பிரதமர் அலுவலகம்

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு தேசிய மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

இந்தியா ஊழலை சற்றும் சகித்துக் கொள்ளாது: பிரதமர்
ஊழல் நடந்த பின் தண்டிப்பதை விட, நடக்கவிடாமல் தடுப்பதே சிறந்தது: பிரதமர்
ஊழலுக்கு எதிராகப் போரிட வெளிப்படையானதாக, பொறுப்புள்ளதாக, பொறுப்பு ஏற்பதாக, மக்களுக்கு பதில் அளிக்கக் கூடியதாக நிர்வாகம் இருக்க வேண்டும்: பிரதமர்
தலைமுறைகளைக் கடந்து ஊழல் தொடர்வதால் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடங்கல் உள்ளது: பிரதமர்

Posted On: 27 OCT 2020 7:38PM by PIB Chennai

விழிப்பான இந்தியா, வளமையான இந்தியா (सतर्क भारत, समृद्ध भारत) என்ற முழக்கத்தை முன்வைத்து நடைபெறும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குறித்த தேசிய மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.  இதற்கு மத்திய புலனாய்வுக் குழு (சி.பி.ஐ.) ஏற்பாடு செய்துள்ளது. விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் குடிமக்கள் பங்கேற்புடன் பொது வாழ்வில் கண்ணியம் மற்றும் நேர்மையை ஊக்குவிப்பதில் இந்தியாவின் உறுதியை வலியுறுத்துவது ஆகிய அம்சங்களுக்கு இந்த மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மாநாட்டில் பேசிய பிரதமர், ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியவராகவும், நாட்டின் நிர்வாக முறைமைகளை உருவாக்கிய சிற்பியாகவும் சர்தார் பட்டேல் இருக்கிறார் என்று கூறினார். நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சர் என்ற முறையில், நேர்மையின் அடிப்படையில் நாட்டின் சாமானிய மக்களுக்கான நடைமுறைகளை உருவாக்க அவர் முயற்சிகள் மேற்கொண்டார்.  அடுத்தடுத்த தசாப்தங்களில் நிலைமைகள் மாறியதில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள், போலி நிறுவனங்கள் உருவாக்கம், வரி ஏய்ப்பு, வரி விதிப்பால் துன்புறுத்தல் போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டன என்று திரு. நரேந்திர மோடி கூறினார்.

இதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய திசையில் பயணிப்பதற்கு 2014-இல் நாட்டு மக்கள் முடிவு செய்தபோது, இந்த சூழ்நிலைகளை மாற்றுவது பெரிய சவாலாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகும், கருப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதற்கான குழுவை உருவாக்கும் பணி தடைபட்டுக் கொண்டிருந்தது. இந்த அரசாங்கம் பொறுப்பேற்றதும் அந்தக் குழு அமைக்கப்பட்டது. ஊழலுக்கு எதிராக இந்த அரசு உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுவதாக அது அமைந்தது. 2014ல் இருந்து வங்கித் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை, தொழிலாளர், வேளாண்மை உள்ளிட்ட பல துறைகளில் சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்தச் சீர்திருத்தங்களின் அடிப்படையில், தற்சார்பு இந்தியா இயக்கத்தை வெற்றிகரமானதாக ஆக்கிடும் வகையில் இந்த நாடு முழு பலத்துடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று பிரதமர் கூறினார். உலகில் முன்னோடி நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நிர்வாக முறைமைகள் வெளிப்படையானதாக, பொறுப்புமிக்கதாக, பொறுப்பு ஏற்கும் வகையாக, மக்களுக்குப் பதில் சொல்லக் கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். எந்த வடிவிலான ஊழலும் இதற்கு மிகப் பெரிய எதிரியாக இருக்கும். ஒரு பக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக ஊழல் இருக்கிறது. மறுபுறம் நிர்வாக முறைமை மீது மக்களுக்கு இருக்க வேண்டிய நம்பகத்தன்மை மற்றும் சமூக சமன்நிலையை பாதிப்பதாக அது உள்ளது. எனவே, ஊழலை ஒழிப்பது என்பது தனியொரு அமைப்பு அல்லது நிறுவனத்தால் நடக்கும் வேலையாக இருக்காது என்றும், அனைவரின் கூட்டுப் பொறுப்பும் இதில் தேவை என்றும் அவர் கூறினார். தனிப்பட்ட ஒரு துறையின் அணுகுமுறையால் ஊழலை ஒழிக்க முடியாது என்றார் அவர்.

நாட்டின் வளர்ச்சி என்ற நிலை வரும்போது, விழிப்புநிலையின் வரம்பு விரிவானதாக இருக்கிறது என்று அவர் கூறினார். ஊழலாக இருந்தாலும், பொருளாதாரக் குற்றங்களாக இருந்தாலும், மருந்து நிறுவனங்களின் நெட்வொர்க் ஆக இருந்தாலும், பண மோசடியாக, பயங்கரவாதமாக, பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதாக இருந்தாலும் பெரும்பாலும் இவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையாக இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே முறைப்படியான சோதனைகள், செம்மையான தணிக்கைகள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான முழுமையான அணுகுமுறைக்கான திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சி ஆகியவை அவசியம் என்று அவர் கூறினார். எல்லா முகமைகளும் கூட்டுறவு மனப்பான்மையுடன், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இப்போது உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

விழிப்பான இந்தியா, வளமையான இந்தியா என்ற முழக்கத்தை நிறைவு செய்வதற்குப் புதிய வழிகளைப் பரிந்துரைக்கும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

2016-ஆம் ஆண்டு ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு திட்டத்தில் தாம் பேசியதை பிரதமர் நினைவுகூர்ந்தார். வறுமைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் நமது நாட்டில், ஊழலுக்கு சிறிதுகூட இடம் இருக்கக் கூடாது என்று பேசியதை அவர் குறிப்பிட்டார். பல தசாப்த காலமாக தங்களுக்கு உரிய வசதிகளை ஏழைகள் பெறவில்லை. ஆனால் இப்போது, அரசின் திட்டங்களின் பயன்கள் பயனாளிகளுக்கு நேரடியாக சென்று சேரும் வகையிலான, நேரடி மானியத் திட்டம் (டி.பி.டி.) போன்ற ஏற்பாடுகளால், ஏழைகள் தங்களுக்கான பலன்களை நேரடியாகப் பெறுகிறார்கள் என அவர் சுட்டிக்காட்டினார். நேரடி மானியத் திட்டத்தின் மூலமாக மட்டும் ரூ.1.7 லட்சம் கோடி, தவறானவர்களின் கைகளுக்குப் போகாமல் மிச்சப்படுத்தப் பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

அமைப்புகள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்தப் பட்டுள்ளது என்று அவர் திருப்தி தெரிவித்தார்.

முடிந்த வரையில் அரசின் பலமான தலையீடுகள் எதுவும் இருக்கக் கூடாது என்றும், தேவையான அளவுக்குள் அரசின் பங்களிப்பு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். அநாவசியமாக அரசு தலையிடுகிறது என்றோ அல்லது தேவையான சமயங்களில் அரசு செயல்படாமல் இருக்கிறது என்றோ மக்கள் நினைக்கக் கூடாது என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில் 1500-க்கும் மேற்பட்ட சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, பல சட்டங்கள் எளிமையாக்கப் பட்டுள்ளன என்று திரு. மோடி கூறினார். ஓய்வூதியம், கல்வி உதவித் தொகை, கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்,) புது (ஸ்டார்ட் அப் )நிறுவனங்கள் போன்றவற்றுக்கான பல விண்ணப்பங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் அலைச்சல் குறைகிறது என்று பிரதமர் கூறினார்.

 

भक्षयन्ति ये

त्वर्थान् न्यायतो वर्धयन्ति

नित्याधिकाराः कार्यास्ते राज्ञः प्रियहिते रताः

என்ற வாசகத்தை பிரதமர் மேற்கோள் காட்டினார்.

அழுக்கான பிறகு சுத்தம் செய்வதைக் காட்டிலும், அழுக்கு  ஏற்படாமல் இருப்பதே நல்லது என்பது இதன் பொருள்.

அதேபோல ஊழலைத் தண்டிப்பதைவிட, ஊழல் நடைபெறாமல் தடுப்பதே நல்லது என்று அவர் கூறினார். ஊழலுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளை நீக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கௌடில்யரின்,

भक्षयन्ति ये

त्वर्थान् न्यायतो वर्धयन्ति

नित्याधिकाराः कार्यास्ते राज्ञः प्रियहिते रताः

என்ற வாசகத்தையும் அவர் மேற்கோள் காட்டினார்.

அரசு பணத்தை கையாடல் செய்யாமல், மக்களின் நன்மைக்காக பயன்படுத்த முயற்சி செய்பவர்களை, அரசாங்க நலன் கருதி முக்கியமான பதவிகளில் நியமிக்க வேண்டும் என்பது இதன் அர்த்தம்.

முன்னர் இடமாறுதல் மற்றும் பணிநியமனங்களில் 'லாபி 'செய்வதற்கு தீய எண்ணத்துடன் ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்று பிரதமர் கூறினார். இப்போது அரசு பல கொள்கை முடிவுகள் எடுத்துள்ளது. இந்த நிலைமையை மாற்றுவதில் உறுதியைக் காட்டியுள்ளது. எனவே உயர் பதவிகளுக்கு 'லாபி' செய்யும் பழக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. குரூப் பி & சி தொகுப்புகளில் உள்ள வேலைகளுக்கு நேர்காணல் நடத்தும் முறையை அரசு ரத்து செய்துவிட்டது. வங்கி வாரிய அமைப்பு - தொடங்கப்பட்டதால், வங்கிகளில் மூத்த பதவிகளுக்கான நியமனங்கள் வெளிப்படையாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

நாட்டில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு முறைமையை பலப்படுத்த நிறைய சட்ட சீர்திருத்தங்கள் செய்து, பல புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். கருப்புப் பணம், பினாமி சொத்துகளுக்கு எதிரான சட்டங்கள், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவர்கள் செய்த பொருளாதாரக் குற்றங்கள் சட்டம் போன்றவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைக்கு பலம் சேர்ப்பவையாக உள்ளன என்று அவர் தெரிவித்தார். நேரில் செல்லாமலேயே வரி மதிப்பீடு செய்யும் நடைமுறையை அமல்படுத்தும் சில நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். ஊழலைத் தடுக்க அதிக அளவில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் வெகுசில நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருக்கிறது. ஊழல் தடுப்பு தொடர்பான முகமைகளுக்கு நல்ல தொழில்நுட்பம், திறன் வளர்ப்பு, நவீன கட்டமைப்பு மற்றும் சாதனங்களின் வசதிகளை செய்து தருவதற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. இதநால் அந்த முகமைகள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு, நல்ல பலன்களை உருவாக்க முடியும் என்று பிரதமர் கூறினார்.

ஊழலுக்கு எதிரான இந்தப் பிரசாரம் ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ முடியக் கூடியதாக இருக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

தலைமுறைகளைக் கடந்து ஊழல் வளர்ந்து வருவது தான் பெரிய சவாலாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். ஒரு தலைமுறையினரிடம் இருந்து, அடுத்த தலைமுறையினருக்கு ஊழல் பரவி வருகிறது என்றார் அவர். ஊழல் செய்யும் ஒரு தலைமுறையினருக்கு சரியான தண்டனை கிடைக்காமல் போனால், அடுத்த தலைமுறையினர் இன்னும் தீவிரமாக ஊழலில் ஈடுபடுகிறார்கள். இதனால் பல மாநிலங்களில் இது அரசியல் பழக்கமாகவே ஆகிவிட்டது என்று பிரதமர் தெரிவித்தார். ஊழலும், அடுத்தடுத்த தலைமுறையினர் ஊழலில் ஈடுபடுவதும் நாட்டின் வளங்களைக் காலி செய்துவிட்டன. வளமையான, தற்சார்பான இந்தியாவை உருவாக்குவதற்கான வளர்ச்சிக்கு இந்த ஊழல்கள் தான் தடைக்கற்களாக இருக்கின்றன என்று அவர் கூறினார். இந்தத் தேசிய மாநாட்டில் இந்தத் தலைப்பு பற்றி விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் விருப்பம் தெரிவித்தார்.

ஊழல் தொடர்பான செய்திகள் குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் வலியுறுத்தினார். ஊழலுக்கு எதிராக, உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட வலுவான நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் பிரதானமாக வெளியானால், மக்களுக்கு நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்றும், ஊழல் செய்தால் தப்புவது சிரமம் என்ற எச்சரிக்கையை அளிப்பதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஊழலை ஒழித்தால் நாடு பலமாகும் என்றும், வளமையான, தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற சர்தார் பட்டேலின் கனவை நனவாக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையில் கடைபிடிக்கப்படும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி இந்தத் தேசிய மாநாட்டை மத்தியப் புலனாய்வுக் குழு நடத்தியது. ஊழல் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் குடிமக்கள் பங்கேற்புடன் பொது வாழ்வில் கண்ணியம் மற்றும் நேர்மையை ஊக்குவிப்பதில் இந்தியாவின் உறுதியை வலியுறுத்துவது ஆகிய அம்சங்களுக்கு இந்த மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், வெளிநாடுகளில் புலனாய்வு செய்வதில் உள்ள சவால்கள், ஊழலுக்கு எதிரான முறைமைசார்ந்த சோதனையாக கண்காணித்தல், வங்கி மோசடிகளைத் தடுத்தல் மற்றும் நிதி பங்கேற்பு முறைமைகளை மேம்படுத்துதல், வளர்ச்சிக்கான சிறந்த முன்னெடுப்பாக செம்மையான தணிக்கை முறை, ஊழல் தடுப்பு சட்டத்தில் சமீபத்தில் செய்த திருத்தங்கள் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படும்.  திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சி, விரைவான மற்றும் செம்மையான புலனாய்வுக்கு  பல ஏஜென்சிகள் ஒருங்கிணைப்பு,பொருளாதாரக் குற்றங்களில் புதிய பாணிகள், கணினிசார் குற்றங்கள் மற்றும் எல்லைகளுக்கு அப்பால் இருந்து நடத்தப்படும் குற்றச் செயல்கள், குற்றவியல் புலனாய்வு ஏஜென்சிகளில் சிறந்த செயல்பாடுகள் குறித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது ஆகிய விஷயங்களும் இதில் விவாதிக்கப்பட உள்ளன.

சட்டங்கள் உருவாக்குபவர்களையும், அமல் செய்பவர்களையும் பொதுவான ஒரு தளத்திற்குக் கொண்டு வருவதாக இந்த மாநாடு இருக்கும். முறைப்படியான மேம்பாடுகள் மூலமாகவும், தடுப்பு நோக்கிலான கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலமாகவும் ஊழலைத் தடுப்பதற்கான முயற்சிகளை உருவாக்கும் தளமாகவும் இது இருக்கும். இதன் மூலம் நல்ல நிர்வாகமும், பொறுப்பு ஏற்கும் நிலையிலான நிர்வாகமும் உருவாகும். இந்தியாவில் தொழில் செய்யும் நிலையை எளிதாக ஆக்குவதற்கான சூழ்நிலைகளை உருவாக்க இவை முக்கிய பங்கு வகிக்கும்.

ஊழல் தடுப்பு அமைப்புகள், கண்காணிப்பு அமைப்புகள், பொருளாதாரக் குற்றப் பிரிவுகளின் தலைமை அதிகாரிகள் அல்லது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சி.ஐ.டி., தலைமை கண்காணிப்பு அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் மற்றும் பல்வேறு மத்திய முகமைகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். தொடக்க நிகழ்ச்சியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்களும் பங்கேற்றனர்.

*********


(Release ID: 1668054) Visitor Counter : 2963