பிரதமர் அலுவலகம்

தரமான பொருட்கள் மீது கவனம் செலுத்தி இதயங்களை வெல்லுங்கள்: பிரதமரின் லிங்க்ட்இன் பதிவு

Posted On: 05 JAN 2021 6:58PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா, தரமான பொருட்களைத் தயாரித்தல், அவற்றை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ள செய்தல் ஆகியவற்றை குறித்து லிங்க்ட்இன் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

அவரது சிந்தனைகளின் எழுத்து வடிவம் பின்வருமாறு:

சில தினங்களுக்கு முன்னர், அளவியல் மாநாட்டில் நான் உரையாற்றிக் கொண்டிருந்தேன்.

விரிவாக விவாதிக்கப்படாவிட்டாலும் இது ஒரு முக்கியமான தலைப்பாகும்.

தற்சார்பு இந்தியாவுக்கும், நமது தொழில் முனைவோரின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அளவியல் எவ்வாறு பங்காற்றலாம் என்பது குறித்தும் என்னுடைய உரையில் நான் பேசினேன்.

திறனின், திறமைகளின் மையமாக இந்தியா உள்ளது.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வெற்றி, நமது இளைஞர்கள் புதுமைகளைப் படைப்பதற்கான பேரவாவைக் காட்டுகிறது.

புதிய பொருட்களும், சேவைகளும் துரிதமாக உருவாக்கப்படுகின்றன.

உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பெரிய சந்தை காத்துக்கொண்டிருக்கிறது.

விலை குறைவான, நீடித்து உழைக்கக்கூடிய, பயன்பாடு மிக்க பொருட்களை உலகம் விரும்புகிறது.

அளவு, தரம் ஆகிய இரண்டு குறிக்கோள்களின் மீது தற்சார்பு இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதிகமாக உற்பத்தி செய்ய நாம் விரும்புகிறோம். அதே சமயம், சிறந்த தரத்திலான பொருட்களைத் தயாரிக்கவும் நாம் விரும்புகிறோம்.

உலக சந்தைகளை வெறுமனே தனது பொருட்களால் நிரப்ப இந்தியா விரும்பவில்லை.

இந்தியப் பொருட்கள், உலகம் முழுவதுமுள்ள மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமென்பதே நமது விருப்பம்.

இந்தியாவில் நாம் உற்பத்தி செய்யும் போது, சர்வதேசத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமில்லாமல், சர்வதேச ஒப்புதலையும் பெற நாம் விரும்புகிறோம்.

நீங்கள் உருவாக்கும் எந்தவொரு பொருளிலும், சேவையிலும் எந்தவொரு குறைபாடும் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

இது குறித்த அதிக விழிப்புணர்வு, தொழில்துறைத் தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள், ஸ்டார்ட் அப் துறையின் இளைஞர்கள், பணியாளர்களிடையே ஏற்கனவே இருப்பதை அவர்களுடனான உரையாடல்களின் போது என்னால் காண முடிகிறது.

இன்றைக்கு, உலகமே நமது சந்தை.

இந்தியர்களுக்கு திறமை உண்டு.

உலகமே நம்பும் நாடாக இந்தியா திகழ்கிறது.

நமது மக்களின் திறனுடனும், நாட்டின் நம்பகத்தன்மையுடனும், உயர் தரத்திலான இந்தியப் பொருட்கள் அதிக தூரங்களைச் சென்றடையும். சர்வதேச வளத்தைப் பெருக்கும் சக்தியான தற்சார்பு இந்தியாவின் அடிப்படைக் கூறுகளுக்கு உண்மையான மரியாதையாக இது இருக்கும்.

**********************



(Release ID: 1686342) Visitor Counter : 188