சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பின்பற்றப்பட வேண்டிய சிறந்த சேவைகள் குறித்த ஏழாவது தேசிய உச்சிமாநாட்டை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்
Posted On:
28 DEC 2020 5:05PM by PIB Chennai
பின்பற்றப்பட வேண்டிய சிறந்த சேவைகள் குறித்த ஏழாவது தேசிய உச்சி மாநாட்டை காணொலி வாயிலாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் இன்று தொடங்கி வைத்தார். புதிய சுகாதார மேலாண்மைத் தகவல் அமைப்பு முறையையும், காசநோய் மற்றும் தொழுநோய் கண்காணிப்பு குறித்த வழிகாட்டியையும் நிகழ்ச்சியின் போது அமைச்சர் வெளியிட்டார்.
இந்தியாவின் பொது சுகாதார முறையின் பின்பற்றப்பட வேண்டிய சிறந்த சேவைகள், புதிய கண்டுபிடிப்புகள் குறித்த தேசிய உச்சி மாநாட்டை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் நடத்துகிறது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன், “இந்தியாவில் சுகாதார முறையை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலான புதுமையான ஒருங்கிணைந்த வழிமுறைகள் மீது கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். 2020-ஆம் ஆண்டு 210 புதிய முன்முயற்சிகளை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தேசிய சுகாதாரப் புதுமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தன. மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதும் அதே வேளையில் நீடித்த பொது சுகாதார முறையை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்”, என்று தெரிவித்தார்.
புதிய திட்டங்கள் மற்றும் வழிமுறைகளின் மூலம் நமது சுகாதார முறையை வலுப்படுத்துவது தொடர்பாக பேசிய அமைச்சர், “பொது சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் புதுமையான முறைகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. கோவிட்-19-இன் போது மேற்கொள்ளப்பட்ட பணிகள், புதுமைகளை உருவாக்கவும் புதிய திட்டங்களில் ஈடுபடவும் எங்களை ஊக்குவித்துள்ளன. முழு உடல் கவசங்கள், செயற்கை சுவாசக் கருவிகள், முகக்கவசங்கள், தடுப்புமருந்து போன்றவற்றில் நாம் தற்சார்பு அடைய பெருந்தொற்று காரணமாக இருந்துள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் சஞ்சீவனி மின்னணு தளத்தின் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இது, ஒருங்கிணைந்த முயற்சிகள் வாயிலான புதிய அணுகுமுறையின் பலனாகும்”, என்று அவர் குறிப்பிட்டார்.
மின்னணு மாற்றத்தின் வாயிலாக உலகளாவிய சுகாதாரச் சேவையை குறைந்த செலவில் குறுகிய காலத்தில் எளிதில் பெறக்கூடிய உள்ளடக்கிய பாதுகாப்பான முறையில் வழங்கும் தேசிய மின்னணு சுகாதாரச் சூழலியலை உருவாக்க நமக்குக் காரணியாக இருந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அரசு மேற்கொண்ட பல்வேறு நீடித்த நடவடிக்கைகளின் மூலம் காசநோய்க்கான பரிசோதனை, சிகிச்சை முதலியவற்றில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடி வரும் 2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடைவதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நோயைக் குறுகிய காலத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை முறையாக வழங்கி நோய்ப் பரவல் சங்கிலியைத் தகர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684130
------
(Release ID: 1684162)
Visitor Counter : 288