சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

திரிபுராவில் 9 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல்

Posted On: 27 OCT 2020 3:36PM by PIB Chennai

திரிபுராவில் ரூ.2752 கோடி மதிப்பில், 262 கிலோ மீட்டர் தொலைவில் 9 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். திரிபுரா முதல்வர் திரு பிப்லப் குமார் தேப் தலைமையில், மத்திய இணையமைச்சர்கள் டாக்டர் ஜித்தேந்திர சிங், திரு வி.கே.சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி, கடந்த ஆறு வருடங்களில் திரிபுரா மாநிலத்தில் கூடுதலாக சுமார் 300 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள்  அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இன்றைய அளவில் அந்த மாநிலத்தில் 850 கிலோ மீட்டருக்கும் அதிகமான நெடுஞ்சாலைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும் ரூபாய் 8000 கோடி மதிப்பில் திரிபுராவில் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் 2015 முதல் 2020 வரை நில கையகப்படுத்தலுக்காக ரூபாய் 365 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் சப்ரம் மற்றும் வங்கதேசத்தின் ராமகர் பகுதியை இணைக்கும் ஃபெனி பாலம் மற்றும் உதய்பூர்- அகர்தலா சாலை உள்ளிட்ட இரண்டு மிக முக்கிய திட்டங்கள் நிறைவடைய இருப்பதாகக் கூறிய அவர், சமூகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஃபெனி பாலம் மிக முக்கியமானதாகக் கருதப்படுவதாகத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய வடகிழக்கு மாகாணங்களின் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சரும் (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியங்கள் துறை, அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், புதிய இந்தியா குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப்  பார்வையினால் வடகிழக்கு பகுதியில் உள்ள 8 மாநிலங்களிலும் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். விரைவில் திரிபுராவிலிருந்து வங்கதேசம் வரையில் புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் இந்த பகுதி கூடுதல் வளர்ச்சி அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் டாக்டர் வி கே சிங், திரிபுராவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலமாக அந்த மாநிலத்தின் சமூகப் பொருளாதார சூழல் மேம்படுவதுடன், சுற்றுலா மற்றும் சர்வதேச நாடுகளுடனான இணைப்பும் வளர்ச்சி அடையும் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தை இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667820

**********************


(Release ID: 1667872) Visitor Counter : 187