ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

6 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் மூலம் ரூ. 1- என்ற குறைந்தபட்ச விலையில் ஏழைப் பெண்களுக்கு 5 கோடிக்கும் அதிகமான சானிட்டரி நாப்கின்கள் வழங்கி இருக்கிறோம்: பிரதமர்

Posted On: 15 AUG 2020 6:43PM by PIB Chennai

74 ஆவது விடுதலை நாள் விழாவில் தில்லி செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது “ஏழை சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கவேண்டும் என்பதில் இந்த அரசாங்கம் தொடர்ந்து அக்கறை கொண்டிருக்கிறது. மக்கள் மருந்தகங்களின் மூலம் ஒரு ரூபாய் விலையில் அவர்களுக்கு சானிட்டரி நாப்கின்களை பெருமளவில் வழங்கி வருகிறோம். குறுகிய காலத்தில், 6 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் மூலம் ஏழைப் பெண்களுக்கு 5 கோடிக்கும் அதிகமான சானிட்டரி நாப்கின்கள் வழங்கி இருக்கிறோம்.

நமது மகள்களுக்கு சத்துக்குறைபாடு இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதற்கு ஒரு குழுவை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பொருத்தமான வயதில் அவர்களுக்குத் திருமணம் செய்வதை உறுதிசெய்ய அந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், நமது மகள்களின் திருமண வயது பற்றி பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும்.” என்று கூறினார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து பேசுகையில், மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு.  டி.வி.சதானந்த கவுடா பிரதமரின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவின் காரணமாகவே இந்த சாதனை சாத்தியமானது என்று கூறினார். 6000 மக்கள் மருந்தகங்கள் மக்களுக்கு குறிப்பாக நலிந்த மக்களுக்கு சேவை செய்ய உதவுகின்றன என்றும் அவர் கூறினார். ரூ. 1- என்ற குறைந்தபட்ச விலையில் 5 கோடி சானிட்டரி பேடுகளை நாங்கள் வழங்கியுள்ளதே இதற்கு சரியான எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்காக பிரதமர் மக்கள் மருந்தகங்கள் மூலம் அத்தியாவசிய மற்றும் தரமான மருந்துகளை மலிவு விலையில் அரசு தொடர்ந்து வழங்கும் என்று திரு. கவுடா வலியுறுத்தினார்.



(Release ID: 1646403) Visitor Counter : 174