மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஆந்திர பிரதேசத்தில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் புதிய கட்டிடங்களை அமைச்சர் திரு ரமேஷ் பொக்கிரியால் தொடங்கி வைத்தார்

Posted On: 27 OCT 2020 6:26PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தின் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் முதல் கட்டமாக புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்வேறு வளாகங்களை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' மெய்நிகர் வாயிலாகத் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வகுப்பறை வளாகம், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஆய்வக வளாகம், ஆண்கள் தங்கும் விடுதி, பெண்கள் தங்கும் விடுதி மற்றும் அதிதி விருந்தினர் இல்லம் முதலியவை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காகத் தயாராக உள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், தரமான கல்வியை வழங்குவதன் மூலம் சிறந்த கற்றல், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளைப் படைத்து, சமுதாயத்திற்கு சேவை செய்வதே அனைத்துக் கல்வி நிறுவனங்களின் லட்சியமாக உள்ளது என்று தெரிவித்தார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான திறமை அனைத்தும் இந்த தேசிய தொழில்நுட்ப கழகத்தில் உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், இதன் காரணமாகவே தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கவும், தொழில்நுட்பக் கல்வியில் அபரிமித வளர்ச்சி அடையவும் இந்த நிறுவனம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்தர கட்டிடப் பணிகள் மிக விரைவில் முடிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்', இன்று திறக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் ரூபாய் 438 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆந்திரப்பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதிலிருந்து கூட்டாட்சி தன்மையை நிலை நாட்டுவதற்கு மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667893

**********************



(Release ID: 1667998) Visitor Counter : 96