பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமைதின அணிவகுப்பில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Posted On:
31 OCT 2020 1:54PM by PIB Chennai
இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின் தொலைநோக்குப் பார்வை நிறைவேறியது பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். நான் உரையாற்றுவதற்கு முன் பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தை எழுப்ப விரும்புகிறேன்.
சர்தார் சாஹேபின் நினைவுகளை மனதில் கொண்டு சீருடையில் உள்ள வீரர்கள், நெடுந்தொலைவில் உள்ள மலைகளில் வாழும் எனது பழங்குடியின சகோதர சகோதரிகள் உட்பட நீங்கள்
அனைவரும் உங்களின் ஒருகையை உயர்த்தி பாரத் மாதா கி ஜே என முழங்கவேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும். இந்த உறுதிமொழியை நான் மூன்று முறை கூறுவேன். பாரத் மாதா கி ஜே என்பது காவல்படையின் தீரமிக்க புதல்வர்கள் மற்றும் புதல்விகளுக்கு, பாரத் மாதா கி ஜே என்பது கொரோனா போராளிகளுக்கு, பாரத் மாதா கி ஜே என்பது சுயசார்பு உறுதிமொழியை நனவாக்க ஈடுபாடு கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு. 'சர்தார் படேல்' என்று நான் கூறுவேன் 'நீடூழி வாழ்க' என்று நீங்கள் இரண்டு முறை கூறவேண்டும். சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நாட்டுமக்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள். நாட்டின் நூற்றுக்கணக்கான மன்னர் சமஸ்தானங்களை ஒருங்கிணைத்ததன் மூலம் இந்தியாவின் தற்போதைய வடிவத்தை அளித்ததோடு நாட்டின் பன்முகத்தன்மையை சுதந்திர இந்தியாவின் சக்தியாக மாற்றியவர் சர்தார் படேல்.
2014 ல் அவரது பிறந்தநாளை நாம் அனைவரும் நாட்டின் ஒற்றுமை தினமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினோம். இந்த ஆறு ஆண்டுகளில், கிராமங்களிலிருந்து நகரங்கள்வரை, கிழக்கிலிருந்து மேற்குவரை, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை 'ஒரே இந்தியா, உன்னத இந்தியா' என்ற தீர்மானத்தை நனவாக்க நாட்டிலுள்ள அனைவரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இன்று மீண்டும் ஒரு முறை, பாரதத்தாயின் மகத்தான புதல்வருக்கு இந்த நாடு மலர்தூவி மரியாதை செலுத்துகிறது. மீண்டும் ஒரு முறை இந்த நாடு சர்தார் படேலின் வானளாவிய உருவச்சிலையின் நிழலின்கீழ் முன்னேற்றத்திற்கான உறுதிமொழியை வலியுறுத்துகிறது.
நண்பர்களே, கெவாடியாவுக்கு நான் நேற்றே வந்துவிட்டேன். கெவாடியாவுக்கு வந்தபின், வனத்திற்குள் உல்லாசப்பயணம், ஏக்தா மால், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பூங்கா, ஆரோக்கிய வனம் உள்ளிட்ட பல புதிய சிறப்புமிக்க திட்டங்களை நேற்றிலிருந்து தொடங்கிவைத்திருக்கிறேன். மிகக் குறுகிய காலத்தில், 'ஒரே இந்தியா, உன்னத இந்தியா' என்ற உணர்வுடன் புதிய இந்தியாவின் முன்னேற்றத்தில் சர்தார் சரோவர் அணையுடன் இணைந்த இந்த பிரம்மாண்டமான கட்டுமானம் யாத்ரீகர்களின் மையமாக மாறியிருக்கிறது. வரும் காலத்தில் அன்னை நர்மதாவின் கரையோரம் உள்ள இந்த இடம் இந்தியாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தின் சுற்றுலாப் பயண வரைபடத்திலும் தனக்கான இடத்தைப் பிடிக்கப்போகிறது.
இன்று, சர்தார் சரோவருக்கும் சபர்மதி நதி முகத்துக்கும் இடையே நீர்வழி விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. நீர்வழி விமான சேவை என்பது இந்த வகையில் நாட்டிற்கு முதலாவதாகும். ஒற்றுமையின் சிலையைக் காண்பதற்கு நீர்வழி விமான சேவையையும் நாட்டு மக்கள் இப்போது தெரிவு செய்யலாம். இவை அனைத்தும் இந்தப் பகுதியில் சுற்றுலாவை அதிகரிக்க உதவவிருக்கின்றன. இவை உள்ளூர் மக்களுக்கும் எனதருமை பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளன. இந்தச் சாதனைகளுக்காக
நான் குஜராத் அரசையும், குஜராத்தின் அனைத்து மக்களையும் நாட்டிலுள்ள 130 கோடி பேரையும் பாராட்டுகிறேன்.
நண்பர்களே, இன்று ஒரு வித்தியாசமான ஒற்றுமையும் கூட இருக்கிறது. இந்த நாள் மகரிஷி வால்மீகியின் பிறந்த நாளுமாகும். இந்தியாவில் இன்று நாம் அனுபவிக்கின்ற கலாச்சார ஒற்றுமை பல நூற்றாண்டுகளுக்குமுன் ஆதிகவி மகரிஷி வால்மீகியால் துடிப்பாகவும் சக்தி மிக்கதாகவும் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பகவான் ராமனின் சிந்தனைகளால் நாம் இணைக்கப்பட்டு இருக்கிறோமென்றால் அதற்கான பெருமை மகரிஷி வால்மீகி அவர்களையே சாரும். தேசம் முதலில் என்பது வால்மீகியின் கருத்தாகும். தாயும் தாய் நாடும் சொர்க்கத்தை விடவும் மிக உயர்ந்தது என்பது அவரது மந்திரமாக இருக்கிறது. 'இந்தியா முதலில்' என்ற உறுதியேற்புக்கு இதுவே வலுவான அடித்தளமாகும். மகரிஷி வால்மீகியின் பிறந்த நாளையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே, விடுதலைப் போராட்ட வீரரும் மகாகவியுமான சுப்ரமணிய பாரதி பாரதத் தாயைப் பற்றி உலகின் தொன்மையான தமிழ் மொழியில் மிகவும் சிறப்பாக வர்ணித்திருக்கிறார். சுப்பிரமணிய பாரதியின் பாடல் வெளிப்படுத்தும் கருத்து இதுதான்:
மன்னும் இமயமலை எங்கள் சொத்து,
இதற்கு நிகர் வேறு எதுவும் இல்லை!
இனிய கங்கை இங்கே நடமிடுகிறது.
இவ்வளவு சிறந்தநதி பூமியில் வேறெங்கும் உண்டோ?
உபநிடதங்கள் எங்களின் மதிப்புமிகு புதையல்
இது போன்ற படைப்புகள் உலகில் வேறெங்கும் இல்லை
ஓ,தங்க நிகர் பாரதம் எங்கள் நாடு
எங்கள் நாட்டைப் போற்றுவோம்,
நாங்கள் இணையில்லா வகையினர்!!
இந்தியாவுக்கான இந்தக் காட்சி வர்ணனையை அன்னை நர்மதாவின் கரைகளிலும் சர்தார் சாஹேபின் அற்புதமான சிலையின் நிழலின் கீழும் மிக நெருக்கமாக நாம் உணரமுடியும். இந்தியாவின் இந்த பலம் அனைத்துக் கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் வெல்வதற்கு நமக்குக் கற்றுத் தந்துள்ளது. சென்ற ஆண்டு இதே நாளில் ஒற்றுமை ஓட்டத்தில் நாம் பங்கேற்றிருந்தபோது, உலகத்தின் ஒட்டுமொத்த மனிதகுலம் இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்ளும் என்று ஒருவரும் கற்பனை செய்து பார்க்கவில்லை. இந்தப் பேரழிவு திடீரென வந்தது. உலகம் முழுவதுமுள்ள மனித வாழ்க்கையையும் நமது முன்னேற்றத்தையும் பாதித்திருக்கிறது. ஆனால் இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்ள நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் கூட்டுபலம் நிரூபிக்கப்பட்டு மனவுறுதி பெற்றமுறை முன்னெப்போதும் இல்லாதது. வரலாற்றில் இதற்கு முன் இப்படி நிகழ்ந்ததில்லை.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை, லேயிலிருந்து லட்சத்தீவுவரை, அட்டாக்கிலிருந்து கட்டாக்வரை, கட்ச்சிலிருந்து கோஹிமாவரை திரிபுராவிலிருந்து சோமநாத்தவரை நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் ஒற்றுமை எட்டு மாதங்களாக இந்தப் பெருந்தொற்றுக்கு எதிராகப் போராட நமக்கு பலத்தைத் தந்துள்ளது; வெற்றியின் பாதையை நோக்கி முன்னேற வைத்துள்ளது. இவர்களை கவுரவித்து நன்றி தெரிவிப்பதற்காக நாடு விளக்குகள் ஏற்றியது. மற்றவர்களின் உயிர்களைப் பாதுகாக்கக் காவல்படையைச் சேர்ந்த பலர் உட்பட ஏராளமான கொரோனா போராளிகள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள். நாட்டின் சுதந்திரத்திற்குப்பின் மனிதகுல சேவைக்காக உயிர்த்தியாகம் செய்வது காவல்படையின் அடையாளமாக இருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து சுமார் 35,000 காவல்படையினர் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால் கொரோனாகாலத்தில் மற்றவர்களுக்கு சேவைசெய்தபோது ஏராளமான காவல்படை வீரர்கள் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். இந்தப் பொன்னான காலத்தை வரலாறு ஒருபோதும் மறக்கமுடியாது. இது காவல்துறையினரை மட்டும் ஊக்கப்படுத்துவது அல்ல; காவல்துறையினரின் தன்னலமற்ற சேவைக்காக நாட்டின் 130 கோடி மக்களும் தலைவணங்கி மரியாதை செலுத்துவார்கள்.
உலகின் பெரிய நாடுகளே இன்னலுற்றபோது இந்தப் பெருந்தொற்றை இந்தியா உறுதியுடன் எதிர்த்துப் போராடுவதற்கு நாட்டின் ஒற்றுமையே பலமாக இருந்தது. நாடு இன்று கொரோனாவிலிருந்து மட்டும் மீண்டு வரவில்லை மற்ற அனைத்திலும் முன்னேறி வருகிறது. இந்த ஒற்றுமையைத்தான் இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேல் கற்பனை செய்தார். கொரோனா காலத்தில் நமது ஒற்றுமை என்பது இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கான உண்மையான அஞ்சலியாகும்.
நண்பர்களே, நாட்டின் நலன் நம் அனைவருக்கும் மிகவும் உயர்வானதாக இருக்க வேண்டும் என்பதை நம் மனங்களில் நாம் எப்போதும் கொண்டிருக்கவேண்டும். அனைவரின் நலன்களை நாம் நினைக்கும்போது மட்டும்தான் நாம் முன்னேற்றம் காண்போம். சகோதர சகோதரிகளே, சர்தார் வல்லபாய் பட்டேலின் அதே தொலைநோக்கு உறுதிமொழியை வலியுறுத்துவது இன்றைய நிகழ்வாகும். அதிகாரமளிக்கப்பட்ட, வளமான, சுய சார்பு கொண்டதாக இந்தியா இருக்கும். இந்தப் புனிதமான நாளில் நாட்டுக்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்ள நாம் உறுதி ஏற்போம் . சர்தார் படேல் முன் தலைவணங்கி நாட்டைப் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லவும்நாட்டின் புகழையும் பெருமையையும் விரிவுபடுத்தவும் நாம் உறுதி ஏற்போம்.
இந்த உறுதியேற்புடன் ஒற்றுமை தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். சர்தார் சாஹேபுக்கு எனது மதிப்புமிக்கப் புகழாரத்தைக் காணிக்கையாக்கி, வால்மீகி ஜெயந்தி, சர்தார் சாஹேப்
பிறந்தநாளையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து
நான் உரையை நிறைவுசெய்கிறேன்.
மிக மிக நன்றி!
**********
(Release ID: 1669946)
Visitor Counter : 177
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam