பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு படைகளின் கொடி நாள் 2020 - மக்கள் தானாக முன்வந்து நிதி அளிக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

Posted On: 02 DEC 2020 5:54PM by PIB Chennai

பாதுகாப்பு படைகளின் கொடி நாள் 2020-ஐ முன்னிட்டு மக்கள் தாமாக முன்வந்து நிதி அளிக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதுகாப்பு படைகளின் கொடி நாள், நாடு முழுவதும், டிசம்பர் 7ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1949ம் ஆண்டு முதல் இந்த நாள் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும், நாட்டின் கவுரவத்தை காக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருக்கும் மரியாதை செலுத்தும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

பாதுகாப்பு படைகளின் கொடி அணிதல் நிகழ்ச்சியை இன்று  தொடங்கி வைத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

பாதுகாப்பு படைகளின் கொடி நாள் நிதிக்கு, நாட்டு மக்கள் தானாக முன்வந்து நிதியளிக்க வேண்டும்.  நாட்டின் இறையாண்மையை  பாதுகாக்க, நமது படைகள் எப்போதும் தீரத்துடன் போராடி வருகின்றன.  இந்த பணியில் சில நேரங்களில், அவர்கள் தங்கள் குடும்பத்தை தவிக்க விட்டு உயிரிழக்க நேரிடுகிறது அல்லது  படு காயம் அடைய நேரிடுகிறது.  ஆகையால், நமது முன்னாள் ராணுவ வீரர்கள், உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினர், படுகாயம் அடைந்த  வீரர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆகியவை அனைத்து மக்களின் பொறுப்பு.  அந்த பொறுப்பை நிறைவேற்ற, கொடி நாள், ஒரு  வாய்ப்பு வழங்குகிறது. பாதுாப்பு படைகளின் கொடி நாள் நிதிக்கு மக்கள் தானாக முன்வந்து நிதி அளிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு கொடி நாள் நிதிக்கு மக்கள் தானாக முன்வந்து  ரூ.47 கோடிக்கும் மேல் வழங்கினர். அதேபோல் இந்த ஆண்டும், மக்கள் தானாக முன்வந்து கொடி நாள் நிதி வழங்குவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு படைகளின் கொடி நாள் நிதி, பணியின் போது உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் படுகாயம் அடைந்த வீரர்கள், வயதான வீரர்கள், ஓய்வூதியம் அற்ற வீரர்கள், விதவைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் மறுவாழ்வு மற்றும் நலனுக்கு பயன்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு வறுமை உதவி, கல்வி உதவி, விதவை/மகள் திருமண உதவி, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உதவி, மருத்துவ உதவி, வீடு பழுதுபார்க்கும் உதவி, ஈமச்சடங்கு உதவி போன்ற பல திட்டங்களின் கீழ் உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677709

**********************(Release ID: 1677774) Visitor Counter : 27