குடியரசுத் தலைவர் செயலகம்

இடையூறாகக் கருதப்படும் தொழில்நுட்ப வசதிகள் தான் இந்த ஆண்டு பெரும் இடர்ப்பாட்டை நாம் எதிர்கொள்ள காரணியாக இருந்துள்ளது: குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த்


டிஜிட்டல் இந்தியா 2020 விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 30 DEC 2020 1:11PM by PIB Chennai

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சமூக உறவு, பொருளாதார நடவடிக்கைகள், சுகாதாரம், கல்வி மற்றும் பல்வேறு அம்சங்கள் உலகளவில் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளன. இந்தச் சூழலிலும் வாழ்க்கை நின்றுபோய் விடாமல் தொடர்ந்து நடைபெற தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பம் பெருமளவில் உதவுகின்றது. இடையூறாகக் கருதப்படும் தொழில்நுட்ப வசதிகள் தான் இந்த வருடம் பெரும் இடர்ப்பாட்டை நாம் எதிர்கொள்ள காரணியாக இருந்துள்ளது என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

 

டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2020 நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக இன்று கலந்துகொண்டு பேசிய அவர் இதைத் தெரிவித்தார். நடமாட்டதுக்கான கட்டுப்பாடுகளால் எழுந்த தாக்கத்தைக் குறைப்பதற்கு இந்தியா தன்னை தயார்படுத்திக் கொண்டதோடு, நெருக்கடியை வாய்ப்புகளாக மாற்றிக்கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியது என்றும் அண்மைக் காலங்களில் நாட்டின் மின்னணு கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டதால் இது சாத்தியமானது என்றும் அவர் மேலும் கூறினார்.

 

இணையவழி வகுப்புகளினால் கல்வியும் தடைபடாமல் தொடர்ந்து வழங்கப்படுகிறது என்றும், நீதித்துறை முதல் தொலை மருத்துவ சேவை வரை ஏராளமான துறைகள் காணொலிக்கு மாறியதாகவும் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். குடிமக்களுக்கு பல்வேறு சேவைகளை அரசு தொடர்ந்து வழங்கி, பொருளாதாரத்தை சீர்படுத்தியதிலும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்ததாக அவர் தெரிவித்தார்.

பெருந்தொற்றினால் ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதில் மின்னணு போராளிகள் சிறப்பான உதவிகளை வழங்கியதாகக் கூறி, அவர்களை திரு ராம் நாத் கோவிந்த் வெகுவாகப் பாராட்டினார். தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பின்னணியில் ஆரோக்கிய சேது, மின்னணு அலுவலகம், காணொலி மாநாடுகள் போன்ற தளங்கள் பெருந்தொற்றின் தாக்கத்தை பெருமளவு குறைத்தது என்றுஅவர் தெரிவித்தார். குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நேரடித் தொடர்பில்லாத மற்றும் காகிதங்களற்ற அலுவலக சேவைகளை வழங்குவதற்கு புதுமையான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684583

-----

 

 



(Release ID: 1684713) Visitor Counter : 249