நிதி அமைச்சகம்
மக்கள் மைய சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
Posted On:
16 DEC 2020 1:06PM by PIB Chennai
மக்கள் மைய சீர்திருத்தங்களை, அமல்படுத்துவதற்கான காலக்கெடு 2021 பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல துறைகளில், மக்கள் மைய சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை, மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நீட்டித்துள்ளது. சீர்திருத்தங்களை அமல்படுத்துதல் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் பரிந்துரை, 2021 பிப்ரவரி 15ம் தேதிக்குள் பெறப்பட்டால், அந்த மாநிலம் சீர்திருத்தம் தொடர்பான பலன்களைப் பெறலாம்.
மாநிலங்கள் சீர்திருத்தம் செய்ய வேண்டிய 4 முக்கியப் பகுதிகளை, மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலாக்கம்,
தொழில்களை எளிதாக செய்வதற்கான சீர்திருத்தம்,
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு / பயன்பாட்டு சீர்திருத்தங்கள்
மின்துறை சீர்திருத்தங்கள்.
இத்தகவல் மாநிலங்களுக்கு 2020 மே 17ம் தேதியே தெரிவிக்கப்பட்டது.
இந்த சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாநிலங்கள், 2 பயன்களைப் பெறலாம். ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் நிறைவு செய்வதற்கு, மொத்த மாநில உற்பத்தியில் 0.25 சதவீத அளவுக்கு கூடுதல் கடன் பெறலாம். இந்த வசதி மூலம், 4 சீர்திருத்தங்களை நிறைவு செய்வதற்கு ரூ.2.14 லட்சம் கோடி வரை கூடுதல் கடன் கிடைக்கும்.
மக்கள் மைய சீர்திருத்தங்களை மாநிலங்கள் மேற்கொள்ள ஊக்குவிப்பதே, இதன் நோக்கம்.
நான்கு சீர்திருத்தங்களில் மூன்றை நிறைவு செய்யும் மாநிலங்களுக்கு கிடைக்கும் 2வது சலுகை, ‘மாநிலங்களுக்கான மூலதன செலவுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் நிதியுதவி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், 4 சீர்திருத்தங்களில், குறைந்தது மூன்றை நிறைவு செய்யும் மாநிலங்களுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், தற்சார்பு இந்திய நிதியுதவித் திட்டம் 2.0-ன் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சரால் கடந்த அக்டோபர் 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. கொவிட் தொற்று காரணமாக வரி வருவாய் இழப்பை சந்திக்கும் மாநில அரசுகளின் மூலதனச் செலவை ஊக்குவிப்பதுதான் இதன் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.12,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இந்த இரண்டு விதமான சலுகைகள், சீர்திருத்தங்களை மேற்கொள்ள மாநிலங்களை ஊக்குவித்துள்ளன. இது வரை, 9 மாநிலங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு முறையை அமல்படுத்தியுள்ளன. தொழில்களை எளிதாக செய்யும் சீர்திருத்தங்களை 4 மாநிலங்கள் நிறைவு செய்துள்ளன. ஒரு மாநிலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு / பயன்பாடு சீர்திருத்தங்களை நிறைவு செய்துள்ளது. இந்த மாநிலங்கள் ரூ. 40,251 கோடி கூடுதலாக கடன் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தங்களை நிறைவு செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது, இதர மாநிலங்களும் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்து அது தொடர்பான நிதி உதவிகள் பெறுவதை ஊக்குவிக்கும்.
******
(Release ID: 1681004)
(Release ID: 1681035)