விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயிகள் பயனடைவதற்காகவும் மற்றும் இந்திய வேளாண்மையை வலுப்படுத்துவதற்காகவும் வேளாண் சட்டங்கள் வகுக்கப்பட்டன: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

Posted On: 22 DEC 2020 4:29PM by PIB Chennai

விவசாயிகள் பயனடைவதற்காகவும் மற்றும் இந்திய வேளாண்மையை வலுப்படுத்துவதற்காகவும் வேளாண் சட்டங்கள் வகுக்கப்பட்டன என தெற்கு ஆசிய நாடுகளின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

தெற்கு ஆசிய நாடுகளின் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:

வேளாண்துறை, இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க கவனம் செலுத்தப்படுகிறது.  விவசாயிகள் உற்பத்தி வர்த்தக மற்றும் வணிக(ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, விலை உறுதி மீதான விவசாயிகள் ஒப்பந்தம்(அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய மூன்றும் நாட்டில் இதுவரையுள்ள மிகப் பெரிய வேளாண் சீர்திருத்தங்களாகும். இந்த சீர்திருத்தங்கள்  விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதலுக்கான சுதந்திரத்தை அளிக்கும், தொழில் முனைவை ஊக்குவிக்கும், தொழில்நுட்பத்தை அணுக உதவும் மற்றும் இவைகள் விவசாயத்தை மாற்றம் அடையச் செய்யும். மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருக்கும் இந்தியா, அனைவருக்குமான வளர்ச்சி என்ற அடிப்படையில் செயல்படுகிறது.

இந்த புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்கும். புதிய சூழலில், இந்திய வேளாண்மை சிறப்படைய வழிவகுக்கும். இந்த சீர்திருத்தம் கொண்டு வந்தது திடீர் முடிவு அல்ல. நிபுணர்களின் 20 ஆண்டு கால ஆலோசனைகள், பல குழுக்களின் பரிந்துரை அடிப்படையில் இந்த சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

குறைந்தபட்ச ஆதரவு விலை, அரசு நிர்வாக முடிவு. அது தொடரும்.  இந்த விஷயத்தில் மோடி அரசு தனது உறுதியை தெளிவாக கூறியுள்ளது. குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. அரசு கொள்முதல், 2020-21 காரிப் பருவ கொள்முதல் உட்பட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தி செலவை  விட 1.5 மடங்கு கூடுதல் விலை கிடைக்கும் விதத்தில் வகுக்கப்பட்ட விதிமுறை அடிப்படையில்   குறைந்தபட்ச ஆதரவு விலையை மோடி அரசு அறிவித்தது. இது வழங்கப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதி.

கடந்த 6 ஆண்டுகளாக, விவசாயிகள் நலனுக்காக, வேளாண்துறை அமைச்சகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அபரிமிதமான உணவு தானிய உற்பத்தி வரை இந்திய வேளாண்மை மிக நீண்ட தூரத்தைக் கடந்து வந்துள்ளது

உணவு பற்றாக்குறை முதல் அபரிமிதமான உணவு தானிய உற்பத்தி வரை இந்திய வேளாண்மை மிக நீண்ட தூரத்தைக் கடந்து வந்துள்ளது.  அதனால் பொருளாதாரத்தின் முதுகெலும்பான வோளாண் துறை மேம்பாட்டுக்கு, விவசாயிகளுக்கு சாதகமான சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை அரசு உணர்ந்துள்ளது. வேளாண்துறையை பலப்படுத்த, விவசாயிகளுக்கு சாதகமான கொள்கைகளை உருவாக்க ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.  பிரதமரின் கிசான் சம்மான் நிதியை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக வழங்கப்படுகின்றன.  இத்திட்டத்தில் இதுவரை 10.59 கோடி விவசாயிகளுக்கு ரூ.95,979 கோடி வழங்கப்பட்டுள்ளது.  விவசாயிகள் கடன் அட்டை மூலம்,  சலுகை கடன் வழங்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.  ரசாயன உர பயன்பாட்டை குறைக்கவும், மண் வளத்தை மேம்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும், வேம்பு கலந்த யூரியா 2015-16ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.  அறுவடைக்கு பிந்தைய வேளாண் திட்டங்களுக்காக, வேளாண் கட்டமைப்பு நிதி கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கப்பட்டது.  10,000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கும் திட்டத்துக்காக ரூ.6,865 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

விவசாயிகள் நலனுக்காகவே சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இது இந்திய விவசாயத்தில், புதிய யுகத்தை கொண்டு வரும். விவசாய சங்கங்களுடன் அரசு பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி விட்டது. முக்கிய விஷயங்களில் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தையை தொடரவும் அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

                                     -----


(Release ID: 1682726)