குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
மகாராஷ்டிராவில் 100 குயவர்களுக்கு பானை செய்யும் மின்சார சக்கரம் அமைச்சர் நிதின்கட்கரி வழங்கினார்
Posted On:
28 OCT 2020 3:56PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்தட் மற்றும் பர்பானி மாவட்டங்களைச் சேர்ந்த குயவர் குடும்பங்களைச் சேர்ந்த 100 பேருக்கு, பானை செய்யும் மின்சார சக்கரங்களை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி காணொலி காட்சி மூலம் வழங்கினார்.
காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் (கேவிஐசி) கும்கர்சஷக்திகரன் திட்டத்தின் கீழ், மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்தட் மற்றும் பர்பானி மாவட்டங்களைச் சேர்ந்த குயவர்களை முன்னேற்றும் நடவடிக்கையாக மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி, பானை செய்யும் மின்சார சக்கரங்களை வழங்கினார். இவர்களுக்கு 10 நாள் பயிற்சியும் வழங்கப்பட்டது.
இந்த மின்சார சக்கரம், குயவர் குடும்பத்தினரைச் சேர்ந்த 400 பேருக்கு பயனளிக்கும். இதன் மூலம் அவர்களின் உற்பத்தியும், வருமானமும் அதிகரிக்கும். இது பிரதமர் திரு.நரேந்திர மோடியின் கனவு.
கேவிஐசியின் கும்கர்சஷக்திகரன் திட்டத்தின் செயல்பாடுகளை பாராட்டிய அமைச்சர் திரு. நிதின் கட்கரி, சுதந்திரத்துக்குப் பின் பானை செய்பவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, முதல் முறையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
‘‘பானை செய்பவர்களை மேம்படுத்துவது, அழியும் நிலையில் உள்ள பானைத் தொழிலை மீட்பது போன்றவை பிரதமரின் கனவு. கும்கர்சஷக்திகரன் திட்டத்தின் கீழ் முறையான பயிற்சி மற்றும் பானை செய்யும் மின்சார சக்கரம் ஆகியவை வழங்குவது, பானை செய்பவர்களின் உற்பத்தியையும், வருமானத்தையும் பல மடங்கு உயர்த்தும். மகாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களில் உள்ள தொலைதூர பகுதிகளிலும், இத்திட்டம் அமல்படுத்தப்படும்’’ என அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பானை செய்யும் கலைஞர்களுடன் மத்திய அமைச்சர் உரையாடினார். அரசின் உதவி பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மின்சார சக்கரம் மூலம் பானை உற்பத்தி அதிகரித்து, வருமானம் 3 முதல் 4 மடங்கு அதிகரிக்கும் என அவர்கள் கூறினர்.
காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்ட கேவிஐசி தலைவர் திரு வினய் குமார் சக்சேனா, ‘‘நாடு முழுவதும் இதுவரை 18,000 மின்சார சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 80 ஆயிரம் குயவர்கள் பயனடைந்துள்ளனர். அவர்களின் மாத வருமானம் ரூ.3 ஆயிரத்திலிருந்து, ரூ.10 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. பானை செய்பவர்களை மேம்படுத்துவதே கேவிஐசி திட்டத்தின் ஒரே நோக்கம்’’ என கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668125
**********************
(Release ID: 1668177)
Visitor Counter : 253