பிரதமர் அலுவலகம்

பெரும் சவால்கள் ஆண்டு கூட்டம் 2020-ல் பிரதமர் மோடி முக்கிய உரையாற்றினார்

அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்யும் சமூகங்களே எதிர்காலத்தை வடிவமைக்கும்- பிரதமர்

நமது குடிமக்களுக்கு எதிர்ப்பு சக்தியை உறுதி செய்ய தடுப்பூசி விநியோக முறையை இந்தியா ஏற்கனவே தயார்நிலையில் வைத்துள்ளது-பிரதமர்

Posted On: 19 OCT 2020 10:36PM by PIB Chennai

பெரும் சவால்கள் ஆண்டு கூட்டம் 2020-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி முக்கிய உரையாற்றினார்

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்யும் சமூகங்களே எதிர்காலத்தை வடிவமைக்கும் என்று கூறினார். குறுகிய நோக்கத்துடனான அணுகுமுறைக்குப் பதிலாக, அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் முன்கூட்டியே முதலீடு செய்தால் மட்டுமே, சரியான நேரத்தில் அவற்றின் பயன்களை அடைய முடியும் என்று அவர் கூறினார். இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான பயணம் பொதுமக்கள் பங்களிப்புடனும், ஒத்துழைப்புடனும் வடிவமைக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஒத்திசைவற்ற நிலையில் அறிவியல் முன்னேற்றம் காணமுடியாது என்று கூறிய பிரதமர், பெரும் சவால்கள் திட்டம் அதன் நெறிமுறைகளை நன்கு உணர்ந்துள்ளது என்றார்.  பல்வேறு நாடுகள் சம்பந்தப்பட்ட இந்தத் திட்டத்தின் பரிமாணம் குறித்து புகழ்ந்துரைத்த அவர், ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு, தாய், சேய் நலம், வேளாண்மை, சத்துணவு, தண்ணீர், சுகாதாரம், தூய்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த தீர்வை  அது வழங்குகிறது என்றார்.

உலகளாவிய பெருந்தொற்று, ஒரு குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள வைத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். நோய்கள் பூகோள எல்லையைக் கடந்தவை என்று கூறிய அவர், நம்பிக்கை, இனம், பாலினம் அல்லது நிற வேற்றுமைகள் அதற்கு கிடையாது என்றார். இந்தப் பெருந்தொற்று மூலம், பல்வேறு தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் பரவி மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று அவர் கூறினார். இந்தியாவில், குறிப்பாக கடந்த சில மாதங்களில், கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் போது, இந்தியாவின் சொத்துக்களாகக் கருதப்படும் வலுவான துடிப்பான அறிவியல் சமூகம், சிறந்த அறிவியல் நிறுவனங்கள் ஆகியவை முக்கிய பங்காற்றியதாகத் தெரிவித்தார். கட்டுப்படுத்துதல்  முதல் திறன் மேம்பாடு வரை அவை அற்புதங்களை நிகழ்த்தியதாக அவர் கூறினார்.

பெரும் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்த போதிலும், மக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பங்கேற்பின் காரணமாக, கோவிட்-19 இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்று பிரதமர் கூறினார். இன்று, தினசரி பாதிப்பு எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும், 88 சதவீதம் என்று குணமடைதல் விகிதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நீக்கு போக்கான பொது முடக்கத்தை கடைப்பிடித்த நாடுகளில் முதலாவதாக இந்தியா இருந்ததாலும், முகக்கவசங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்ட முதல் நாடாக இருந்ததாலும், தொடர்பு கண்டறிதலைத் தீவிரப்படுத்தி, விரைவு எதிரியாக்கி சோதனையை முன்கூட்டியே மேற்கொண்டதாலும் இது சாத்தியமானதாக அவர் தெரிவித்தார்.

கோவிட் தொற்றுக்கு தடுப்பூசி உருவாக்குவதில் முன்களத்தில் இந்தியா உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். நம் நாட்டில் 30-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு வருவதாகவும், அவற்றில் மூன்று முன்னேற்ற நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தடுப்பூசி விநியோக முறையை  இந்தியா ஏற்கனவே தயார்நிலையில் வைத்துள்ளது என்று கூறிய அவர், டிஜிடல் சுகாதார ஐடி மூலம் டிஜிடல்மயமாக்கப்பட்ட கட்டமைப்பு ,  நமது குடிமக்களுக்கு எதிர்ப்பு சக்தியை உறுதி செய்ய பயன்படுத்தப்படும் என்றார். இந்தியா குறைந்த செலவில் தரமான மருந்துகளையும், தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யும் திறனை நிரூபித்துள்ளது என்பதை  அவர் சுட்டிக்காட்டினார். உலக அளவிலான எதிர்ப்பு சக்திக்கான தடுப்பூசிகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் அனுபவம் மற்றும் ஆராய்ச்சி திறன் ஆகியவை, உலக சுகாதார முயற்சிகளின் மையமாக இந்தியாவை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார். இத்துறைகளில் மற்ற நாடுகள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அதன் விருப்பம் என அவர் கூறினார்.

சிறப்பான ஆரோக்கியத்துக்கு  வழிவகுத்துள்ள சிறந்த சுகாதாரம், மேம்பட்ட தூய்மை, அதிகமான கழிப்பறைகள் என கடந்த ஆறு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்சிகளை பிரதமர் பட்டியலிட்டார். இது, பெண்கள், ஏழைகள், நலிவடைந்த பிரிவினரிடம் நோய் பாதிப்புகளைக் குறைக்க உதவியுள்ளது என அவர் கூறினார்.  ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குதல், கிராமப்புறங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைத்தல், உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துதல் போன்ற அரசின் நோய் குறைப்பு முயற்சிகளை அவர் பட்டியலிட்டார்.

தனிநபர் அதிகாரமளித்தல் மற்றும் கூட்டு நலன்  ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த எழுச்சியைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். பயனுள்ள, ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று வாழ்த்திய பிரதமர், இந்த பெரும் சவால்கள் தளத்திலிருந்து, ஊக்கமளிக்கக்கூடிய  உற்சாகமான பல புதிய தீர்வுகள் காணப்படும்  என்று நம்பிக்கை தெரிவித்தார்.


(Release ID: 1666044) Visitor Counter : 233