பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

நாடு முழுவதும் உள்ள 31 மாநகரங்களில் 'நடமாடும் இந்தியப் பழங்குடிகள்' வாகனங்களைக் காணொளிக் காட்சி மூலம் திரு அர்ஜூன் முண்டா தொடங்கி வைத்தார்

Posted On: 19 AUG 2020 2:21PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள 31 மாநகரங்களில் 'நடமாடும் இந்தியப் பழங்குடிகள்' வாகனங்களைக் காணொளிக் காட்சி மூலம் மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் திரு. அர்ஜூன் முண்டா இன்று தொடங்கி வைத்தார். பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச்சர் திருமதி. ரேணுகா சிங் சருதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சிக் கூட்டமைப்புத் (டிரைபெட்) தலைவர் திரு.ரமேஷ் சந்த் மீனா, பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகச் செயலாளர் திரு. தீபக் கண்டேகர், மற்றும் டிரைபெட் நிர்வாக இயக்குநர் திரு. பிரவிர் கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர். முதல் கட்டமாக, அகமதாபாத், அலஹாபாத், பெங்களூரு, போபால், சென்னை, கோயமுத்தூர், தில்லி, கவுகாத்தி, ஹைதரபாத், ஜகதல்புர், குந்தி, மும்பை மற்றும் ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் 57 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

 

நிகழ்ச்சியில் பேசிய திரு. அர்ஜூன் முண்டா, கோவிட்-19 பெருந்தொற்று பல்வேறு வகைகளில் வாழ்க்கையில் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ள இந்த சோதனையான காலகட்டத்தில், ஆரோக்கியமாக வாழ்வதிலும், முடிந்தவரை பாதுகாப்பாக இருப்பதிலும் மக்கள் கவனம் செலுத்துகின்றனர் என்றார். இயற்கையான மற்றும் அத்தியாவசிமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள்களை வாங்கவும், நீடித்து நிலைக்கக் கூடிய மற்றும் முழுமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் கடைக்குக் கூட யாரும் வெளியே போக வேண்டியதில்லை என்பதை டிரைபெட்டின் இந்தப் புதுமையான முயற்சி உறுதி செய்கிறது. இந்தக் கடினமான காலகட்டத்தில் 'உள்ளூருக்கு ஊக்கம்' என்னும் தாரக மந்திரத்தைப் பின்பற்றி, புதுமையான முயற்சிகளின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடி மக்களின் நிலைமையைச் சீர்படுத்தவும், அருமருந்தாகவும், நிவாரணமாகவும் அமைந்துள்ள அதன் முதன்மைத் திட்டங்களுக்கு வலுசேர்க்கவும் டிரைபெட் பாடுபட்டு வருகிறது. இந்த நடமாடும் வாகனத் திட்டத்தின் மூலம், வாடிக்கையாளரின் இருப்பிடத்துக்கே பொருள்களை நேரடியாகக் கொண்டு செல்வதோடு, தள்ளுபடிகளையும் டிரைபெட் வழங்குகிறது. இதில் வரும் வருமானம் முழுவதும் பழங்குடியினருக்கே சென்று, அவர்களது வருவாயையும், வாழ்வாதாரத்தையும் நிலைப்படுத்த உதவுகிறது.

 

பெருந்தொற்று பல்வேறு வகைகளில் வாழ்க்கையில் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ள சோதனையான இந்தக் காலகட்டத்தில், ஆரோக்கியமாக வாழ்வதிலும், முடிந்தவரை பாதுகாப்பாக இருப்பதிலும் மக்கள் கவனம் செலுத்துகின்றனர் என்று திருமதி. ரேணுகா சிங் சருதாவும் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். இயற்கையான மற்றும் அத்தியாவசிமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள்களை வாங்கவும், நீடித்து நிலைக்கக் கூடிய மற்றும் முழுமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் கடைக்குக் கூட யாரும் வெளியே போக வேண்டியதில்லை என்பதை டிரைபெட்டின் இந்தப் புதுமையான முயற்சி உறுதி செய்கிறது. ஊரகப் பகுதிகளில் வாழும் பழங்குடியினருக்கு இந்த முயற்சி உதவும்.

                                                                                                               ***



(Release ID: 1646941) Visitor Counter : 186