குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ராமபிரானின் வாழ்க்கைப் பாடத்தை கற்று நல்வழியில் மக்கள் செல்ல வேண்டும் - குடியரசுத் துணை தலைவர் வேண்டுகோள்
Posted On:
06 NOV 2020 11:21AM by PIB Chennai
அடுத்த தலைமுறையினர், பகவான் ராமரின் வாழ்க்கை மற்றும் நற்குணங்களைக் கற்று, அவர் காட்டிய நல்வழியில் செல்ல வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘‘தவாஸ்மி: ராமாயணா பார்வையில் வாழ்க்கை மற்றும் திறமைகள்’’ என்ற தலைப்பிலான புத்தகத்தை காணொலிக் காட்சி மூலம் அவர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. வெங்கையா நாயுடு, ‘‘உண்மையும், நீதியும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதை ராம பிரானின் வாழ்க்கையும், பேச்சும், செயல்பாடுகளும் விவரிக்கின்றன. குடும்பத்தினர், ஆசிரியர்கள், எதிரிகளுடனான அவரது உறவு ஆகியவை வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எப்படி வலுவாக எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது’’ என்றார்.
பகவான் ராமரை `மர்யாதா புருசோத்தமா’ எனக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், அவர் சிறந்த ஆட்சியாளராக செயல்பட்டு மக்கள் மனதில் எப்போதும் இடம் பிடித்தார் என்றார்.
ராமாயணம் என்றும் அழியாத இதிகாசம் என குறிப்பிட்ட அவர், அது இந்தியாவின் ஒட்டுமொத்த கலாச்சாரப் பாரம்பரியத்தில் பொதிந்துள்ளது என்றார். ராமர் கூறியவற்றை, ஏராளமான புலவர்கள் மற்றும் முனிவர்கள் ராமாயணமாக பல மொழிகளில் எழுதியுள்ளனர் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். ‘‘உலகில் எந்த ஒரு இதிகாசமும் ராமாயணம் போல், மீண்டும், மீண்டும் பல வழிகளில் சுவாரசியமாக எழுதப்படவில்லை’’ என குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
வால்மீகி ராமாயணம், முதல் இதிகாசம் மட்டும் அல்ல, என்றும் மதிப்பிழக்காத காலவரையற்ற நிலையான இதிகாசம் எனவும், அது படித்தவர்களையும், படிக்காதவர்களையும் கவரக்கூடியது எனவும் குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
நேர்மறையான சிந்தனைகளுடன், முழுமையான வாழ்க்கை வாழ, இளைஞர்களை ராமாயணம் ஊக்குவிக்கிறது என்று அவர் கூறினார்.
‘‘தீமை, குறும்பு, வன்முறைக்கு எதிரான நேர்மையான வெற்றியை நாம் கொண்டாடுகிறோம்’’ என அவர் குறிப்பிட்டார்.
ராவணனை வீழ்த்தியபின், ராமரை இலங்கையில் இருக்கும்படி, லட்சமணன் கேட்டுக் கொண்டார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ராமர், ‘‘தாயும், தாய் நாடும் சொர்க்கத்தை விட மேலானவை’’ எனக் கூறியதாக திரு.வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
இந்த அறிவுரையை மக்கள் என்றும் கருத்தில் கொண்டு, வேலை தேடி வெளிநாடு சென்றாலும், தாய்நாட்டை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று திரு.வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.
நான்கு பாகங்களாக வெளியாகியுள்ள தாவாஸ்மி புத்தகத்தை நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் இளைஞர்கள் அடங்கிய குழு தயாரித்துள்ளது. இது ராமாயண கதையை தந்தை மற்றும் மகளுக்கும் இடையேயான உரையாடல் போல் சுவாரஸ்யமான அனுபவமாக உள்ளது.
கதைகளைப் படித்துவிட்டு தூங்கும் பழக்கம் மறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்த திரு.வெங்கையா நாயுடு, ‘‘தவாஸ்மி புத்தகம், அந்தப் பழக்கத்தை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சி. இந்த நான்கு தொகுப்புகளும், நல்ல தூக்க நேர கதைகள்’’ எனக் குறிப்பிட்டார்.
இந்தப் புத்தகங்களை எழுதிய திரு ராலாபண்டி ஸ்ரீராமா சக்ரதர், திருமதி அமரா சாரதா தீப்தி மற்றும் தவாஸ்மி புத்தகத்தை வெளியிட்ட குழுவினரை திரு.வெங்கையா நாயுடு பாராட்டினார்.
மத்திய லஞ்ச ஒழிப்பு முன்னாள் ஆணையர் திரு கே.வி.சவுத்திரி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670553
**********************
(Release ID: (Release ID: 1670553)
(Release ID: 1670582)
Visitor Counter : 317