குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

விநாயக சதுர்த்தியையொட்டி மக்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வாழ்த்து

Posted On: 21 AUG 2020 5:45PM by PIB Chennai

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியின் முழுவடிவம் வருமாறு;

புனிதமான ‘’கணேஷ் சதுர்த்தி’’’யை முன்னிட்டு நமது நாட்டு மக்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடவுளர்கள் சிவபெருமான், பார்வதி ஆகியோரின் இளைய மகன் என்ற நம்பிக்கைக்கு உகந்த கணேச பகவான், ஞானம், முன்னேற்றம், நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் சின்னமாக விளங்குகிறார். நாம் கணேச பகவானை வழிபட்டு, புதியவற்றைத் தொடங்குவதற்கு முன்பாக அதில் இருக்கும் தடங்கல்களை அகற்றி அருளாசி வழங்குமாறு கேட்டுக்கொள்வோம்.

கணேச சதுர்த்தி என்பது பகவான் கணேசரின் பிறப்பைக் குறிக்கும் 10 நாள் பண்டிகையாகும். இந்த விழாக்கள் பக்தர்களின் கூட்டம் மற்றும் ஊர்வலங்களால் களைகட்டிக் காணப்படும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகரின் பல்வேறு விதமான அழகிய சிலைகளை மக்கள் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு வந்து வைத்து, பக்தி சிரத்தையுடன் வழிபடுவார்கள். 10-வது நாளில் கணேசர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். கணேசர் கைலாயத்துக்கு பயணம் செல்வதை இது குறிக்கும். இத்துடன் இந்த விழா நிறைவு பெறும்.

பெரும் கூட்டமும் , பிரம்மாண்ட ஊர்வலங்களும் விநாயகர் சதுர்த்தி விழாவின் அடையாளமாக இருந்த போதிலும், இந்த ஆண்டு, கோவிட்-19 பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, கொண்டாட்டங்களை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். கோவிட்-19 சமூக இடைவெளியையும், விதிமுறைகளையும் பின்பற்றி, விழாவைக் கொண்டாடும் வேளையில், சுகாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் பராமரிப்போம் என எனது சக குடிமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கணேச சதுர்த்தி விழா, நம் நாட்டில் அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றத்தை அளிப்பதாகுக

 ***********



(Release ID: 1647673) Visitor Counter : 191