பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் `பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால் -4’ஐத் தொடங்கி வைத்தார்
Posted On:
29 SEP 2020 4:27PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் புதுதில்லியில் இன்று பாதுகாப்புத் துறையில் புதுமைகளைப் புகுத்தி, அது தொடர்பான சூழலை விரிவுபடுத்தும் வகையில், டிஸ்க் 4 எனப்படும் `பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால் 4’-ஐ, iDEX நிகழ்ச்சியின் போது தொடங்கி வைத்தார்.
13 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் எல்லைகளில் களத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அசாதாரணமான சூழல்களை எதிர்கொண்டு வருகின்றனர். போர்த்தளவாடங்கள் மற்றும் உபகரணங்களில் எத்தகைய மாற்றங்களைச் செய்வது, அவற்றை மேம்படுத்துவது தொடர்பாக அவர்களுக்கு பல யோசனைகள், கருத்துக்கள் இருக்கக்கூடும். அத்தகைய புதுமைகளை அளிக்கும் செயல்முறை தற்போது இல்லை. எனவே, iDEX4 என்பது அத்தகைய முன்முயற்சியை அளிப்பதற்கான முதல் முயற்சியாகும். ராணுவத்தினரின் புதிய யோசனைகள், கண்டுபிடிப்புகள் ஆய்வுக்குப் பின்னர் ஏற்கப்பட்டு, விருதுகள் அளிக்கப்படும். இதில், நாடு முழுவதிலும் இருந்து ராணுவ வீரர்கள் பெருமளவில் பங்கேற்க வரவேற்கப்படுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், iDEX முன்முயற்சி பாதுகாப்பு துறையில் ஸ்டார்ட் அப் சூழலை உருவாக்குவதற்கான செயல்திறன் மிக்க யோசனை என்று கூறினார். தற்சார்பு இந்தியா இயக்கத்தை நடைமுறைப்படுத்தி இத்துறையில் தன்னிறைவை எட்டுவதற்கான முன்முயற்சி இது என அமைச்சர் தெரிவித்தார்.
பாதுகாப்பு துறையில் புதுமையை புகுத்துவதற்கு அனைத்து சம்பந்தப்பட்டவர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சி இது என அவர் கூறினார். ‘’ பாதுகாப்பு துறையில் சூழலை மேம்படுத்த அதனை தன்னிறைவு பெற்றதாக உருவாக்க தனியார் துறை பங்கேற்பு முக்கியமாகும். இதற்காக தனியார் துறையினருடன் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். தொழில்நுட்ப பரிமாற்றம், 74% அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றை இது ஊக்குவிக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு 101 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்று அவர் தெரிவித்தார். பாதுகாப்பு துறையில் தனியாரை ஊக்குவிக்கும் வகையில், பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை 2020-ஐ அரசு நேற்று வெளியிட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் திரு ஶ்ரீபத் யெஸ்ஸோ நாயக், முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், பாதுகாப்புத் துறை செயலர் டாக்டர் அஜய் குமார், பாதுகாப்பு உற்பத்தி துறை செயலர் திரு. ராஜ்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால் 4-க்கு 11 சவால்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான புதுமையான சிந்தனைகள், கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப சிந்தனைகள் ஆகியவை தேவை. புதிதாக தொழில் தொடங்குவோர், குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவினர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ளலாம்.
சரியான தயாரிப்பை உருவாக்குவதற்கு , டிஐஓ உற்பத்தி மேலாண்மை அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளது. இதற்கான விதிமுறைகளையும் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார்.
iDEX முன்முயற்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி , ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி வைத்தார். பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இது தொடங்கப்பட்டது. பாதுகாப்பு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, புதுமையான தொழில்நுட்பங்களை அளிப்பதற்கு, புதிய தொழில்முனைவோர், சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவினர் உள்ளிட்டோருக்கு இது ஒரு வாய்ப்பாகும். iDEX முன்முயற்சிகள் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களான பிஇஎல், எச்ஏஎல் ஆகியவற்றின் பிரிவு 8 நிறுவனமான பாதுகாப்பு இன்னோவேசன் அமைப்பு செயல்படுத்தி வருகிறது.
பாதுகாப்பு உற்பத்தி துறையில், 9 பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்கள் முக்கிய தூண்களாக செயல்படுகின்றன.
பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைத்து பங்கேற்கும் தளமாக iDEX நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம், iDEX தேர்வு செய்த புதிய தொழில்முனைவோர், பாதுகாப்பு இன்னோவேசன் அமைப்பு, இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமானப்படை போன்ற செயல்படுத்தும் முகமைகள், நிதி ஆயோக், டிஆர்டிஓ, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு சம்பந்தப்பட்ட பிரிவினர் இதில் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி மூலம், 500-க்கும் மேற்பட்ட புதிய தொழில்முனைவோர் இதில் கலந்து கொண்டனர்.
***********************
(Release ID: 1660079)
Visitor Counter : 265