பிரதமர் அலுவலகம்
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ஐ.ஐ.எம். நிரந்தர வளாகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
02 JAN 2021 2:49PM by PIB Chennai
ஜெய் ஜெகன்னாத்!
ஜெய் மா சாமலேஸ்வரி!
ஒடிசாவின் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் வளமை சேர்க்கட்டும்!!
ஒடிசா ஆளுநர் மாண்புமிகு பேராசிரியர் கணேஷி லால் அவர்களே, முதல்வரும் எனது நண்பருமான திரு. நவீன் பட்நாயக் அவர்களே, மத்திய அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களே, ஒடிசாவின் ரத்தினம் பாய் தர்மேந்திர பிரதான் அவர்களே, திரு. பிரதாப் சந்திர சாரங்கி அவர்களே, ஒடிசா அரசின் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களே, சம்பல்பூர் ஐ.ஐ.எம். தலைவர் திருமதி அருந்ததி பட்டாச்சார்யா, டைரக்டர் பேராசிரியர் மகாதேவ் ஜெய்ஸ்வால் அவர்களே, கல்வி கற்பிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் என் இளம் சகாக்களே!
இன்றைக்கு ஐ.ஐ.எம். வளாகத்துக்கு அடிக்கல் நாட்டுவதன் மூலம், ஒடிசாவில் இளைஞர்களின் திறனுக்குப் புதிய உத்வேகத்துக்கான அடிக்கல்லும் நாட்டப்படுகிறது. ஒடிசாவின் மகத்தான கலாச்சாரம் மற்றும் வளங்களுடன், சம்பல்பூர் ஐ.ஐ.எம். நிரந்தர வளாகம், இந்த மாநிலத்திற்கு உலக மேலாண்மை அரங்கில் புதிய அடையாளத்தை உருவாக்கும். புத்தாண்டின் தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடந்திருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.
நண்பர்களே,
கடந்த சில தசாப்தங்களில், நாட்டில் ஒரு போக்கு இருந்தது. பெருமளவிலான பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே வந்து, நமது மண்ணில் வளர்ச்சி கண்டன. இந்த தசாப்தமும், நூற்றாண்டும், இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களை உருவாக்கும் காலமாக இருக்கப் போகின்றன. தன்னுடைய திறமைகளை உலகிற்குக் காட்டும் சிறந்த காலகட்டமாக இது இருக்கப் போகிறது. இன்றைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், நாளைய பன்னாட்டு நிறுவனங்களாக உருவாகப் போகின்றன. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எந்த நகரங்களில் உருவாகின்றன? இரண்டு அல்லது மூன்றாம் நிலை நகரங்கள் என கூறப்பட்ட நகரங்களில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின்றன. இந்த நிறுவனங்கள், இந்திய இளைஞர்கள் உருவாக்கும் புதிய நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்ல சிறந்த மேலாளர்கள் தேவை. இந்திய நிறுவனங்கள் உச்சத்தை அடைவதற்கு, நாட்டில் புதிதாக உருவாகும் மேலாண்மை நிபுணர்களும், அவர்களின் அனுபவங்களும் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றன.
நண்பர்களே,
கோவிட் நெருக்கடி காலத்திலும், முந்தைய காலங்களைவிட இப்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் யூனிகார்ன் எனப்படும் தனியார் பெருநிறுவனங்கள் தொடங்கப் பட்டிருப்பதாக நான் படித்தேன். இன்றைக்கு, வேளாண்மை முதல் விண்வெளித் துறை வரை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சீர்திருத்தங்கள் செய்திருப்பதால், இன்றைக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் உங்கள் தொழிலை இணைத்துக் கொண்டாக வேண்டும். இந்தியா என்ற பிராண்ட்டுக்கு உலக அளவில் புதிய அடையாளத்தை உருவாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது, குறிப்பாக நம் இளைஞர்களுக்கு இருக்கிறது.
நண்பர்களே,
சம்பல்பூர் ஐ.ஐ.எம். நிலையத்தின் மந்திரம் नवसर्जनम् शुचिता समावेशत्वम्। என்று உள்ளது. அதாவது, புதுமை சிந்தனை, ஒருமைப்பாடு, பங்கேற்பு நிலை என்பது இதன் மந்திரமாக உள்ளது. உங்கள் மேலாண்மைத் திறன்களை இந்த மந்திரங்களுடன் நாட்டுக்கு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். புதிய நிறுவனங்களை ஊக்குவிப்பது மட்டுமின்றி, பங்கேற்பு நிலைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். வளர்ச்சியின் பயணத்தில் விடுபட்டுப் போனவர்களையும் சேர்த்துக் கொள்ளும் வகையில் அது அமைய வேண்டும். ஐ.ஐ.எம். நிரந்தர வளாகம் அமைய உள்ள இடத்தில் ஏற்கெனவே மருத்துவப் பல்கலைக்கழகம், பொறியியல் பல்கலைக்கழகம், வேறு மூன்று பல்கலைக்கழகங்கள், சைனிக் பள்ளி, சி.ஆர்.பி.எப். மற்றும் காவல் துறை பயிற்சி நிலையங்கள் உள்ளன. சம்பல்பூர் பற்றி அதிகம் அறியாதவர்கள், ஐ.ஐ.எம். போன்ற பெருமைக்குரிய நிறுவனங்கள் தொடங்கப்பட்ட பிறகு இந்தப் பகுதி கல்வியில் எவ்வளவு முக்கியமான மையமாக மாறப் போகிறது என்பதைப் பார்க்கப் போகிறார்கள். இந்தப் பகுதி முழுக்கவே ஒரு வகையில் உங்களுக்கு செயல்முறை ஆய்வகமாக இருக்கப் போகிறது என்பது ஐ.ஐ.எம். சம்பல்பூர் மாணவர்கள் மற்றும் தொழில்முறையாளர்களுக்கு முக்கியமான சாதக அம்சமாக இருக்கப் போகிறது.
இயற்கை சூழல் அளவில் பார்த்தால், இந்த இடம் ஒடிசாவின் பெருமையைப் பறைசாற்றுவதாக உள்ளது. ஹிராகுட் அணை இங்கிருந்து அதிக தொலைவு கிடையாது. அணையின் அருகில் உள்ள தேவ்ரிகர் சரணாலயம் விசேஷமானது. வீர சுரேந்திர சாய் அவர்கள் தன் களத்தை உருவாக்கிய புனிதத் தலமும் இங்கே உள்ளது. இந்தப் பகுதியின் சுற்றுலாத் திறனை மேம்படுத்த, மாணவர்களின் சிந்தனைகளும், மேலாண்மைத் திறன்களும் மிகவும் கைகொடுப்பதாக இருக்கும். அதேபோல சம்பல்பூரி ஜவுளிகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெயர் பெற்றுள்ளது. பண்டல்கட் துணிகளும், அதன் பிரத்யேகமான வடிவமைப்பு, நயம், கலையமைப்பு ஆகியவை மிகவும் விசேஷமானவை. அதேபோல, இந்தப் பகுதியில் கைவினைப் பொருட்களும் பிரசித்தி பெற்றுள்ளன. வெள்ளி சரிகைகள், கற்சிலைகள், மரச் சிற்பங்கள், பித்தளை வேலைப்பாடுகள் புகழ் பெற்றவை. மலைப் பகுதியைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகள் அதில் நல்ல திறமைசாலிகளாக உள்ளனர். சம்பல்பூரின் பொருட்களை உள்ளூரில் தயாரித்து, உள்நாட்டில் பிரலமாக்குவதில் ஐ.ஐ.எம். மாணவர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
நண்பர்களே,
சம்பல்பூர் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகள் கனிமங்களுக்குப் பெயர் பெற்றிருப்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். உயர் தரத்திலான இரும்புத் தாது, பாக்சைட், குரோமைட், மக்னீசிய தாது, சுண்ணாம்பு தாது, தங்கம், ரத்தினக் கற்கள், வைரம் போன்றவை இயற்கை வளத்தை பல மடங்கு அதிகரிப்பவையாக உள்ளன. நாட்டின் இயற்கை வளங்களை இன்னும் நல்ல முறையில் மேலாண்மை செய்து, இந்தப் பகுதியையும், மக்களையும் எப்படி மேம்படுத்துவது என்று நீங்கள் திட்டங்கள் உருவாக்க வேண்டும்.
நண்பர்களே,
நான் உங்களிடம் சில உதாரணங்கள் மட்டுமே கூறியிருக்கிறேன். ஒடிசாவில் என்ன இல்லை? - வன வளம், கனிமங்கள், ரங்கபதி இசை, மலைவாழ் மக்கள் கலை மற்றும் கைவினைத் திறன், கங்காதர் மெகர் கவிதைகள் என பலவும் உள்ளன. சம்பல்பூரி ஜவுளி அல்லது கட்டாக்கின் சரிகை சித்திரவேலைகளுக்கு உலக அளவில் புதிய அடையாளத்தை உருவாக்க உங்களில் பலர் திட்டங்களை உருவாக்குவீர்கள், இங்கு சுற்றுலாவை மேம்படுத்த முனைவீர்கள். அது தற்சார்பு இந்தியா திட்டத்திற்குப் புதிய உத்வேகம் மற்றும் புதிய உச்சத்தைத் தருவது மட்டுமின்றி, ஒடிசாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான முயற்சிகளாகவும் இருக்கும்.
நண்பர்களே,
உலக அளவிலான தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்களை உள்ளூரில் தயாரிக்கத் தேவையான புதிய மற்றும் புதுமை சிந்தனைத் தீர்வுகளை ஐ.ஐ.எம்.-ன் இளம் சகாக்கள் உருவாக்குவீர்கள். நாட்டின் தற்சார்பு நோக்கிய பயணத்தில், உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் சர்வதேச கூட்டு முயற்சிகளுக்கு இடையில் பாலமாக ஐ.ஐ.எம்.கள் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உங்கள் கல்வி நிலையத்தில் படித்து முடித்த பெருமளவிலானவர்கள், உலகின் மூலை முடுக்கெல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் இந்த முயற்சியில் உதவிகரமாக இருப்பார்கள். 2014 வரையில் நமது நாட்டில் 13 ஐ.ஐ.எம்.கள் இருந்தன. இப்போது 20 ஐ.ஐ.எம்.கள் உள்ளன. இவ்வளவு அதிகமான திறமைசாலிகள் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு உதவியாக இருப்பார்கள்.
நண்பர்களே,
உலகில் புதிய வாய்ப்புகள் உருவாகும்போது, மேலாண்மையில் புதிய சவால்களும் உருவாகும். இந்தச் சவால்களையும் நீங்கள் புரிந்து கொண்டாக வேண்டும். உதாரணமாக, முப்பரிமாண பிரிண்டிங் நுட்பம் ஒட்டுமொத்த உற்பத்திப் பொருளாதாரத்தை மாற்றுவதாக உள்ளது. சென்னை அருகே இரண்டடுக்கு கட்டடம் முழுவதையும் முப்பரிமாண பிரிண்டாக கடந்த மாதம் ஒரு நிறுவனம் தயாரித்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உற்பத்தியின் முறைகள் மாறும்போது, அவற்றுக்குத் தேவையான பொருட்கள், வழங்கல் சங்கிலித் தொடர் ஏற்பாடுகளும் மாறும். அதேபோல, பூகோள ரீதியிலான தடைகள் எதுவும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்பங்கள் உருவாகி வருகின்றன. 20 ஆம் நூற்றாண்டில் தடையற்ற வர்த்தகத்துக்கு விமானப் போக்குவரத்து வசதி உதவியது என்றால், 21 ஆம் நூற்றாண்டில் தொழில் செய்யும் நிலையில் டிஜிட்டல் தொடர்பு வசதிகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன. எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற சூழ்நிலை உருவானதை அடுத்து உலக அளவில் கிராமங்களும், பணியிடங்களாக மாறியுள்ளன. இந்த வகையில் கடந்த சில மாதங்களில் இந்தியாவில், தேவையான அனைத்து சீர்திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. காலத்துடன் கைகோர்த்து நடப்பது என்பது மட்டுமின்றி, அதற்கு முன்னதாக செல்ல வேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்கிறது.
நண்பர்களே,
வேலை செய்யும் முறைகள் மாறியுள்ள நிலையில், மேலாண்மைத் திறன்களின் தேவைகளும் மாறுகின்றன. இப்போது கூட்டு முயற்சியாக, புதுமை சந்தையாக, நிலை மாற்றம் உள்ள மேலாண்மை முறை தேவைப்படுகிறது. உயர் பதவியில் இருந்து கீழ் பதவியில் இருப்பவரைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை முறை மாறுகிறது. கூட்டாக சேர்ந்து செயல்படுவது மேலாளர்களுக்கு முக்கியமானதாக உள்ளது. அதற்கான வழிமுறைகள் நம்மிடம் உள்ளன. எனவே மனிதவள மேலாண்மை இப்போது அதிகம் தேவைப்படும் நிலையில், தொழில்நுட்ப ரீதியிலான மேலாண்மையும் அதே அளவுக்கு தேவைப்படுகிறது. நாட்டில் உள்ள ஐ.ஐ.எம்.கள் மற்றும் இதர தொழில் மேலாண்மைக் கல்வி நிலையங்களும் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த கொரோனா காலத்தில் தொழில்நுட்ப உதவியுடன் அணியாக எப்படி செயல்பட்டோம், 130 கோடி மக்களைப் பாதுகாக்க எப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, பொறுப்புகளை எடுத்துக் கொண்டு, கூட்டு முயற்சிகள் மேற்கொண்டு, பொது மக்கள் பங்கேற்புடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இவை குறித்து ஆய்வு செய்து, அந்த தரவுகள் ஆவணங்களாக்கப்பட வேண்டும். 130 கோடி மக்கள் கொண்ட இந்த நாட்டில் அவ்வப்போது புதுமை சிந்தனை அணுகுமுறைகள் எப்படி உருவாயின? குறுகிய காலத்தில் இந்தியா எப்படி திறன்களை வளர்த்துக் கொண்டது? மேலாண்மை கல்விக்கு இதில் சிறந்த பாடம் உள்ளது. கோவிட் காலத்தில் தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக்கான பி.பி.இ. உடைகள், முகக் கவச உறைகள், வென்டிலேட்டர்கள் தயாரிப்பில் நிரந்தரத் தீர்வுகள் உருவாக்கப் பட்டுள்ளன.
நண்பர்களே,
குறுகிய காலத்துக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அணுகுமுறைகளை உருவாக்கும் பாரம்பரியம் நம்மிடம் உள்ளது. இப்போது அதில் இருந்து நாம் வளர்ந்திருக்கிறோம். உடனடி தீர்வுகளாக மட்டுமின்றி, நீண்டகால நோக்கிலும் தீர்வுகளை உருவாக்க நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம். இதில் இருந்து மிக நல்ல மேலாண்மைப் பாடத்தைக் கற்க முடியும். நம்மிடையே அருந்ததி அவர்கள் இருக்கிறார். திட்டமிடல், அமல் செய்தல் மற்றும் மேலாண்மை நடைமுறைகளை அவர் நேரில் பார்த்திருக்கிறார். நாட்டில் ஏழைகளுக்கு ஜன் தன் கணக்குகள் தொடங்குவதை சிறப்பாக செய்ததை அவர் பார்த்துள்ளார். ஏனெனில் அவர் அப்போது வங்கித் துறையில் பொறுப்பாளராக இருந்தார். வங்கிக்கே சென்றிருக்காத ஏழை மக்களுக்கு 40 கோடிக்கும் அதிகமான கணக்குகளைத் தொடங்குவது எளிதானது கிடையாது. பெரிய நிறுவனங்களை நிர்வகிப்பது மட்டுமே மேலாண்மை கிடையாது என்பதால் இவற்றையெல்லாம் நான் கூறுகிறேன். இந்தியா போன்ற நாடுகளில், வாழ்க்கையை முழுமையாக உணர்வுடன் அணுகுவது தான் உண்மையான மேலாண்மையாக இருக்க முடியும். இன்னொரு உதாரணத்தை நான் கூறுகிறேன். இது முக்கியமானது. ஏனெனில் அதில் ஒடிசாவின் பெருமைக்குரிய தர்மேந்திர பிரதான் அவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளார்.
நண்பர்களே,
நமது நாடு சுதந்திரம் பெற்று சுமார் 10 ஆண்டுகள் கழித்து சமையல் எரிவாயு வந்துவிட்டது. ஆனால் பிறகு வந்த காலத்தில் சமையல் எரிவாயு என்பது ஆடம்பரமான விஷயமாக ஆகிவிட்டது. பணக்காரர்களின் பெருமிதத்திற்கு உரியதாக அது இருந்தது. சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதற்கு மக்கள் பல முறை அலைய வேண்டியிருந்தது. அப்போதும் இணைப்பு கிடைக்காது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 2014 வரையில், நாட்டில் 55 சதவீதம் குடும்பங்கள் மட்டுமே எல்.பி.ஜி. இணைப்பு வைத்திருந்தார்கள். அணுகுமுறையில், நிரந்தரத் தீர்வுக்கான நோக்கம் இல்லாதிருந்தால் இப்படித்தான் இருக்கும். 60 ஆண்டுகளில் 55 சதவீதம் குடும்பங்கள் மட்டுமே எல்.பி.ஜி. பயன்படுத்தி வந்தன. இந்த வேகத்தில் நாட்டின் முன்னேற்றம் இருந்தால், எல்லோருக்கும் சமையல் எரிவாயு இணைப்பு கிடைப்பதற்கு அரை நூற்றாண்டு கடந்திருக்கும். 2014ல் எங்கள் அரசு உருவானதும், நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த முடிவு செய்தோம். இப்போது நாட்டில் எல்.பி.ஜி. இணைப்புள்ள குடும்பங்கள் எவ்வளவு தெரியுமா? 98 சதவீதத்துக்கும் அதிகம்! புதிதாக ஒரு விஷயத்தில் சிறிது நகரத் தொடங்கினால், வேலையை எளிதாக முடிக்கலாம் என்பதை மேலாண்மையில் உள்ள நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். நூறு சதவீதம் குடும்பங்களுக்கும் இந்த இணைப்பு கிடைக்க வேண்டும் என்பதில் தான் உண்மையான சவால் இருக்கிறது.
நண்பர்களே,
நாங்கள் இதை எப்படி சாதித்தோம் என்பதுதான் கேள்வி. உங்களைப் போன்ற மேலாண்மைத் துறை முன்னோடிகளுக்கு இது மிக நல்ல ஆய்வாக இருக்கும்.
நண்பர்களே,
பிரச்சினைகளை ஒருபுறமும், நிரந்தரத் தீர்வை மறுபுறமும் வைத்து யோசித்தோம். புதிய விநியோகஸ்தர்களை உருவாக்குவது தான் இதில் பிரச்சினையாக இருந்தது. நாங்கள் புதிதாக 10 ஆயிரம் விநியோகஸ்தர்களுக்கு அனுமதி கொடுத்தோம். சிலிண்டர்களில் எல்.பி.ஜி. நிரப்பும் பாட்டிலிங் மையங்கள் அடுத்த பிரச்சினையாக இருந்தது. நாடு முழுக்க இதற்கான வசதிகளை உருவாக்கி, திறன்களை அதிகரித்தோம். இறக்குமதி முனையத்தின் திறன் அடுத்த பிரச்சினையாக இருந்தது. அதையும் சரி செய்தோம். பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, குழாய் வழியே எல்.பி.ஜி. எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தோம். இப்போதும் அந்தப் பணிகள் தொடர்கின்றன. ஏழை பயனாளிகளைத் தேர்வு செய்ய வேண்டும். முழுக்க முழுக்க வெளிப்படையாக பயனாளிகளைத் தேர்வு செய்து உஜ்வாலா திட்டத்தைத் தொடங்கினோம்.
நண்பர்களே,
நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் மேற்கொண்ட முயற்சிகளால் இப்போது நாட்டில் 28 கோடிக்கும் அதிகமான எல்.பி.ஜி. இணைப்புகள் உள்ளன. 2014க்கு முன்னர் நாட்டில் 14 கோடி எரிவாயு இணைப்புகள் இருந்தன. நினைத்துப் பாருங்கள், 60 ஆண்டுகளில் 14 கோடி எரிவாயு இணைப்புகள்! கடந்த ஆறு ஆண்டுகளில் நாங்கள் 14 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகளைக் கொடுத்துள்ளோம். இப்போது சமையல் எரிவாயுவுக்காக மக்கள் அலைய வேண்டியதில்லை. ஒடிசாவிலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 50 லட்சம் ஏழைக் குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளன. இத் திட்டத்தின் கீழ், திறன்களை மேம்படுத்தினோம். ஒடிசாவில் 19 மாவட்டங்களில் நகர அளவிலான சமையல் எரிவாயு விநியோகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
நண்பர்களே,
நாட்டின் தேவைகளைப் புரிந்து கொண்டு, சவால்களையும் புரிந்து கொண்டால், நீங்கள் நல்ல மேலாளர்களாக உருவாகி நல்ல தீர்வுகளைத் தருவீர்கள் என்பதால்தான் இவ்வளவு உதாரணங்களை நான் விளக்கி இருக்கிறேன். உயர் கல்வி நிறுவனங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதுடன் மட்டுமின்றி, வாய்ப்புகளை பரவலாக்கிட வேண்டியதும் முக்கியமானது. அங்கு பயிலும் மாணவர்கள் பெரும் பங்கு ஆற்ற வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கையில், பரந்த நோக்கிலான, பன்முகத் தன்மை கொண்ட, முழுமையான அணுகுமுறைகள் உள்ளன. தொழற்கல்வியில் உள்ள தடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நாட்டின் வளர்ச்சியில் எல்லோரும் பிரதான பங்கு பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதுவும் பங்கேற்பு வகையைச் சேர்ந்தது தான். இந்த தொலைநோக்கை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். தற்சார்பு இந்தியா என்ற முயற்சியை வெற்றிகரமாக ஆக்கிட சம்பல்பூர் ஐ.ஐ.எம். முயற்சிகள் சிறப்பாக இருக்கும். இந்த நல்வாழ்த்துக்களுடன், உங்களுக்கு மிக்க நன்றி.
நமஸ்காரம்.
---------
(Release ID: 1685848)
Visitor Counter : 240
Read this release in:
English
,
Hindi
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam