சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

"பிரதமரின் மக்கள் இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி 2020-க்குள் கொவிட்-ஐ விரட்டுவோம்": டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 05 NOV 2020 5:17PM by PIB Chennai

கொவிட் சரியான நடத்தைமுறைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி, இந்த ஆண்டின் இறுதிக்குள் நோய் பரவலைக் கட்டுப்படுத்தி, அதன் வீரியத்தை அழிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தில்லி துணைநிலை ஆளுநர் திரு அனில் பைஜால், மாநில சுகாதார அமைச்சர் திரு சத்யேந்திர குமார் ஜெயின் மற்றும் மாநில உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று ஆலோசனை நடத்தினார்.

          இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல், மற்றும் கைகளைக் கழுவுதல் ஆகிய முக்கிய வழிமுறைகள் நாட்டின் கடைசி குடிமகனுக்கும் சென்றடையும் வகையில் மக்கள் இயக்கத்தை தொடங்கிய பிரதமர் திரு நரேந்திர மோடிக்குத் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டு, அரசின் இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கொவிட் நோய் பரவல், நாட்டில் வெகுவாகக் குறைந்து இருப்பதாகக் கூறினார்.

 

வரும் 2021-ஆம் ஆண்டின் இடையில் முன்கள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட நாட்டின் 20-25 கோடி மக்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்க அரசு உறுதி பூண்டு இருப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா பாதிப்பை தில்லியில் ஏற்பட்டுள்ள பாதிப்புடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், "இந்தியாவில் தற்போது 92 சதவீதம் பேர் நோயிலிருந்து குணமடைந்து உள்ள நிலையில், தில்லியில் அது, 89 சதவீதமாக உள்ளது. இந்த நோயினால் நாட்டில் 1.49 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில் உயிரிழந்தோரின் சதவீதம் 1.71", என்று குறிப்பிட்டார். வடக்கு, மத்திய, வடகிழக்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் தென்கிழக்கு மாவட்டங்களில் நோயின் தாக்கம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகத் தெரிவித்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், கடுமையான சுவாச நோய் தொற்று மற்றும் நோயின் அறிகுறி உள்ளவர்களுக்கு  பரிசோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670366

                                                                              ------


(Release ID: 1670471) Visitor Counter : 150