பிரதமர் அலுவலகம்

ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து விவர அட்டைகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

அடுத்த மூன்று- நான்கு வருடங்களுக்குள் அனைத்து வீடுகளுக்கும் இந்த அட்டைகள் வழங்கப்படும்

வங்கிக் கடன்கள் எளிதாக கிடைப்பதை சொத்து விவர அட்டைகள் உறுதி செய்யும்: பிரதமர்

Posted On: 11 OCT 2020 2:13PM by PIB Chennai

ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து விவர அட்டைகள் வழங்கும் திட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்து, இந்தத் திட்டம் குறித்து பயனாளிகளுடன் உரையாடினார்.

சொத்து விவர அட்டைகள் கிடைக்கப்பெற்ற பயனாளிகளுக்குப் பிரதமர்  வாழ்த்து தெரிவித்தார். அவர்களது வீடு அவர்களுக்கு சொந்தமானது என்பதை சட்டபூர்வமான ஆவணத்துடன் நிரூபிக்கும் உரிமையை, பயனாளிகள் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் நமது கிராமங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்சார்பு இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில், கிராமங்களைத் தன்னிறைவு அடையச் செய்யும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாக  அவர் கூறினார்.

ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேருக்கு அவர்களது வீடுகளுக்கான சொத்து விவர அட்டை இன்று வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த  மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் இந்த அட்டை வழங்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

திரு ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் திரு நானா ஜி தேஷ்முக் ஆகிய இருபெரும் தலைவர்களின் பிறந்த நாளான இன்று இந்த திட்டம் தொடங்கப்படுவது தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இந்த இரு தலைவர்களின் பிறந்த நாட்கள் மட்டும் ஒன்றாகக்  கொண்டாடப்படவில்லை என்று தெரிவித்த பிரதமர், அவர்களது போராட்டங்களும் கொள்கைகளும் கூட ஒத்து இருந்தது என்று கூறினார். திரு ஜெயப்பிரகாஷ் நாராயணும்திரு நானா ஜி தேஷ்முக்கும்ஏழை மற்றும் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடியதைப் பிரதமர் எடுத்துக் கூறினார்.

கிராமங்களில் வாழும் மக்களுக்குள் பூசல்கள் ஏற்படும் போது அவர்களால் தங்களையும் தங்களது சமூகத்தையும் வளர்த்துக் கொள்ள இயலாது என்ற திரு நானா ஜியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இது போன்ற வேறுபாடுகளைக் களைய உடைமைத் திட்டம் உதவியாக இருக்கும் என்று தாம் பெரிதும் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

நிலம் மற்றும் வீடுகளின் உரிமை, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் கூறினார். தங்களது சொத்திற்கு அடையாளம் கிடைக்கும் போது, குடிமக்களின் தன்னம்பிக்கை உயர்வதுடன், முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். சொத்தின் ஆவணங்களின் பேரில் வங்கியிலிருந்து கடன் எளிதாகக் கிடைக்கும் என்றும், வேலைவாய்ப்புக்கான வழிகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார். இன்றைய காலகட்டத்தில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தங்களது சொத்துக்களை முறையாக ஆவணப்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டார். கிராம மக்கள் தங்கள் சொத்துக்களை எளிதில் வாங்கவோ விற்கவோ இந்தத் திட்டம் உதவியாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இன்று நாட்டில் உள்ள ஏராளமான இளைஞர்கள் தாங்களே சொந்தமாக பணம் ஈட்ட விரும்புவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இது போன்ற இளைஞர்களுக்கு சொத்து அட்டை வழங்கப்பட்டவுடன் அதனைப் பயன்படுத்தி, அவர்கள் வங்கிகளில் சுலபமாக கடன் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் உறுதி அளித்தார்ட்ரோன் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நிலங்கள் குறித்து துல்லியமான விவரங்களைப் பெற முடியும் என்று அவர்  நம்பிக்கை தெரிவித்தார். துல்லியமான ஆதாரங்களின் உதவியுடன் கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்த முடியும் என்றும், இது இந்தத் திட்டத்தின் மற்றொரு பயன் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆறு வருடங்களாக பஞ்சாயத்து முறையை மேம்படுத்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை இந்த ஸ்வாமித்வா திட்டம் மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். கிராமப் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த கடந்த ஆறு ஆண்டுகளில் அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், நகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு இணையாக கிராமங்களையும் மேம்படுத்த இந்த ஸ்வாமித்வா  திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில், கிராமங்களில் நீண்ட நாட்களாக நிலவிவந்த  தட்டுப்பாடுகளைக் களையவும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.

சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆறு வருடங்களில் கிராமங்களின் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். வங்கி சேமிப்புக் கணக்கு, மின் இணைப்பு, கழிவறை வசதி, எரிவாயு இணைப்பு, குடிநீர் இணைப்புடன் வீடு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கடந்தவருடங்களில் கிராம மக்களுக்கு செய்து தரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் கண்ணாடி ஒளியிழை என்று அழைக்கப்படும் ஆப்டிகல் பைபர் இணைப்பின் மூலம் இணைக்கும் முயற்சி துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

வேளாண் சீர்திருத்தங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் வாதத்தை மறுத்து பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நம் விவசாயிகள் தன்னிறைவு அடைவதில் விருப்பம் இல்லாதவர்கள்தான் இந்தச் சீர்திருத்தங்களை எதிர்க்கின்றனர் என்றார். சிறு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் இடையர்களுக்கு வழங்கப்படும் கிசான் கடன் அட்டையின் மூலம் இடைத்தரகர்களின் சட்டவிரோதமான வருமானம் தடைப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். உரத்திற்கு வேம்பு பூச்சு, விவசாயிகள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு உரித்தான பணத்தை நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்துதல் போன்ற முடிவுகளை, விரயமாவதை  பெருமளவில் தடுக்கும் முயற்சிகளாக பட்டியலிட்ட பிரதமர்இவ்வாறு குறைபாடுகளை நீக்குவதனால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தான் வேளாண் சீர்திருத்தத்தை எதிர்க்கின்றனர் என்று கூறினார். நாட்டின் முன்னேற்றம் இத்தகைய நபர்களால் தடைபடாதுகிராமங்களையும் ஏழை மக்களையும் தன்னிறைவு அடைய செய்யும் அரசின் முயற்சிகள் தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்இந்த இலக்கை அடைய ஸ்வாமித்வா திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியளித்தார்.

-----



(Release ID: 1663534) Visitor Counter : 218