ஜவுளித்துறை அமைச்சகம்
தொழில்நுட்ப ஆடைகளின் பிரத்யேக ஏற்றுமதி வளர்ச்சிக் குழு அமைப்பதற்கான திட்டங்கள்: ஜவுளித்துறை அமைச்சகம் வரவேற்பு
Posted On:
03 DEC 2020 1:42PM by PIB Chennai
குண்டு துளைக்காத ஜாக்கெட், தீப்பற்றாத உடை, விண்வெளி வீரர்களின் உடை போன்ற தொழில்நுட்ப ஆடைகளுக்கான பிரத்யேக ஏற்றுமதி வளர்ச்சி குழு அமைப்பதற்கான திட்டங்களை மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் வரவேற்கிறது.
குண்டு துளைக்காத ஜாக்கெட், தீப்பற்றாத உடை, விண்வெளி வீரர்கள் அணியும் உடை, விளையாட்டு வீரர்களின் உடைகள், சில துறைகளின் ஊழியர்களுக்கு தேவையான சிறப்பு உடைகள் ஆகியவை தொழில்நுட்ப ஆடைகள் பிரிவின் கீழ் வருகின்றன.
இந்த தொழில்நுட்ப ஆடைகளுக்கான பிரத்யேக ஏற்றுமதி வளர்ச்சி குழு அமைப்பதற்கான திட்டங்களை வரவேற்று, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் இம்மாதம் ஒன்றாம் தேதி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கம்பெனிகள் சட்டம் மற்றும் அமைப்பு பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்த ஏற்றுமதி சங்கங்களும், வர்த்தக அமைப்புகளும், தொழில்நுட்ப ஆடைகளுக்கான பிரத்யேக வளர்ச்சிக் குழு அமைப்பதற்கான திட்டங்களை டிசம்பர் 15ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
சர்வதேச வர்த்தக மேம்பாடு தொடர்பாக மத்திய அரசு பிறப்பிக்கும் அனைத்து ஆணைகளையும் இந்தக் குழு பின்பற்ற வேண்டும்.
தொழில்நுட்ப ஆடை தயாரிப்பில், நாடு முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கில், ரூ.1,480 கோடி மதிப்பில், தேசிய தொழில்நுட்ப ஆடைகள் திட்டத்தைத் தொடங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்குள் அமல்படுத்த வேண்டும். தொழில்நுட்ப ஆடைகளுக்கான ஏற்றுமதி வளர்ச்சிக் குழு உருவாக்குவதும், இத்திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
******
(Release ID: 1677979)
(Release ID: 1678027)