குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

காதி கிராமத் தொழில் ஆணையம் உருவாக்கிய, நாட்டின் முதல் பசுஞ்சாண வண்ணப்பூச்சு : மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி அறிமுகம்

Posted On: 12 JAN 2021 4:44PM by PIB Chennai

நாட்டின் முதல் பசுஞ்சாண வண்ணப் பூச்சை, காதி கிராமத் தொழில் ஆணையம் உருவாக்கியுள்ளது.  புத்தாக்க முறையில் தயாரிக்கப்பட்ட இந்த வண்ணப் பூச்சை  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  திரு. நிதின் கட்கரி தனது இல்லத்தில் அறிமுகப்படுத்தினார்.  ‘‘காதி பிரகிரிதிக் வண்ணப் பூச்சு’’ என அழைக்கப்படும் இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றது, நச்சுத் தன்மையற்றது. முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த வண்ணப் பூச்சு, பூஞ்சை, நுண்ணுயிர் பாதிப்புக்கு எதிரானது.  பசுஞ் சாணத்தை முக்கிய மூலப் பொருளாக கொண்டு, தயாரிக்கப்பட்ட இந்த மலிவு விலை வண்ணப் பூச்சு, வாடை அற்றது. இதற்கு இந்திய தர நிலை அலுவலகம் சான்றிதழ் அளித்துள்ளது.

இந்த அறிமுக நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி, ‘‘நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு தொழிலாளர்கள் திரும்பும் சூழலில், கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த காதி வண்ணப் பூச்சு அறிமுகம் செய்யப்படுகிறது.  டிஸ்டெம்பர் வண்ணப் பூச்சு லிட்டர் ரூ.120க்கும், எமல்சன் வண்ணப் பூச்சு லிட்டர் ரூ.225க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது மிகப் பெரிய நிறுவனங்களின் வண்ண பூச்சு விலையில் பாதிக்கும் குறைவானது என அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறினார். இந்த வண்ணப் பூச்சு நாடு முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

காதி பிரகிரிதிக் வண்ணப் பூச்சு, டிஸ்டெம்பர் மற்றும் பிளாஸ்டிக் எமல்சன் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இத்திட்டத்தை காதி கிராம தொழில் ஆணையத்தின் தலைவர் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்தார். பின் இதை ஜெய்ப்பூரில் உள்ள காதி ஆணையத்தின் குமரப்பா தேசிய கைவினை காகித மையம் மேம்படுத்தியது.

இந்த காதி வண்ணப் பூச்சுகள், மும்பையில் உள்ள தேசிய பரிசோதனை இல்லம், புது தில்லியில் உள்ள ஸ்ரீராம் தொழில் ஆராய்ச்சி மையம், காஜியாபாத்தில் உள்ள தேசிய பரிசோதனை இல்லம் ஆகியவற்றில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

காதி பிரகிரிதிக் எமல்சன் வண்ண பூச்சு BIS 15489:2013 தரச்சான்றையும், காதி பிரகிரிதிக் டிஸ்டெம்பர்  BIS 428:2013 தரச்சான்றையும் பெற்றுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687954

**************



(Release ID: 1688005) Visitor Counter : 253