சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா சவாலை எதிர்கொள்ளும் வகையில் 2020-இல் உள்நாட்டு மருத்துவ உபகரணங்கள் தொழில் வலுப்பெற்ற விதம்

Posted On: 31 DEC 2020 1:24PM by PIB Chennai

2020-ஆம் ஆண்டு நாட்டின் மருத்துவ உபகரணங்கள் தொழில் மாபெரும் சாதனைகளைச் செய்தது. இறக்குமதி செய்யப்பட்ட சுவாசக்கருவிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் என்-95 முகக்கவசங்களை பெருந்தொற்றின் தொடக்க காலத்தில் இந்தியா கிட்டத்தட்ட முழுவதுமாக நம்பி இருந்தது.

கொரோனாவின் சவால்களை ஆரம்பக் கட்டத்திலேயே புரிந்து கொண்ட மத்திய அரசு, தேவையை விட அதிகமான மருத்துவ உபகரணங்கள் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதை வெற்றிகரமாக உறுதி செய்தது.

2020 பிப்ரவரி - மார்ச் மாதங்களின் போது வெண்டிலேட்டர் எனப்படும் சுவாசக் கருவியின் தோராய விலை ரூ.15 இலட்சம் ஆகும். கிட்டத்தட்ட அனைத்துக் கருவிகளும் இறக்குமதி தான் செய்யப்பட்டன.

இந்திய நிறுவனங்கள் சுவாசக்கருவிகளை உற்பத்தி செய்யத் தொடங்கிய பின்னர் அவற்றின் தற்போதைய விலை ரூ.2 முதல் 10 இலட்சம் வரையில் மட்டுமே உள்ளது. கடந்த 9 மாதங்களில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 36,433 சுவாசக் கருவிகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உறுதி செய்தது.

கோவிட்டுக்கு முந்தைய காலம் வரை நாட்டில் உள்ள அனைத்து பொது சுகாதார மையங்களும் சுமார் 16,000 சுவாசக்கருவிகள் மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 36,433 சுவாசக்கருவிகள் அனைத்து பொது சுகாதார நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சுவாசக்கருவிகளுக்கான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சுவாசக்கருவிகள் தற்போது ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தனிநபர் பாதுகாப்புக் கவசத்தைப் பொருத்தவரை, உலகத்திலேயே இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா தற்போது உருவெடுத்துள்ளது. ஒரு நாளைக்கு பத்து இலட்சத்துக்கும் அதிகமான தனிநபர் பாதுகாப்புக் கவசங்கள் நமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அவை பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

முகக்கவசங்களைப் பொறுத்தவரை மார்ச் 2020 வரை நமது நாட்டில் என்-95 முகக்கவசங்களை மூன்று நிறுவனங்கள் மட்டுமே விநியோகித்தன. ஆனால் தற்போது 3 ஆயிரத்துக்கும் அதிகமான உற்பத்தியாளர்கள் அரசின் மின் வணிக தளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

இவ்வாறாக, மத்திய குடும்ப நல மற்றும் சுகாதார அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக பல்வேறு மருத்துவ உபகரணங்களின் உற்பத்தியில் 2020-ஆம் ஆண்டு நாடு சிறந்து விளங்கியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685028

**********************



(Release ID: 1685144) Visitor Counter : 222