சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மக்களுக்கு ஏற்ற பொது போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி வலியுறுத்தல்
Posted On:
20 JAN 2021 2:52PM by PIB Chennai
மக்களுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பான, சிக்கனமான, மாசற்ற பொது போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறினார்.
போக்குவரத்து வளர்ச்சிக் கவுன்சிலின் 40வது கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல மாநிலங்களின் போக்குவரத்து அமைச்சர்கள், போக்குவரத்துத் துறை செயலாளர்கள், ஆணையர்கள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் திரு நிதின்கட்கரி பேசியதாவது:
ஒருங்கிணைந்த போக்குவரத்து முறையையும், தேசிய பொது பயண அட்டையையும் அமல்படுத்தி அதன் செயல்பாட்டை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும். பேருந்து இயக்கத்தில் எரிவாயு, மின்சாரம், எத்தனால் கலந்த எரிபொருள் ஆகியவற்றை பயன்படுத்துவதை மாநிலங்கள் அதிகரிக்க வேண்டும்.
லண்டனில் உள்ள பொதுப் போக்குவரத்து போல், நவீனமயமான பொதுப் போக்குவரத்தை உருவாக்கும் மாநிலங்களின் முயற்சிகளுக்கு, மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். மின்சார வாகனங்களுக்கான செலவுகள் எதிர்காலத்தில் குறையும் என்பதால், மத்திய அரசின் ஃபேம்-2 திட்டத்தைப் பயன்படுத்தி, மின்சார வாகனங்களுக்கு மாநிலங்கள் மாற வேண்டும். புத்தாக்கத்தைப் பயன்படுத்தி, பேருந்துகள் மற்றும் பொது போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான், சொந்த வாகனங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து, பொது போக்குவரத்துக்கு மக்கள் மாறுவர்.
இவ்வாறு அமைச்சர் திரு நிதின்கட்கரி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
*******
(Release ID: 1690350)
(Release ID: 1690416)
Visitor Counter : 230