எரிசக்தி அமைச்சகம்

மின்சார நுகர்வோரின் உரிமைகளை விளக்கும் மின்சார (நுகர்வோரின் உரிமைகள்) விதிகள் 2020: முதன்முறையாக அறிமுகம்

Posted On: 21 DEC 2020 3:48PM by PIB Chennai

மின்சார நுகர்வோரின் உரிமைகளை விளக்கும் விதிமுறைகளான மின்சார (நுகர்வோரின் உரிமைகள்) விதிகள் 2020- முதன் முறையாக மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காணொலி வாயிலாக ஊடகங்களுடன் உரையாடிய மத்திய எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஆர் கே சிங், “இந்த விதிமுறைகளின் வாயிலாக மின்சார நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறதுநுகர்வோருக்கு பணி செய்வதே மின்அமைப்பின் முக்கிய குறிக்கோள் என்பதை கருத்தில் கொண்டும், தொய்வற்ற மின்சாரத்தையும், நம்பகத்தன்மையான சேவையையும் பெறுவது நுகர்வோரின் உரிமை என்பதை முன்னிறுத்தியும் இந்த விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன”, என்று கூறினார்.

நாட்டில் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதில் இந்த விதிகள் முக்கிய பங்கு வகிக்கும். புதிய மின் இணைப்பு, பணம் திருப்பிச் செலுத்துதல் மற்றும் இதர சேவைகளை கால வரைக்குள் வழங்குவதை இந்த விதிகள் உறுதி செய்யும். நுகர்வோர் உரிமைகளை களங்கப்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்படும்”, என்றும் அவர் தெரிவித்தார்.

 

பொதுப் பயன்பாட்டு சேவைகளில் மக்களை மையமாகக் கொண்டு செயல்படும் மத்திய அரசின் மற்றொரு முக்கிய முன்முயற்சியாக இந்த விதிகள் அமைகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் தற்போது மின்சாரத்தை பயன்படுத்துவோரும், எதிர்காலத்தில் உபயோகிப்போருமாக சுமார் 30,000 பேர் இதன் மூலம் பயனடைவார்கள்  என்றார் அவர். ஊரக மற்றும் கிராமப்புற நுகர்வோர் இடையே இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் மாநிலங்களும் மின்சாரம் வழங்கும் நிறுவனங்களும் நுகர்வோருக்கு உகந்த இந்த விதிகளை பெருவாரியான மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த விதிகளின்படி இணையதளம் வாயிலாக நுகர்வோர் புதிய மின்சார இணைப்புகளுக்கு பதிவு செய்வதுடன், மின் கட்டணத்தையும் செலுத்தலாம் என்று அமைச்சர் கூறினார். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் மின் இணைப்புகள் நுகர்வோருக்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்த அமைச்சர் திரு ஆர்.கே சிங், பெருநகரங்களில் 7 நாட்கள், இதர நகரங்களில் 15 நாட்கள் மற்றும் ஊரக பகுதிகளில் 30 நாட்களுக்குள் புதிய இணைப்புகளை வழங்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த விதிகள் குறித்த முழு அறிவிப்பை இங்கே காணலாம்:

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/final%20-%20Copy%202.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682384

••••••


(Release ID: 1682415) Visitor Counter : 638