வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளின் நலன் கருதி நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக ஏஎஃப்சி இந்திய லிமிடெட் மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம் ஆகியவற்றுடன் ஒப்பந்தங்களில் அபெடா கையெழுத்திட்டது

Posted On: 25 AUG 2020 11:45AM by PIB Chennai

வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபெடா),  ஏஎஃப்சி இந்திய லிமிடெட் மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம், தில்லி, ஆகியவற்றுடன் புத்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. பங்குதாரர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்குவதற்காக மேற்கண்ட நிறுவனங்களின் நிபுணத்துவத்தை பயன்படுத்தி ஒன்றாக பணிபுரிவதன் மூலம் வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளின் நலன் கருதி நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கமாகும்.  

 

வேளாண் ஏற்றுமதி கொள்கையின் அமல்படுத்தலுக்காக மாநில அரசுகளுடன் இணைந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் தொய்வின்றி பணியாற்றி வருகிறது. மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், கேரளா, நாகாலாந்து, தமிழ்நாடு, அஸ்ஸாம், பஞ்சாப், கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மணிப்பூர் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் மாநிலம் சார்ந்த செயல் திட்டத்தை இறுதி செய்துள்ள நிலையில், இதர மாநிலங்களின் செயல் திட்டங்கள் இறுதிப்படுத்துதலின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. 26 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் மைய முகமைகளை நியமித்துள்ளன. மாநில தலைமை செயலாளரின் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் 21 மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

 

உருளைக் கிழங்குக்காக பஞ்சாப் மற்றும் உத்திரப் பிரதேசத்திலும் (இரு தனித்தனி மாவட்டங்கள்), இசாப்கோலுக்காக ராஜஸ்தானிலும், ஆரஞ்சு, மாதுளை, திராட்சை மற்றும் வாழைப்பழத்துக்காக மகாராஷ்டிராவிலும் (3 மாவட்டங்கள்), வாழைப்பழத்துக்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும், மாம்பழத்துக்காக உத்திரப் பிரதேசத்திலும், பால் பொருள்களுக்காக குஜராத் மற்றும் உத்திரப் பிரதேசத்திலும், ரோஸ் வெங்காயத்துக்காக குஜராத்திலும் (2 மாவட்டங்கள்), பண்ணை பசுமை காய்கறிகளுக்காக உத்திரப் பிரதேசத்திலும், ஆரஞ்சுக்காக மத்தியப் பிரதேசத்திலும் மற்றும் உருளைக் கிழங்குக்காக குஜராத்திலும் (2 மாவட்டங்கள்) இருபது தொகுதி அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பங்குதாரர்களுக்கு தெளிவை ஏற்படுத்துவதற்காகவும், தேவைப்படும் இடையீடுகள் குறித்து விவாதிக்கவும் இரண்டு சுற்று கூட்டங்கள் தொகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன.

*****



(Release ID: 1648500) Visitor Counter : 234