சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் பட்டமளிப்பு விழாவின் போது டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் உரையாடல்

Posted On: 04 JAN 2021 5:46PM by PIB Chennai

சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்களிடையே அவர்களது பட்டமளிப்பு விழாவின் போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் உரையாற்றினார்.

"இந்த உயர்கல்வி நிறுவனத்தின் 32-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தங்களது பட்டங்களையும், சான்றிதழ்களையும், பதக்கங்களையும் பெறவிருக்கும் அனைவரையும் நான் மனமார வாழ்த்துகிறேன்," என்று தன்னுடைய உரையின் போது அமைச்சர் கூறினார்.

நாட்டின் தலைசிறந்த தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியை கட்டமைத்ததில் பெரும் பங்காற்றிய திரு என் பி வி ராமசாமி உடையாரை டாக்டர் ஹர்ஷ்வர்தன் நினைவுகூர்ந்தார்.

 

இந்த விழாவில் 1266 மாணவர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றனர். ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் பல்வேறு சாதனைகளை பாராட்டிய அமைச்சர், 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய தர வரிசைப் பட்டியலில் அனைத்து பல்கலைக் கழகங்களில் 28-வது இடத்தையும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் பதிமூன்றாவது இடத்தையும், பல் மருத்துவ கல்லூரிகளில் ஏழாவது இடத்தையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது என்று கூறினார். பல்வேறு தொடர் கல்வி அங்கீகாரங்களின் அடிப்படையில் முதலாம் நிலை நிகர்நிலை பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்தை பல்கலைக்கழக மானியக் குழு வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

இந்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை சார்ந்து, பல்நோக்கு நிறுவனமாக இப்பல்கலைக்கழகம் உருவெடுத்து வருவதற்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். தனது சிறப்பம்சங்களின் மூலமாக நாடு முழுவதும் மட்டுமல்லாது உலகெங்கிலும் இருந்து மாணவர்களை இந்நிறுவனம் ஈர்த்து வருகிறது என்று கூறிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், ஆராய்ச்சிக்கு டாக்டர் ராமச்சந்திரா கல்லூரியில் அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவால்  இந்நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து குறிப்பிட்ட அமைச்சர், கொவிட் பெருந்தொற்றின் முக்கியமான கட்டத்தில் நாம் தற்போது இருக்கிறோம் என்றார். இதை நாம் கொண்டாடும் அதே வேளையில், முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், அவசரகால மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட, இந்த காலகட்டத்தில் ஆதரவளித்த அனைவருக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டும் என்றார்.

கடந்த ஒரு வருடத்தில் 75 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு திட்டமிடப்பட்டதாகவும், அவற்றில் 14 தமிழ்நாட்டில் உள்ளதாகவும்  அமைச்சர் கூறினார். பிரதமரின் கனவான தற்சார்பு இந்தியாவைப் பற்றிப் பேசிய அவர், மருத்துவப் பணியாளர்களுக்கு இதில் நிறைய வாய்ப்புகள் உள்ளதாகக் கூறினார்.

ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் திரு வி ஆர் வெங்கடாசலம், இணை வேந்தர் திரு ஆர் வி செங்குட்டுவன், துணைவேந்தர் டாக்டர் பி வி விஜயராகவன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686007

**********************


(Release ID: 1686088)