பிரதமர் அலுவலகம்
ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்து ஆற்றிய உரை
Posted On:
26 DEC 2020 4:21PM by PIB Chennai
ஜம்மு-காஷ்மீரில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் பயனடைந்த இருவர் தங்களது அனுபவத்தைப் பகிர்ந்ததை கேட்கும் வாய்ப்பை இன்று நான் பெற்றேன். இதுபோன்ற வார்த்தைகள் என்னை ஆசீர்வதிப்பதாகவே உணர்கிறேன். இந்த ஆசீர்வாதங்கள் நான் மென்மேலும் ஏழைகளுக்காக உழைப்பதற்கான வலிமையை எனக்கு அளிக்கின்றன. இது போன்ற வளர்ச்சித் திட்டங்களின் பலன்கள் ஏழை மக்களையும் நாட்டின் மூலை முடுக்கில் வசிப்போரையும் சென்றடைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இன்று இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்கள், சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள், சகோதரர் ஜிதேந்திர சிங் அவர்கள், ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்கா அவர்கள் மற்றும் எனது பாராளுமன்ற சகாக்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரதிநிதிகள் மற்றும் எனது அருமை சகோதர சகோதரிகள் பங்கேற்றுள்ளீர்கள்.
இன்றைய தினம் ஜம்மு-காஷ்மீருக்கு வரலாற்று சிறப்புமிக்க தினமாகும். ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களும் ஆயுஷ்மான் திட்டத்தின் பலன்களைப் பெறவிருக்கிறார்கள். செஹத் திட்டம் ஒரு மிகப்பெரிய நடவடிக்கை. மக்களின் மேம்பாட்டிற்காக ஜம்மு காஷ்மீர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஜம்மு-காஷ்மீரின் மீது திரு. அடல் பிகாரி வாஜ்பாய் சிறப்பு கவனம் செலுத்தினார். மனித நேயம், ஜனநாயகம், காஷ்மீர் மக்களுக்கான அடையாளம் ஆகிய கொள்கைகள் தொடர்பாக நாம் செயல்புரிய அவர் தொடர்ந்து நம்மை வழி நடத்தினார்.
நண்பர்களே,
ஜனநாயகத்தை வலுப்படுத்தி வருவதற்காக ஜம்மு காஷ்மீர் மக்களை நான் பாராட்டுகிறேன். மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. கடுமையான குளிர், கோவிட் பெருந்தொற்றையும் பொருட்படுத்தாமல் தேர்தலின் அனைத்துக் கட்டங்களிலும் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்றதை நான் கண்டேன். பல மணி நேரங்கள் அவர்கள் வரிசையில் காத்திருந்தனர். ஜம்மு-காஷ்மீரின் ஒவ்வொரு வாக்காளரின் முகத்திலும் வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பை நான் கண்டேன். ஜம்மு-காஷ்மீரின் ஒவ்வொரு வாக்காளரின் கண்களிலும் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையும் நான் கண்டேன்.
நண்பர்களே,
இந்த தேர்தல்களில் ஜனநாயகத்தின் வேர்களை வலுப்படுத்துவதற்கு ஜம்மு-காஷ்மீரின் மக்கள் மிகவும் உழைத்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் படையினரால் இந்த தேர்தல்கள் வெளிப்படையாகவும் அனைத்துக் கட்சியினரும் பாராட்டும் வகையிலும் அமைந்திருந்தது.
நண்பர்களே,
ஜம்மு-காஷ்மீரின் இந்த மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை, ஒரு வகையில் மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யம் குறித்த அவரது கனவையொத்து இருக்கிறது. இந்த தேர்தல்கள் மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கி உள்ளதோடு ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து ராஜ் முறை சீரான முறையில் இயங்க உதவியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தையும் ஜனநாயக நிறுவனங்களையும் வலுப்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக இரவும் பகலும் பாடுபட்டுள்ளோம். ஒரு காலத்தில் நாங்கள் ஜம்மு-காஷ்மீர் அரசில் ஓர் அங்கமாக இருந்தோம். துணை முதலமைச்சராக, அமைச்சர்களாக நாங்கள் இருந்த போதும் பதவியின் சுகத்தை நாங்கள் துறந்தோம். பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் கிராமங்களில் வாழும் குடிமக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இந்த விஷயத்தில் ஆட்சியில் இருந்து நாங்கள் வெளியேறி உங்களுடன் வீதியில் இறங்கினோம். ஒன்றியம், பஞ்சாயத்து மற்றும் மாவட்ட அளவில் நீங்கள் தேர்ந்தெடுத்தோர் உங்களுடனேயே இருப்பதுடன் பெரும்பாலோனோர் வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தேர்தல்கள் நாட்டின் ஜனநாயகத்தின் வளத்தையும் எடுத்துக்காட்டியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஓராண்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு கிராமங்களின் எதிர்காலத்தை மக்கள் தேர்ந்தெடுக்கும் உரிமைகள் அவர்களுக்குக் கிடைத்துள்ளன. டெல்லியைச் சேர்ந்த சில மக்கள் தொடர்ந்து மோடியை விமர்சித்தும், களங்கம் ஏற்படுத்தி வருவதுடன் ஜனநாயகம் குறித்து தினமும் எனக்கு பாடமும் நடத்துகிறார்கள். அவர்களுக்கு நான் ஓர் கண்ணாடியைக் காட்ட விரும்புகிறேன். ஜம்மு காஷ்மீரை பாருங்கள்; குறுகிய காலத்தில் பஞ்சாயத்து ராஜின் மூன்று அடுக்கு முறையில் இயங்க துவங்கியிருக்கிறது. மறுபுறத்தில் உச்சநீதி மன்றம் ஆணை பிறப்பித்த போதும் புதுச்சேரியில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடைபெறவில்லை. எனக்கு தினமும் ஜனநாயகம் கற்றுக் கொடுப்பவர்களது கட்சி தான் அங்கு ஆட்சியில் உள்ளது.
நண்பர்களே,
புதுச்சேரியில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது. சில அரசியல் கட்சிகள் வாய்மொழியாக பேசுவதற்கும் அதற்கு முக்கியத்துவம் அளித்து அதனை செயல்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை இது காட்டுகிறது. பல ஆண்டுகளாக புதுச்சேரியில் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெறவில்லை.
சகோதர சகோதரிகளே,
கிராமங்களின் வளர்ச்சியில் கிராம மக்களுக்கு முக்கிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. திட்டமிடுதலில் தொடங்கி செயல்படுத்துவது வரை பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படுகிறது. ஏழை மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் பஞ்சாயத்துகளின் பொறுப்புணர்ச்சி அதிகரித்திருப்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த பலன்கள் ஜம்மு காஷ்மீரையும் அடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்துள்ளது. திறந்த வெளியில் மலம் கழிக்காத நிலை இந்த கிராமங்களில் ஏற்பட்டுள்ளன. பல்வேறு சவால்களுக்கு இடையேயும் திரு மனோஜின் தலைமையில் கிராமங்களில் விரைவாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதன் வாயிலாக ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் உத்வேகம் கிடைக்கும்.
நண்பர்களே,
ஜம்மு காஷ்மீர் மக்களின் வளர்ச்சி, அரசின் மிகப் பெரும் முன்னுரிமைகளுள் ஒன்று. பெண்களுக்கு அதிகாரமளித்தல், இளைஞர்களுக்கு வாய்ப்புகள், தலித்களின் முன்னேற்றம், ஏமாற்றப்பட்டும் சுரண்டப்படும் வந்த மக்களின் நலன்கள், அரசியலமைப்பு, மக்களின் அடிப்படை உரிமைகள் சம்பந்தமான கேள்விகள் இப்படி எதுவாயினும் மக்களின் நல்வாழ்விற்காக எமது அரசு முடிவுகளை எடுத்து வருகிறது.
நண்பர்களே,
பெருந்தொற்று காலத்திலும் ஜம்மு-காஷ்மீரில் சுமார் 18 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீரில் 10 இலட்சத்திற்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. கழிவறைகளைக் கட்டுவது மட்டும் இதன் நோக்கம் அல்ல, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் இதன் முக்கியமான குறிக்கோளாகும். சுகாதாரமான கழிவறைகளின் வாயிலாக ஏராளமான நோய்கள் பரவாமல் தடுக்கப்பட்டிருக்கின்றன. இதனுடன் ஜம்மு-காஷ்மீர் ஆயுஷ்மான் பாரத்- செஹத் திட்டம் இன்று துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 6 இலட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. செஹத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு சுமார் 21 இலட்சம் குடும்பங்களும் அதே பயனை அடையும்.
நண்பர்களே,
கடந்த இரண்டு ஆண்டுகளில் 1.5 கோடிக்கும் அதிகமான ஏழை மக்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். சுமார் ஒரு இலட்சம் ஏழை நோயாளிகள், ரூபாய் 5 இலட்சம் வரையில் இலவச மருத்துவ சிகிச்சைகளை பெற்றுள்ளனர். புற்று நோய், இதயம் மற்றும் எலும்பு சார்ந்த நோய்களுக்கு அதிக அளவில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
நண்பர்களே,
இந்தத் திட்டத்தின் மற்றொரு பயனும் குறிப்பிடத்தக்கது. உங்களுக்கான சிகிச்சைகள் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படாது. நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு அவற்றின் மூலமும் உங்களுக்கு சிகிச்சை வழங்கப்படும். உதாரணத்திற்கு, நீங்கள் மும்பைக்கு சென்றிருக்கும் போது உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் இந்த அட்டையை நீங்கள் அங்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.அதே போல் சென்னையில் உள்ள மருத்துவமனைகளிலும் இதனைப் பயன்படுத்தி இலவச சேவைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் கொல்கத்தாவிற்கு சென்றிருந்தால் அந்த அரசு இந்த திட்டத்தில் சேராததால் இதன் பலன்களை அங்கு நீங்கள் பெற முடியாது. செஹத் திட்டத்தின் கீழ் 24,000-கும் அதிகமான மருத்துவமனைகளில் நீங்கள் சிகிச்சை பெறலாம். எந்த இடையூறும் தரகும் சிபாரிசும் ஊழலும் இல்லாமல் திட்டத்தின் அட்டையை காண்பித்து சிகிச்சையை எங்கு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.
நண்பர்களே,
நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஜம்மு காஷ்மீர் தற்போது சென்று கொண்டிருக்கிறது. கொரோனா காலத்தில் இந்த மாநிலத்தில் நடைபெற்ற பணிகள் மிகவும் பாராட்டுக்குரியவை. 3,000-க்கும் அதிகமான மருத்துவர்கள், 14000-க்கும் அதிகமான துணை மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர் இரவும் பகலும் பணியில் ஈடுபட்டதாக நான் அறிகிறேன். மேலும் குறுகிய காலத்தில் மாநில மருத்துவமனைகளை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு நீங்கள் தயார் செய்தீர்கள். இதுபோன்ற நடவடிக்கைகளால் ஏராளமான உயிர்களையும் நோயாளிகளையும் நம்மால் காப்பாற்ற முடிந்தது.
சகோதர சகோதரிகளே,
ஜம்மு காஷ்மீரின் சுகாதாரத்துறைக்கும் தற்போது அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1100-க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை உருவாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 800-க்கும் அதிகமான மையங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் 2 புற்றுநோய் நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. ஜம்மு-காஷ்மீரின் இளைஞர்களுக்கு மருத்துவ மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஜம்மு-காஷ்மீரில் 7 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்பிபிஎஸ் இடங்கள் இரட்டிப்பாகும். கூடுதலாக 15 புதிய செவிலியர் கல்லூரிகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதன் வாயிலாக இளைஞர்களுக்கு மேலும் புதிய வாய்ப்புகள் வழங்கப்படும். மேலும் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் இந்திய மேலாண்மைக் கழகம் ஆகியவற்றை ஜம்முவில் உருவாக்குவதன் மூலம் இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வி வழங்கப்படும்.
சகோதர சகோதரிகளே,
உள்கட்டமைப்பு துறையில் கடந்த 2-3 ஆண்டுகளில் நீர் மின்சாரத்தின் உற்பத்தியை 3000 மெகாவாட் கூடுதலாக உருவாக்கியுள்ளோம்.பிரதமரின் வளர்ச்சி திட்டத் தொகுப்பின் கீழ் செயல்படும் திட்டப் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. பணிஹல் சுரங்கத்தின் பணிகளை அடுத்த ஆண்டு நிறைவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நண்பர்களே கொரோனா பெருந்தொற்றால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் கூட ஆப்பிள் பயிரிடுபவர்களுக்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படாதவாறு அரசு பார்த்துக் கொண்டது. சந்தைப்படுத்துதல் உதவித் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தை கூட்டமைப்பு மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்பட்டன. வாங்கப்பட்ட ஆப்பிள்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டது. இவ்வாறாக 12 லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
நண்பர்களே,
எல்லை தாண்டிய தாக்குதல் தொடர்ந்து மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக எல்லைப்பகுதிகளில் தடுப்புகள் அமைக்கும் பணி விரைவாக செயல்பட்டு வருகின்றது. சம்பா, பூஞ்ச், ஜம்மு, கத்துவா, ரஜோரி போன்ற முக்கிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான தடுப்புகள் மேற்கொள்ளப்படுவதோடு, மக்களின் பாதுகாப்பிற்காக ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
நாட்டில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் எல்லைப் பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்தத் தவறிவிட்டனர். அவர்கள் ஆட்சியால் ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு ஆகிய பகுதிகளின் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது. வாழ்வின் அடிப்படைத் தேவைகளும், கண்ணியமான வாழ்விற்கு தேவையானவையும் சாமானிய மக்களை சென்றடையவில்லை. இது போன்ற எண்ணங்கள் நாட்டின் சமமான வளர்ச்சிக்கு என்றும் வழிவகுக்காது. இது போன்ற எதிர்மறை எண்ணங்களுக்கு நாட்டில் எப்போதும் இடமில்லை- அது எல்லைப் பகுதிக்கு அருகில் இருந்தாலும் சரி தூரத்தில் இருந்தாலும் சரி இந்தியாவின் எந்த ஒரு பகுதியும் வளர்ச்சியின் பயன்கள் கிடைக்கப்பெறாமல் இருக்கக்கூடாது என்பதில் எமது அரசு உறுதியாக உள்ளது. இது போன்ற பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் வாயிலாக இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை வலுவடையும்.
குறிப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கமான உத்தேச மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் நிகழ்த்தியிருந்தார்.
*****************
(Release ID: 1684135)
Visitor Counter : 230
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam