தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் ஓய்வூதியத் திட்ட ஓய்வூதியர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க பல்வேறு வழிமுறைகள்
Posted On:
16 NOV 2020 3:47PM by PIB Chennai
தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் 1995-இன் ஓய்வூதியர்கள் தொடர்ந்து ஓய்வூதியத்தை பெறுவதற்காக உயிர்வாழ் சான்றிதழ்/டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர் ஓய்வூதியத் திட்ட ஓய்வூதியர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க பல்வேறு வழிமுறைகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், ஓய்வூதியர்கள் தங்களது வீடுகளுக்கு அருகிலோ அல்லது தங்களது வீட்டில் இருந்தவாறே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் 135 மண்டல அலுவலகங்கள் மற்றும் 117 மாவட்ட அலுவலகங்களைத் தவிர, தாங்கள் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளும் வங்கிகளின் மூலமாகவோ அல்லது தங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களின் வாயிலாகவோ ஓய்வூதியர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
மேலும், 3.65 லட்சத்துக்கும் அதிகமான பொது சேவை மையங்களில் இருந்தோ, அல்லது உமாங்க் செயலியின் மூலமாகவோக் கூட இச்சான்றிதழை அவர்கள் சமர்ப்பிக்க இயலும்.
சமீபத்தில், ஓய்வூதியர்கள் தங்களது டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர் மூலம் வீட்டில் இருந்தவாறே சமர்ப்பிக்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய தபால் துறையின் கட்டணங்கள் வங்கி இந்த புதிய சேவையை தொடங்கி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தபால்காரர்கள் மூலம் ஓய்வூதியர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழை தங்களின் வீட்டில் இருந்தவாறே டிஜிட்டல் முறையில் தற்போது சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673168
-------
(Release ID: 1673317)
Visitor Counter : 243