அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழா : 60 நாடுகளில் இருந்து 632 குறும்படங்கள் பங்கேற்பு
Posted On:
20 DEC 2020 3:46PM by PIB Chennai
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக, நடத்தப்படவுள்ள ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழாவில் பங்கேற்க 60 நாடுகளில் இருந்து 632 குறும்படங்கள் வந்துள்ளன.
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக, இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழா, டிசம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை காணொலிக் காட்சி மூலம் நடத்தப்படுகிறது. மக்களிடையே அறிவியலைப் பிரபலப்படுத்தவும், அறிவியல் சினிமா தயாரிப்பில் ஆர்வமுள்ள இளைஞர்களையும், ஆர்வலர்களையும் ஈர்ப்பதுமே இதன் நோக்கம்.
இந்தப் போட்டியில் பங்கேற்க, இந்த ஆண்டு 60 நாடுகளில் இருந்து, 632 அறிவியல் குறும்படங்கள் வந்துள்ளன.
சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட, விருதுகளை வென்ற அறிவியல், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த வெளிநாட்டு மற்றும் இந்திய திரைப்படங்கள் ஆன்லைன் மூலம் வந்துள்ளன. இவற்றிலிருந்து தேர்வு செய்யும் போட்டி நடந்து வருகிறது. கீழ்கண்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
(1) சர்வதேச பிரிவுக்கான விருதுகள்:
‘‘தற்சார்பு இந்தியாவுக்கான அறிவியல் மற்றும் உலக நலனுக்கான அறிவியல்’’ - கோப்பை மற்றும் சான்றிதழ்
‘‘அறிவியல் மற்றும் கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வு மற்றும் இதர சுகாதார அவசரநிலைகள்’’ - கோப்பை மற்றும் சான்றிதழ்.
இதே பிரிவுகளில், இந்தியர்களுக்கு நடத்தப்படும் போட்டியில், கோப்பை மற்றும் சான்றிதழுடன் முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2வது பரிசாக 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் முதல் பரிசாக ரூ.75,000 பரிசும், 2வது பரிசாக 2 பேருக்கு தலா ரூ.35,000 பரிசும் வழங்கப்படுகிறது.
போட்டி அல்லாத பிரிவில், ‘‘அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம்’’ என்ற தலைப்பில் குறும்படங்கள் வந்துள்ளன.
கடந்த 10ஆம் தேதியுடன், இந்த அறிவியல் திரைப்படங்கள் சமர்ப்பிப்பு முடிந்தது. மொத்தம் 60 நாடுகளில் இருந்து 632 படங்கள் வந்தன. இதில் இந்தியாவில் இருந்து 267 படங்கள் பங்கேற்றுள்ளன.
தேர்வு செய்யப்படும் படங்கள் டிசம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை, விஞ்ஞான் பிரசார் யூடியூப் சேனலில் மற்றும் இந்திய அறிவியல் திருவிழா சேனலிலும் ஒளிபரப்பப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682190
------
(Release ID: 1682212)
Visitor Counter : 214