பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பணியாளர்களைத் தேர்வு செய்ய தேசியப் பணியாளர் தேர்வு முகமை நடத்த உள்ள பொது தகுதித் தேர்வை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்: டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
22 AUG 2020 6:22PM by PIB Chennai
பணியாளர் தேர்வுக்காக தேசியப் பணியாளர் தேர்வு முகமை (NRA) நடத்த உள்ள பொதுத் தகுதித் தேர்வை (Common Eligilibility Test- CET) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு முகமையை அமைக்கும் முடிவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுக்கான இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலக விவகாரங்கள், பணியாளர், பொதுமக்கள் குறைகேட்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர். ஜிதேந்திர சிங், பொதுத் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பணியாளர் தேர்வு அமைப்புகளுடனும், பொதுத்துறை நிறுவனங்களுடனும் பகிர்ந்துகொள்ளப்படும், பின்னர் தனியார் துறையினருடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று கூறினார். இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்டவற்றின் பணியாளர் தேர்வு முகமைகளுக்கு பணியாளர் தேர்வுக்கான செலவையும், நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும் என்று அவர் கூறினார். அதே போல, வேலை தேடும் இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் செலவைக் குறைப்பதாகவும் அமையும் என்று அவர் தெரிவித்தார்.
பொதுத் தகுதித்தேர்வு மதிப்பெண்களை இந்த முகமைகள் மற்றும் அமைப்புகள் பயன்படுத்திக் கொள்வதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கை போன்ற ஏற்பாடுகள் செய்யப்படும் என்று டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மேலும், வேலை வழங்குவோர், பணியாளர்கள் என இருதரப்புக்கும் பலன் அளிக்கும் வகையில் அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுத் தகுதித்தேர்வு மதிப்பெண்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஒரு அங்கமாகச் சேர்ந்து கொள்ள விரும்பும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளுடன் தானும், மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறையும் தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார். இந்தச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ள பல்வேறு முதலமைச்சர்களும் ஆர்வமாகவும், விருப்பத்துடனும் இருப்பதாக அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தனிப்பட்ட கவனம் மற்றும் ஆர்வம் செலுத்தியதற்கு வரவேற்பு தெரிவித்த அவர், அவரது முயற்சி இல்லாமல் இந்தப் புரட்சிகரமான முடிவை எடுத்திருக்க முடியாது என்று தெரிவித்தார். இது வேலை தேடிப் போராடி வரும் இளைஞர்களுக்கு, எளிதாக வாழ்வதற்கான வழிகளைக் கொண்டு வருவதற்கான மிகப்பெரும் சீர்திருத்தம் என்பது நிரூபிக்கப்படும் என்று கூறினார். பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் செயல்படும் அரசின் சிந்தனை மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடாகவும் இது அமைந்துள்ளது என்று ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
சிலர் தெரிவித்து வரும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த டாக்டர். ஜிதேந்திர சிங், தேர்வில் கலந்துகொள்வோரில் தாழ்த்தப்பட்டோர்/ பழங்குடியினர்/ இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற பிரிவினருக்கு ஏற்கனவே உள்ள அரசின் கொள்கையின் படி, தேர்வில் பங்கேற்பதற்கான உயர்ந்தபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவித்தார். சில மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் பின்பற்றும் குடியேற்றம் போன்ற தேர்வுக்கான விதிகளுடன் தொடர்பு இல்லாததாக பொதுத் தகுதித்தேர்வு இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று சிலர் கூறிவரும் தவறான தகவல்களை மறுத்துள்ள அவர், தொடக்கத்தில் 12 இந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார். பின்னர் படிப்படியாக 8-வது அட்டவணையில் உள்ள மற்ற மொழிகளும் சேர்க்கப்படும் என்று டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
<><><><><>
(Release ID: 1648027)
Visitor Counter : 185