பிரதமர் அலுவலகம்

ஹாஜிராவில் ரோ-பாக்ஸ் முனைய தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 08 NOV 2020 3:18PM by PIB Chennai

ஒரு திட்டத்தைத் தொடங்குவதால், தொழில் செய்வதற்கு உகந்த சூழ்நிலை எப்படி மேம்படும் என்பதற்கும், வாழ்க்கையின் வசதி எவ்வாறு உயரும் என்பதற்கும் இது உதாரணமாக உள்ளது. புனித யாத்திரை, நேரம் மிச்சமாகுதல், விவசாய உற்பத்தி இழப்பு குறைதல், சூரத் சந்தைக்கு காய்கறிகள், கனிகளை  கொண்டு செல்லுதல் ஆகிய பயன்கள் இதன் மூலம் கிடைக்கும். வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என எல்லோருக்கும் இதனால் பயன் கிடைக்கும்.

இது குஜராத் மக்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் திரு. விஜய் ருபானி அவர்கள், மத்திய அமைச்சர்கள், குஜராத் பாஜக தலைவர் மன்சுக் பாய் மன்டாவியா அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி.ஆர். பாட்டீல் அவர்கள், குஜராத் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், என் சகோதர சகோதரிகள் பல்வேறு இடங்களில் இருந்து பெருமளவில் பங்கேற்றிருக்கிறீர்கள். ஹாஜிராவுக்கும் கோகாவுக்கும் இடையில் ரோ-பாக்ஸ் சேவை தொடங்குவதன் மூலம் சௌராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் மக்களின் நீண்டநாள் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. பவநகர் மற்றும் சூரத் இடையில் நீர்வழி தொடர்பு ஏற்பட்டிருப்பது குறித்து உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

கோகா மற்றும் ஹாஜிரா இடையிலான 375 கிலோ மீட்டர் பயண தூரம் இனி கடல்வழியே 90 கிலோ மீட்டர்களாகக் குறையும், 10-12 மணி நேர பயணம் இனி 3 - 4 மணி நேரமாகக் குறையும். இதனால் பணம், நேரம் மிச்சமாகும், சாலைப் பயணம் குறைவதால் மாசு குறையும். ஆண்டுக்கு 80 ஆயிரம் பயணிகள் கார்கள், 30 ஆயிரம் லாரிகள் இந்த சேவையை பயன்படுத்தும் போது, பெட்ரோல், டீசல் மிச்சமாகும்.

நண்பர்களே,

சௌராஷ்டிரா மக்களுக்கு, பெரிய வணிகப் பகுதியான குஜராத்துடன் இணைப்பு வசதி கிடைப்பதால் காய்கறிகள், கனிகளை சூரத் சந்தைக்கு கொண்டு போகலாம். சீக்கிரத்தில் அவை சந்தைக்கு போவதால் விவசாயிகள் பயன்பெறுவர்.

நண்பர்களே,

இந்த சேவையை தொடங்குவதில் நிறைய பிரச்சினைகள் சவால்கள் இருந்தன. இத் திட்டம் நிறைவேறுமா என்ற சந்தேகம் கூட சிலநேரம் ஏற்பட்டது. இதை பூர்த்தி செய்து கொடுத்த பொறியாளர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் குஜராத் மக்களுக்கு பல லட்சம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

நண்பர்களே,

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்வழி வர்த்தகத்தில் குஜராத் எப்படி சிறப்பு பெற்றிருந்தது என மன்சுக் பாய் தெரிவித்தார். கடந்த 2 தசாப்தங்களில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கப்பல் கட்டும் கொள்கை, கப்பல் கட்டும் பூங்கா, சிறப்பு முனையங்கள் உருவாக்குதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. டாஹேஜ்ஜில் சரக்கு, ரசாயனம் மற்றும் எல்.என்.ஜி. முனையம் தொடக்கம், முந்த்ராவில் நிலக்கரி முனையம் ஆகியவற்றை உதாரணங்களாகக் கூறலாம். இதனால் குஜராத்தில் துறைமுகத் துறை புதிய பாதையில் முன்னேறியது.

நண்பர்களே,

துறைமுகத்தை ஒட்டிய பகுதி மக்களின் வாழ்வும் இதனால் மேம்படுகிறது. கடலோரப் பகுதி சூழலை நவீனப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். சாகர் கேது திட்டத்தை குறித்த காலத்தில் முடிக்கும் முயற்சியுடன், அந்தப் பகுதி இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பை அளிக்கிறோம்.

நண்பர்களே,

குஜராத் இப்போது இந்தியாவின் கடல்வழி நுழைவு வாயிலாக உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு நாட்டின் ஒட்டுமொத்த கடல்சார் வர்த்தகத்தில், குஜராத் மாநிலம் 40 சதவீதத்துக்கும் மேலான பங்களிப்பை பெற்றுள்ளது. குஜராத்தில் இவ்வளவு அதிக கடல்சார் வர்த்தகம் நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

நண்பர்களே,

கடல்சார் வணிகக் கட்டமைப்பு உருவாக்கம், திறன் மேம்பாட்டு பணிகள் குஜராத்தில் முழுவீச்சில் நடந்து வருகின்றன. குஜராத் கடல்சார் பல்கலைக்கழகம், பவநகரில் நாட்டின் முதலாவது சி.என்.ஜி. முனையம் உள்ளிட்ட திட்டங்கள் அரசுக்கும், தொழில் துறை மற்றும் கல்வி நிலையங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்துபவையாக இருக்கும்.

நண்பர்களே,

சமீபத்தில் டாஹேஜில் நாட்டின் முதலாவது ரசாயனப் பொருள் முனையம் உருவாக்கப்பட்டது. முதலாவது எல்.என்.ஜி. முனையம் உருவாக்கப்பட்டது. இப்போது பவநகர் துறைமுகத்தில் நாட்டின் முதலாவது சி.என்.ஜி. முனையம் உருவாக்கப்பட உள்ளது. மேலும் பவநகர் துறைமுகத்தில் ரோ-ரோ முனையம், திரவ சரக்கு முனையம், புதிய கன்டெய்னர் முனையம் ஆகியவை உருவாகி வருகின்றன.

நண்பர்களே,

கோகா - டாஹேஜ் இடையே மீண்டும் படகுப் போக்குவரத்தைத் தொடங்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதில் இயற்கை சார்ந்த தடங்கல்களை நீக்க தொழில்நுட்ப உதவியுடன் முயற்சிக்கப்படுகிறது.

நண்பர்களே,

கடல்சார் வர்த்தகத்திற்கு பயிற்சி தருவதற்கு குஜராத் கடல்சார் பல்கலைக்கழகம் பெரிய மையமாக இருக்கும். இதுதவிர, லோத்தாலில் முதலாவது தேசிய அருங்காட்சியகம் உருவாக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. மன்சுக் பாய் சுருக்கமாக கூறியதைப் போல,  நாட்டின் கடல்சார் வணிகத்தின் பாரம்பர்யத்தைப் பாதுகாப்பது இதன் நோக்கமாக இருக்கும்.

நண்பர்களே,

இன்று தொடங்கிய ரோ-பாக்ஸ் படகு சேவை அல்லது சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய கடல் விமான சேவை ஆகியவை நீர் வளத்தின் அடிப்படையிலான பொருளாதாரத்துக்கு புதிய உந்துதலைத் தரும். நீர், நிலம் மற்றும் வான்வெளியில் குஜராத்தின் சேவைகள் பெருமளவு முன்னேறி வருகின்றன. இவைதொடர்பாக பல திட்டங்களை நான் தொடங்கி வைத்திருக்கிறேன்.

நண்பர்களே,

மீன்கள் தொடர்பான தொழில், கடல் பாசி வளர்ப்பு, நீர்வழி போக்குவரத்து, சுற்றுலா என பல வசதிகள் உருவாகி வருகின்றன. நாட்டின் நீலப் பொருளாதாரத்தை பலப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப் படுகின்றன.

நண்பர்களே,

மீனவர்களுக்கு நவீன மீன்பிடி கலன்கள் வாங்குவதற்கு நிதி உதவி அல்லது வானிலை மற்றும் கடல் வழித்தடங்களை துல்லியமாகக் காட்டும் சாதனங்கள் வாங்குவதற்கு உதவி போன்ற வசதிகளை அரசு அளிக்கிறது. மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வளமைக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. சமீபத்தில் மீன்கள் தொடர்பான வர்த்தகத்தை மேம்படுத்த, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம் தொடங்கப்பட்டது.  இதன் மூலம் வரக் கூடிய ஆண்டுகளில் மீன்வள கட்டமைப்புகளை உருவாக்க ரூ.20,000 கோடி செலவிடப்படும்.

நண்பர்களே,

இப்போது நாடு முழுக்க துறைமுகங்களின் திறன்கள் மேம்பாடு, புதிய துறைமுகங்கள் உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. நாட்டில் உள்ள 21 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கான நீர்வழித் தடங்களை அதிகபட்ச அளவில் பயன்படுத்திட முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. சாகர்மாலா திட்டத்தின் கீழ், நாடு முழுக்க 500 திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

நண்பர்களே,

நீர்வழித் தடங்களில் நடைபெறும் போக்குவரத்துக்கு செலவு குறைவு, சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைவு. இருந்தாலும் 2014-க்குப் பிறகுதான் முழு முயற்சியாக இவை மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆறுகளும், கடல்களும் மோடி பிரதமரானதற்குப் பிறகு தோன்றியவை அல்ல. அவை ஏற்கெனவெ இருந்தன. ஆனால் அப்போது தொலைநோக்கு சிந்தனை இல்லை. இப்போது வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திறன் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. தற்சார்பு இந்தியாவில் கடல்சார் துறை முக்கிய இடம் பெறும் வகையில் முன்னேற்றங்கள் நிகழ்கின்றன. இனி இத்துறை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்தட அமைச்சகம் என குறிப்பிடப்படும். இதனால் பணிகள் இன்னும் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும்.

நண்பர்களே,

தற்சார்பு இந்தியாவில் நீலப் பொருளாதாரத்தின் பங்களிப்பை பலப்படுத்த, கடல்சார் சரக்கு சேமிப்பு கிடங்கு வசதியை பலப்படுத்த வேண்டியுள்ளது. சரக்குகள் தடையின்றி கொண்டு செல்லப்படுவதற்கு ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக ஒற்றைச்சாளர வசதியை ஏற்படுத்தியுள்ளோம்.

நண்பர்களே,

பன்முக போக்குவரத்து தொடர்பு வசதியை உருவாக்கும் பாதையில் நாடு இப்போது முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதனால் சேமிப்புக் கிடங்கு செலவுகள் குறையும்.  சாலை, ரயில், விமானம், கப்பல் துறைகளின் கட்டமைப்புகளை ஒருங்கிணைக்க முயற்சிக்கப்படுகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் கிடைக்கும்.

நண்பர்களே,

இந்த திருவிழா நேரத்தில் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் என்ற மந்திரத்தை மறந்துவிட வேண்டாம் என்று சூரத் மக்களை கேட்டுக் கொள்கிறேன். மண் விளக்குகள் வாங்கினால் தற்சார்பாகிவிடுவோம் என நினைக்கிறார்கள். அது போதாது. நாம் இறக்குமதி செய்யும் பல பொருட்களை நம் மக்கள், கைவினைக் கலைஞர்கள் உருவாக்கி வருகிறார்கள். அவர்களுக்கு ஏன் வாய்ப்பு தரக் கூடாது?

நண்பர்களே,

நம் கிராமங்களில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கினால் தான் நாட்டை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும். இதனால் நீங்கள் பெருமை கொள்ளலாம். எனவே உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் தருவதில் சமரசம் செய்யாதீர்கள்.

நாடு சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது. அதுவரையில் நமது வாழ்வு மற்றும் நம் குடும்பத்தின் மந்திரமாக இது இருக்க வேண்டும். இந்த தீபாவளிக்கு உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற என் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கூறியதை எப்படி அமல்படுத்தி வருகிறார் என்பதா நந்த்லால் ஜி இப்போது கூறினார். அதனால் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கல் எல்லோரும் எனக்கு அவரைப் போன்றவர்கள் தான். நாட்டின் ஏழைகளுக்கு ஏதாவது செய்ய நாம் முயற்சிகள் செய்வோம். நீங்கள் தீபாவளி கொண்டாடுங்கள், ஆனால் அவர்களின் வீடுகளிலும் தீபாவளி கொண்டாடுவதை உறுதி செய்யுங்கள். விளக்கு ஏற்றுங்கள். ஏழையின் வீட்டிலும் விளக்கு ஏற்றப்படுவதை உறுதி செய்யுங்கள். இந்த கொரோனா காலத்தில் எல்லோரும் கவனமாக தீபாவளியை கொண்டாடுவீர்கள் என்று நம்புகிறேன். எனதருமை சகோதர சகோதரிகளுக்கு எதிர்வரும் தாந்தேராஸ், தீபாவளி மற்றும் குஜராத் புத்தாண்டு மற்றும் இதர விழாக்கால வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

***************

 



(Release ID: 1671469) Visitor Counter : 235