நித்தி ஆயோக்
ஸ்டெம், விண்வெளி கல்வியை ஊக்குவிக்க 100 அடல் ஆய்வகங்கள் : இஸ்ரோ திட்டம்
Posted On:
11 JAN 2021 3:58PM by PIB Chennai
நாடு முழுவதும் ஸ்டெம் (அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணிதம்), விண்வெளி கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் சம்பந்தமான புதுமைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 100 அடல் ஆய்வகங்களைப் பயன்படுத்த இருப்பதாக இன்று காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அடல் புதுமை இயக்கம், நிதி ஆயோக், இஸ்ரோ ஆகியவை அறிவித்துள்ளன.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் டாக்டர் ராஜிவ்குமார், “தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்காக இந்திய அரசின் பல்வேறு துறைகளும் அமைச்சகங்களும் செயல்பட்டு வருகின்றன என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நிதி ஆயோக் மற்றும் இஸ்ரோ ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சி இது போன்ற நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
நமது நாட்டின் சிறந்த மனிதர்களிடமிருந்து, இளம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், விண்வெளி வீரர்களும் பல்வேறு அரிய தகவல்களைக் கற்கவும், அவர்கள் சார்ந்துள்ள பள்ளிகள், குடும்பம் மற்றும் சமூகங்களுக்கு முன்மாதிரியாக விளங்கவும் இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இஸ்ரோ தலைவர் டாக்டர் கே சிவன், பாரம்பரிய கல்வி முறையோடு ஒப்பிடுகையில் இந்த புதிய முயற்சி பள்ளி குழந்தைகளிடையே செய்முறைக் கல்வியையும், புதுமையையும் ஊக்குவிக்க உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கல்வி முறை பள்ளி நாட்கள் முதலே மாணவர்களிடையே ஆராய்ச்சி குறித்த எண்ணத்தை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செயற்கைக்கோள்கள் ஏவுவதைக் காண பார்வையாளர்களாக வருகை தருமாறு அடல் ஆய்வகங்களுடன் தொடர்புள்ள மாணவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இளம் மாணவர்கள் தங்களது எண்ணங்களை செயலாக்கவும், புதுமையான திறன்களைக் கற்கவும் அடல் ஆய்வகங்கள் வழிவகை செய்கின்றன.
தொழில் முனைவையும், புதுமையையும் ஊக்குவிக்கும் வகையில் அடல் புதுமை இயக்கம், நிதி ஆயோக் ஆகியவை நாடு முழுவதும் 7000 ஆய்வகங்களை நிறுவி, அதன் வாயிலாக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களிடையே பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவது, புதுமையான எண்ணங்களை புகுத்துவது போன்ற திறன்களை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687635
----
(Release ID: 1687694)