நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
விற்பனைப் பொருளின் தயாரிப்பாளர் குறித்த விவரம், பொருள்களின் காலாவதி தேதி, விலை மற்றும் இதர விவரங்கள் ஆகியன, அனைத்துப் பொருள்களின் பொதிகளிலும் தெளிவாக இருக்க வேண்டும் – திரு ராம் விலாஸ் பஸ்வான்
Posted On:
21 AUG 2020 8:20PM by PIB Chennai
மத்திய நுகர்வோர் உறவுகள், உணவு, பொதுவிநியோகத் துறைகளின் அமைச்சர் திரு. ராம் விலாஸ் பஸ்வான் விற்பனைப் பொருள்களின் தயாரிப்பாளர்கள் குறித்த விவரம், பொருளின் காலாவதி தேதி, அதிகபட்ச சில்லறை விலை மற்றும் இதர விவரங்கள் ஆகியன தெளிவாக இருக்கவேண்டும், அனைத்துப் பொருள்களின் பொதிகளிலும் இவை அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். எந்த ஒரு விற்பனைப் பொருளின் பேக்கேஜிலும், எந்தவொரு தகவலாவது விடுபட்டு இருந்தால் நுகர்வோர் அது குறித்து புகார் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நியாயமற்ற நடைமுறையில் அல்லது தரம் குறைந்த பொருள்களை சந்தையில் வலுக்கட்டாயமாக விற்பனைக்கு அனுப்பும் உற்பத்தியாளர்களின் மனநிலையை மாற்றுவதற்கு இத்தகைய முயற்சி உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர்களுக்கான காணொளிக் கருத்தரங்கின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த திரு.பஸ்வான் ஆந்திரப்பிரதேசம் குண்டூரில் உள்ள எடை மற்றும் அளவைத் துறையானது “செடர் ஓஎம்” மருந்தை விநியோகிக்கும் மருந்து நிறுவனத்தின் மீது புகார் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். தயாரிப்பாளர் பெயர், உதவிஎண் மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியன பார்வைக்குத் தெரியும்படி பதிக்கப்படவில்லை என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக திரு.பஸ்வான் தெரிவித்தார். மேலும் சுயஉறுதி மொழியில் எண்கள் மற்றும் எழுத்துக்களின் அளவு 1மில்லி மீட்டருக்கும் குறைவாக இருப்பதாகவும் மருந்துப் பொதியில் உள்ள இதனை எளிதில் படிக்க முடியவில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடை மற்றும் அளவைச் சட்டம் 2009இன் பிரிவு 15இன் கீழ் விநியோகித்தவர் மற்றும் விற்பனையாளர் வளாகங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் இந்த மருந்து பேக்கெட்டுகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
****
(Release ID: 1647871)