சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் பெற்றுக்கொண்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 3.8 லட்சத்தை தாண்டியது

Posted On: 18 JAN 2021 7:50PM by PIB Chennai

நாடு தழுவிய மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் மூன்றாம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 7,704 அமர்வுகளில் 3,81,305 பயனாளிகளுக்கு இது வரை தடுப்பு மருந்து வழங்கப்பட்டு இருக்கிறதென்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை 5 மணி வரை தடுப்பு மருந்து பெற்றுக்கொண்ட 1,48,226 பயனாளிகளில், தமிழ்நாட்டை சேர்ந்த 7.628 பேரும் அடங்குவர். இறுதி தகவல்கள் இன்று பின்னிரவு கிடைக்கும்.

தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களில் 580 நபர்களுக்கு சிறிய அளவிலான உபாதைகள் இது வரை ஏற்பட்டுள்ளன. இவர்களில் ஏழு பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தில்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று நபர்களில் இரண்டு பேர் வீடு திரும்பியுள்ளனர், ஒருவர் கண்காணிப்பில் உள்ளார்.

 

உத்தரகாண்டில் உபாதைக்கு உள்ளானவரின் உடல்நிலை சீராக உள்ளது. சத்தீஸ்கரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். கர்நாடகாவில் இருவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இது வரை இறந்துள்ள இரண்டு நபர்களில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் இதய நோய் காரணமாக உயிரிழந்தார் எனவும், அவரது மரணத்துக்கு தடுப்பு மருந்து காரணம் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகத்தை சேர்ந்தவரின் உடற்கூறு ஆய்வு இன்று நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1689778

**********************


(Release ID: 1689820) Visitor Counter : 248