பிரதமர் அலுவலகம்

இந்தியா முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 16 JAN 2021 1:11PM by PIB Chennai

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம்! நாடு முழுவதும் இன்றைய நாளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தது. பல மாதங்களாக, குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் என நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும், எப்போது கொரோனா தடுப்பூசி வரும் என்ற ஒரே கேள்வி எழுந்தவண்ணம் இருந்தது. இப்போது மிகக் குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பூசி வந்துவிட்டது. சில நிமிடங்களில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது.  இதற்காக, நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். இன்று, தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஏராளமான விஞ்ஞானிகள் இந்தப் பாராட்டுக்கு உரியவர்கள் ஆவர். கடந்த பல மாதங்களாக, இரவு, பகலாக பாடுபட்டு, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். பொதுவாக, தடுப்பூசி கண்டுபிடிக்க ஆண்டு கணக்கில் ஆவது வழக்கம். ஆனால், இந்தக் குறுகிய காலத்தில், இந்தியாவிலேயே ஒன்றல்ல, இரண்டு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், மேலும் பல தடுப்பூசிகள் தயாரிப்பு பணிகள் பல கட்டங்களில் அதிவேகத்தில் நடந்து வருகிறது. இது இந்தியாவின் வலிமை, அறிவியல் தேர்ச்சி , இந்தியாவின் திறமைக்கு ஒளிரும் உதாரணமாகும். இத்தகைய சாதனைகளுக்கு, தேசிய கவி ராம்தாரி சிங் திங்கர் கூறிய ’’ மனிதர்கள் உறுதியுடன் முனைந்தால், கற்களும் நீராகும்’’ என்பது சான்றாகும்.

சகோதர, சகோதரிகளே, இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் மனித நேயம் உள்ளிட்ட முக்கிய குறிகோள்களின் அடிப்படையிலானது. யாருக்கு முக்கியமாகத் தேவையோ, அவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும். யாருக்கு கொரோனா அபாயம் அதிகம் உள்ளதோ, அவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். நமது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைகளின் சுகாதாரப் பணியாளர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். அவர்கள் அரசு மருத்துவமனைகளை அல்லது தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படும். அதன் பின்னர், அத்தியாவசிய சேவைகள், நாட்டை அல்லது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளவர்கள் தடுப்பூசி பெறுவார்கள். உதாரணமாக, நமது பாதுகாப்பு படையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் முன்னுரிமை பிரிவில் உள்ளனர். நான் முன்பே கூறியதைப் போல, அவர்களது எண்ணிக்கை மூன்று கோடியாகும். இவர்கள் அனைவருக்கும் போடப்படும் தடுப்பூசி செலவை மத்திய அரசே ஏற்கும்.

நண்பர்களே, இந்தத் தடுப்பூசி இயக்கத்திற்கான ஒத்திகைகள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டன. இதற்காக, பிரத்யேகமாக கோ-வின் டிஜிடல் தளம் உருவாக்கப்பட்டு, தடுப்பூசிகளுக்கு பதிவு செய்யப்பட்டது. முதல் தடுப்பூசி போடப்பட்ட பின்னர், இரண்டாவது டோஸ் பெறுவதற்குரிய அறிவிப்பு உங்களது போன்களில் வரும். தடுப்பூசியை இரண்டு டோஸ்களாக போட்டுக் கொள்வது அவசியம் என்பதை நாட்டு மக்கள் அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். முதல் டோஸ் பெற்ற பின்னர், இரண்டாவது முறை தடுப்பூசி போட்டுக் கொள்ள மறக்க வேண்டாம். இரண்டு டோஸ்களுக்கு இடையில் ஒரு மாத இடைவெளி இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இரண்டாவது டோஸ் போடப்பட்ட பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பின்னர்தான், உங்கள் உடலில் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் கவனக்குறைவாக இருக்காதீர்கள், உங்கள் முகக்கவசங்களை அகற்ற வேண்டாம். ஊசி போட்ட பின்னர் இரண்டு கெஜம் இடைவெளியைத் தவறாமல் பின்பற்றவும். கொரோனாவை எதிர்ப்பதில் காட்டிய அதே பொறுமையை, தடுப்பூசி போடுவதிலும் காட்டுமாறு உங்களை அறிவுறுத்துகிறேன்.

நண்பர்களே, வரலாற்றில் முன்பு எப்போதும் இத்தகைய பெரிய அளவிலான தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளப்பட்டதில்லை. முதல் கட்டத்திலேயே, இதன் அளவை நீங்கள் மதிப்பிடலாம். உலகில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள், மூன்று கோடிக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ளன.  முதல் சுற்றிலேயே மூன்று கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.  இரண்டாம் சுற்றில் முதியவர்களுக்கும் இதர நோய்கள்  இருப்பவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் போது இந்த எண்ணிக்கை 30 கோடியாக அதிகரிக்கப்பட வேண்டும். இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகளில் மட்டும்தான் 30 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. எனவே, இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் மிகப்பெரியதாகும். இது இந்தியாவின் வலிமையைப் பறைசாற்றுகிறது. நாட்டு மக்களுக்கு நான் மேலும் ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மீது விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் முழுவதும் திருப்தி அடைந்த பின்னரே அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே, வதந்திகள் மற்றும் தவறான பிரசாரங்களை நாட்டு மக்கள் நம்ப வேண்டாம்.

நண்பர்களே, இந்திய தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், மருத்துவ முறை, இந்திய வழிமுறைகள், நிறுவன நடைமுறைகள் போன்றவற்றின் மீதான தொடர் கண்காணிப்பு ஆவணத்தின் வாயிலாக உலக அளவில் நம்பிக்கை ஏற்பட்டிருகிறது. நமது முந்தைய நடவடிக்கைகள் காரணமாக இந்த நம்பிக்கையை நாம் பெற்றுள்ளோம்.

எனதருமை நாட்டு மக்களே, கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் நம்பிக்கையையும், தன்னிறைவையும் கொண்டதாகும். இந்தக் கடினமான போராட்டத்தில் நமது நம்பிக்கை பலவீனமாகி விடக்கூடாது என்ற உணர்வு ஒவ்வொரு இந்தியரிடமும் காணப்படுகிறது. நெருக்கடி எவ்வளவு பெரிதாக இருந்தாலும், நாட்டு மக்கள் தன்னம்பிக்கையை ஒருபோதும் இழக்கமாட்டார்கள். இந்தியாவை கொரோனா தாக்கியபோது, நாட்டில் ஒரே ஒரு கொரோனா பரிசோதனைக் கூடம் மட்டுமே இருந்தது. இன்று 2300 ஆய்வுக்கூடங்கள் உள்ளன. முகக்கவசங்கள், பிபிஇ உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு முன்பு வெளிநாடுகளையே நம்பி இருந்தோம். இப்போது அவற்றைத் தயாரிப்பதில் தன்னிறைவு பெற்றதுடன் அல்லாமல், அவற்றை ஏற்றுமதியும் செய்து வருகிறோம். இதே நம்பிக்கையின் சக்தியையும், தன்னிறைவையும், தடுப்பூசி போடும் காலத்திலும் நாம் வலுப்படுத்த வேண்டும்.

நண்பர்களே, தலைசிறந்த தெலுங்கு கவிஞரான திரு குரஜதா வெங்கட அப்பாராவ், ஒரு தேசம் என்பது வெறும் மணல், தண்ணீர் மற்றும் கற்களால் ஆனது அல்ல, மக்களாகிய நாம் என்பதற்கு உதாரணமாக செயல்படுவதே தேசமாகும் என்று கூறியுள்ளார். இந்த மனநிலையுடன் இந்தியா கொரோனாவுக்கு எதிராக போராடியது. அதேபோல, நாம் எப்பொழுதும் பிறருக்காக தன்னலமின்றி செயல்பட வேண்டும்.  கடந்த ஆண்டில் இந்தியர்கள் தனி நபர்களாகவும், குடும்பமாகவும், தேசமாகவும் பல்வேறு விஷயங்களைக் கற்றறிந்து,  பொறுமை காத்தனர்.  தொடக்கக் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது நண்பர்களும் உறவினர்களும் சென்று பார்க்க இயலாமல் தவித்தனர்.  இது தொடர்பாக பொதுமக்களிடையே குழப்பம் நிலவியது.  இந்த நோய், தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தி, பாதிக்கப்பட்ட குழந்தைகளை அவர்களது அன்னையர்களிடமிருந்து பிரித்து, வயது முதிர்ந்த பெற்றோர்களை மருத்துவமனைகளில் தனிமையில் இருக்கச் செய்தது.  நோய் தொற்றுக்கு எதிராக போராடி உயிரிழந்த உறவினருக்கும் முறையான பிரியாவிடை வழங்க இயலவில்லை. இதுபோன்ற நினைவுகள் இன்றும் நம்மை கவலையில் ஆழ்த்துகின்றன.

ஆனால், நண்பர்களே, அத்தகைய விரக்தியான சூழலில், தங்களது உயிரையும் பொருட்படுத்தாது நம்மைக் காப்பாற்றியவர்கள் நம்மிடம் நம்பிக்கையை விதைத்தனர். மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்கள், அவசர சிகிச்சை ஊர்தி ஓட்டுனர்கள், ஆஷா பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், காவலர்கள், இதர முன்களப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பிறரைக் காப்பாற்றி, அளப்பரிய தொண்டாற்றினர்.  தங்கள் விருப்பத்தை விட மனிதநேயத்திற்கான கடமைக்கு அவர்கள் முன்னுரிமை வழங்கினார்கள். இவர்களில் ஒரு சிலர் தங்கள் வீடுகளுக்கும் செல்லாமல் கிருமித் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் உயிரையும் நீத்தனர். மனச்சோர்வும், அச்சமும் நிலவிய சூழ்நிலையில் முன்களப் பணியாளர்கள் நம்பிக்கையை ஏற்படுத்தினர். அவர்களது சேவையைப் போற்றும் வகையில் தற்போது முதலாவதாக அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.

சகோதர, சகோதரிகளே, இந்திய தடுப்பு மருந்து நிபுணத்துவம் மற்றும் இந்திய தடுப்பு மருந்து விஞ்ஞானிகள் மீதான இந்த நம்பிக்கை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா  தடுப்பு மருந்தின் மூலம் இன்னும் வலுப்பெறும். இந்திய தடுப்பு மருந்துகள் வெளிநாட்டு தடுப்பு மருந்துகளை விட விலை குறைவாக இருப்பதோடு அவற்றை செலுத்துவதும் எளிதானது.  சில வெளிநாட்டு தடுப்பு மருந்துகளின் விலை ரூபாய் ஐந்தாயிரம் வரை உள்ளது. அதேசமயம் மைனஸ் 70 டிகிரி தட்ப வெப்ப நிலையில் அவற்றை சேமித்து வைக்கவேண்டும். ஆனால், பல்லாண்டுகளாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்திய தடுப்பு மருந்துகள், இந்திய தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு தக்க வகையில் உள்ளதால்,  கொரோனாவுக்கு எதிரான நமது போரில் நாம் வெற்றி அடைவதற்கு இவை உதவும்.

சகோதர, சகோதரிகளே, தடுப்பூசி இயக்கம் மிக நீண்ட காலத்திற்கு நடைபெறும். ஒவ்வொரு தனிநபர்களின் வாழ்க்கையையும் காப்பாற்றும் அரிய வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். எனவே, இந்த இயக்கத்தில் தன்னார்வலர்கள் தாங்களாகவே முன்வந்து இணைகின்றனர். அவர்களை வரவேற்கும் அதே நேரத்தில், இந்த மகத்தான பணியில் மேலும் அதிக அளவில் தன்னார்வலர்கள் பங்கேற்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். நான் முன்பே கூறியபடி, முகக்கவசங்கள், இரண்டு கெஜம் இடைவெளி, தூய்மை ஆகியவை, தடுப்பூசி போடும்போதும், போட்ட பின்னரும் மிகவும் அவசியமாகும். தடுப்பூசி போட்டுக் கொண்டதற்காக, கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் இதர முன்னெச்சரிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று அர்த்தமல்ல.  இப்போது, மருந்தைப் போல ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க புதிய உறுதிமொழியை ஏற்க வேண்டும். இந்த உரையுடன், அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தடுப்பூசி இயக்கத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில், தங்களது பொன்னான நேரத்தை ஆய்வுக்கூடங்களில் செலவழித்து நாட்டுக்கும், மனித குலத்துக்கும் தடுப்பூசிகளை வழங்கியுள்ள விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் ஏராளமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும், உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்! இந்த நெருக்கடியான நிலையில் இருந்து மனித குலம் முழுவதும் விடுபட வேண்டும்! இந்த விருப்பத்துடன் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பலவற்றைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழி பெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

*****



(Release ID: 1689455) Visitor Counter : 883