பிரதமர் அலுவலகம்

ஆக்ரா மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியை பிரதமர் தொடங்கிவைத்தார்

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உலகளவில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன: பிரதமர்
ஸ்வதேஷ் தர்ஷன், பிரசாத் போன்ற திட்டங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: பிரதமர்
கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடு வாங்குவோரின் நம்பிக்கை பாலத்திற்கு இடையே இருந்த இடைவெளியை நீக்குவதற்காக ஆர்இஆர்ஏ சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது: பிரதமர்
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 12 லட்சத்திற்கும் அதிகமான நகர்ப்புற நடுத்தர குடும்பங்கள் வீடு வாங்குவதற்காக ரூ. 28,000 கோடி வழங்கப்பட்டுள்ளது: பிரதமர்

Posted On: 07 DEC 2020 1:15PM by PIB Chennai

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணியை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட இதர விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, எனினும், அவற்றை செயல்படுத்துவதற்கான நிதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், இது நாட்டின் உள்கட்டமைப்புத் துறை சந்தித்து வரும் பிரச்சினைகளுள் முக்கியமானது என்றும் கூறினார். புதிய திட்டங்களின் துவக்கத்திலேயே அவற்றுக்கான நிதியைத் தமது அரசு உறுதி செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 100 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்படும் என்று பிரதமர் கூறினார். பல்முனை இணைப்பு கட்டமைப்புக்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உலக அளவில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் வருமானம் அளிக்கக்கூடிய வகையில் சுற்றுலாத்துறையில் வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர்-விசா திட்டத்தின் கீழ், நாடுகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்திருப்பதோடு, விடுதிகளுக்கான வரியையும் பெருமளவு குறைத்திருப்பதாகக் கூறினார். ஸ்வதேஷ் தர்ஷன், பிரசாத் போன்ற திட்டங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். அரசின் நடவடிக்கைகளினால், பயண மற்றும் சுற்றுலா போட்டித் திறன் குறியீட்டில் இந்தியா 34-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு, இந்தப் பட்டியலில் இந்தியா 65-வது இடத்தில் இருந்தது. கொரோனா தொற்று குறையும் பொழுது சுற்றுலாத் துறையின் மீதான ஆர்வமும் மீண்டும் திரும்பும் என்று தாம் நம்புவதாக பிரதமர் தெரிவித்தார்.

தனித்தனியாக அல்லாமல், சீர்திருத்தங்கள் முழுவதுமாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு, சுமூகமான வாழ்வு, அதிகப்பட்ச முதலீடுகள், நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகிய நான்கு கட்டங்களாக நகரங்களின் வளர்ச்சிக்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளை வாங்குவோரின் நம்பிக்கை பாலத்திற்கு நடுவில் இடைவெளி இருந்ததாக பிரதமர் கூறினார். தவறான  நோக்கங்களுடன் செயல்பட்ட மக்கள், ரியல் எஸ்டேட் துறைக்கே களங்கம் ஏற்படுத்தி, நடுத்தர மக்களை துன்பத்தில் ஆழ்த்தியதாக அவர் கூறினார். இந்தப் பிரச்சினைகளை நீக்குவதற்காக ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு) சட்டம் (ஆர்இஆர்ஏ) அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, நடுத்தர குடும்பங்களின் வீடுகள் விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டதாக சில அண்மை அறிக்கைகள் தெரிவிக்கின்றன, என்றார் அவர். நகர வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கத்துடன் நவீன, பொது போக்குவரத்தில் இருந்து வீடுகள் வரை அனைத்து தரப்பு வளர்ச்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஆக்ராவில் தொடங்கப்பட்டதாகக் கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தின் கீழ் நகரத்தில் வாழும் ஏழை மக்களுக்காக ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நகரத்தில் வாழும் நடுத்தர மக்களுக்காக, முதல்முறை அவர்கள் வீடு வாங்குவதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான நகர்ப்புற நடுத்தரக் குடும்பங்கள் வீடு வாங்குவதற்காக ரூ. 28,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். புதுப்பித்தலுக்கான அடல் லட்சிய நோக்குத் (அம்ருத்) திட்டத்தின் கீழ் பல்வேறு நகரங்களில் தண்ணீர்கழிவு நீர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதாகவும், நகரங்களில் உள்ள பொதுக் கழிவறைகளை மேம்படுத்துவதற்கும், கழிவு மேலாண்மையில் நவீன முறையைப் பயன்படுத்துவதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

2014-ஆம் ஆண்டு முதல், நாட்டில் 450 கி.மீ தூரத்துக்கும் அதிகமாக மெட்ரோ ரயில் பாதைகள்  செயல்பாட்டில் உள்ளதாகவும், அதற்கு முன்னர் வெறும் 225 கிலோ மீட்டர் மட்டுமே இருந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். சுமார் 1000 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இந்த பணிகள் 27 நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

தாஜ் மஹால், ஆக்ரா கோட்டை, சிகந்தரா ஆகிய சுற்றுலாத் தலங்களை, ரயில் நிலையங்களுடனும், பேருந்து நிலையங்களுடனும் இணைக்கும் வகையில் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம் இரு வழித்தடங்களில் 29.4 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் திட்டம், ஆக்ரா நகரின் 26 லட்சம் மக்களுக்கும், ஆண்டு தோறும் ஆக்ராவுக்கு வருகை தரும் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனளிக்கும்வரலாற்று சிறப்புமிக்க ஆக்ரா நகருக்கு, இந்த மெட்ரோ ரயில் திட்டம், சுற்றுச்சூழலுக்கு உகந்த விரைவுப் போக்குவரத்தை அளிக்கும். ரூ.8,379.62 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், 5 ஆண்டுகளில் நிறைவடையும்.

முன்னதாகக் கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி லக்னோ மெட்ரோ ரயில் சேவையைசிசிஎஸ் விமான நிலையம் முதல் முன்ஷிபுலியாவரை, பிரதமர் தொடங்கி வைத்தபோது, ஆக்ரா ரயில் மெட்ரோ ரயில் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

*****



(Release ID: 1678829) Visitor Counter : 253