நித்தி ஆயோக்

அடல் புதுமைப் படைப்பு இயக்கம், இந்தியா- சுவீடன் சுகாதார பராமரிப்பு மையத்துடன் இணைந்து தொடக்க நிலை நிறுவனச் சூழல் அமைப்பை விரிவாக்க உள்ளது

Posted On: 20 AUG 2020 7:07PM by PIB Chennai

நாட்டில் புதுமைப் படைப்புப் பண்பாட்டை விரிவாக்கும் நோக்கத்திற்கேற்ப, இந்தியத் தொழில்முனைவோரின் திறன்களை மேம்படுத்தவும் நாடெங்கும் உள்ள துடிப்புள்ள தொடக்கநிலை சூழல் அமைப்பை மேம்படுத்தவும், அடல் புதுமைப் படைப்பு இயக்கமும் நித்தி ஆயோக்கும் இந்தியா-சுவீடன் மருத்துவப் பராமரிப்பு மையத்தின் சார்பில் சுவீடன் வர்த்தக அமைப்புடன் ஒத்துழைக்க உள்ளன. இதற்கென அடல் புதுமைப் படைப்பு இயக்கமும், இந்தியா-சுவீடன் மருத்துவப் பராமரிப்பு மையமும் 2020 ஆகஸ்ட் 20ம் தேதியன்று வியாழக்கிழமை நிகர்நிலை நோக்க அறிக்கையில் கையெழுத்திட்டன.

அடல் புதுமைப் படைப்பு இயக்கத்தின் கீழ் அடல் புதிய இந்தியா சவால், அடல் அடைகாத்து முழு வளர்ச்சிபெறச் செய்யும் மையம், அடல் சமுதாயப் புதுமைப் படைப்பு மையம் , அடல் சரிசெய்து மேம்படுத்தும் மையம், சிறு தொழில்களுக்கான அடல் ஆராய்ச்சி மற்றும் புதுமைப்படைப்பு மையம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல் படுகின்றன. தற்போது கைழுத்திடப்பட்டுள்ள ஒத்துழைப்பு மூலம் இந்த திட்டங்கள் அனைத்தும் சிறந்த ஆதரவைப் பெறும். நிகழ்ச்சிகளை நடத்துதல், விழிப்புணர்வு இயக்கங்களை செயல்படுத்துதல், இரு நாடுகளின் புதுமைப்படைப்பு நிலையை மேம்படுத்தும் செயல்பாடுகள் - நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்தல் என்ற வகையில் இந்த ஆதரவு வழங்கப்படும்.

தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ,ஜோத்பூர் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், சுவீடன் வர்த்தக நிறுவனம் ஆகியற்றின் கூட்டு முயற்சியால் உருவானது இந்தியா- சுவீடன் சுகாதார பராமரிப்பு மையம். திறந்த நிலை புதுமைப்படைப்புச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் புதுமைப் படைப்பு மையம், இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை, சுவீடன் அரசின் சுகாதாரம் மற்றும் சமூகநல அமைச்சகம் மற்றும் இந்தியாவில் உள்ள சுவீடன் தூதரகம் ஆகியற்றின் முக்கிய வழிகாட்டுதலின் பேரில் அமைக்கப்பட்டுள்ளது.

******



(Release ID: 1647600) Visitor Counter : 265