்டிய பாரத அன்னையின் துணிச்சல்மிக்க மைந்தனின் பிறந்த நாள் இன்று எனக் குறிப்பிட்டார். சுதந்திரத்துக்காக கெஞ்ச மாட்டேன், அதை நான் எடுத்துக் கொள்வேன் என்று முழக்கமிட்டு, உலகின் மிக வலிமையான அதிகாரத்துக்கு சவால் விட்டு, அடிமை இருளைக் கிழித்து, வீர உணர்வை ஊட்டியவரின் பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோம் என அவர் கூறினார்.

நேதாஜியின் இணையற்ற வீரம், நாட்டுக்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற தேசத் தொண்டு ஆகியவற்றைப் போற்றிப் பாராட்டும் வகையில், மத்திய அரசு அவரது பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் பராக்கிரம தினமாகக் கொண்டாட முடிவு செய்தது என பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் வலிமை மற்றும் உத்வேகத்தைப் பறைசாற்றும்  சின்னம்  நேதாஜி  என்று திரு மோடி தெரிவித்தார்.

2018-ம் ஆண்டு அந்தமான் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என அரசு பெயர் சூட்டியது, தமக்கு கிடைத்த பாக்கியம் என பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் உணர்வுகளை மதிக்கும் விதமாக, நேதாஜி தொடர்பான கோப்புகள் அரசால் பகிரங்கமாக வெளியிடப்பட்டன. ஜனவரி 26 அணி வகுப்பில், ஐஎன்ஏ வீரர்கள் பங்கேற்றதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார். நேதாஜியின் ஆசாத்  இந்திய அரசின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டதின் போதுசெங்கோட்டையில் மூவண்ணக் கொடியை பறக்க விட்டதன் மூலம், நேதாஜியின் கனவும் நனவாக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

துணிச்சல் மிக்க தப்பித்தலுக்கு முன்பாக, தமது உறவினர் சிசிர் போசிடம் நேதாஜி கேட்ட கேள்வி பற்றி குறிப்பிட்ட பிரதமர், ‘’ இன்று, ஒவ்வொரு இந்தியரும் தங்கள் கைகளை இதயத்தின் மீது வைத்து, நேதாஜி இருப்பதாக உணர்ந்தால், எனக்காக ஏதாவது செய்வாயாஎன்ற அதே கேள்வியை அவர் கேட்டிருப்பார்; இந்தப்பணி, இந்த இலக்கு, இந்த லட்சியம், என்பது இன்று இந்தியாவைத் தன்னிறைவாக மாற்றுவதுதான். நாட்டு மக்கள், நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்தையும் சேர்ந்த மக்கள் அனைவரும் இதில் அங்கம்’’ எனக் கூறினார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வறுமை, படிப்பறிவின்மை, நோய் போன்ற நாட்டின் பெரும் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடியதாக பிரதமர் குறிப்பிட்டார். வறுமை, படிப்பறிவின்மை, நோய், அறிவியல் உற்பத்தி குறைபாடு ஆகியவை நமது மிகப் பெரும் பிரச்சினைகளாக உள்ளன என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சமுதாயம் ஒன்றுபடுவதுடன், இதற்கான முயற்சிகளை அனைவரும் சேர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

சற்சார்பு இந்தியா கனவுடன், நேதாஜி, சோனார் பாங்களாவின் ( பொன்னான வங்கம்) மிகப் பெரிய தூண்டுகோலாகவும் உள்ளார் என திரு மோடி தெரிவித்தார். நாட்டின் விடுதலையில் நேதாஜி ஆற்றிய பங்கைப் போலவே, தற்சார்பு இந்தியா வேட்கையில் மேற்கு வங்கம் ஆற்ற வேண்டியுள்ளது என பிரதமர் வலியுறுத்தினார். தற்சார்பு இந்தியாவுக்கு, தற்சார்பு வங்கமும், சோனார் பாங்களாவும் முன்னிலை வகிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

**********************



(Release ID: 1691702) Visitor Counter : 207