உள்துறை அமைச்சகம்
பிரிக்ஸ் போதைமருந்து தடுப்புப் பணிக்குழுவின் 4-வது கூட்டம்
Posted On:
16 AUG 2020 11:06AM by PIB Chennai
பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் போதைமருந்துத் தடுப்புப் பணிக்குழுவின் 4-வது அமர்வு இந்த வாரம் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில், போதைமருந்து கட்டுப்பாட்டுப் பிரிவின் (என்சிபி) தலைமை இயக்குநர் திரு. ராகேஷ் அஸ்தானா தலைமையிலான குழு கலந்து கொண்டது. இதில், என்சிபி-யின் துணைத் தலைமை இயக்குநர் (செயல்பாடு) திருமதி. பி.ராதிகா, மாஸ்கோவுக்கான இந்திய தூதரகத்தைச் (வர்த்தகம்) சேர்ந்த முதல் செயலர் திருமிகு, விருந்தாபா கோகில், வெளியுறவு அமைச்சகத்தின் ( பன்முனைப் பொருளாதாரத் தொடர்பு) சார்புச் செயலர் டாக்டர். வைபவ் டாண்டலே, என்சிபியின் (செயல்பாடு) துணை இயக்குநர் திரு.கே.பி.எஸ். மல்கோத்ரா ஆகியோர் உள்ளனர். இந்த ஆண்டுக் கூட்டம், ரஷ்யாவின் தலைமையில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.
பிரிக்ஸ் நாடுகளில் போதைமருந்து நிலை குறித்த கவலைகள் பற்றி பயனுள்ள கருத்துகள் பரிமாறப்பட்டன. சட்ட விரோத போதைமருந்து கடத்தல் காரணமாக ஏற்பட்டுள்ள நிலை, உள ரீதியாகப் பாதிக்கும் பொருள்கள், அதன் காரணிகள், அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுக்க, உறுப்பு நாடுகள் அது தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது பற்றி பொதுவான யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. கணினியில் பிரத்யேக மென்பொருளான டார்க்நெட் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை கடத்தலுக்குத் தவறாகப் பயன்படுத்துவது பற்றியும் இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அனைத்து அம்சங்கள் பற்றியும் உறுப்பு நாடுகள் ஒரு அறிவிக்கையைக் கடைப்பிடித்தன.
பிரேசில் கூட்டுக் குடியரசு, ரஷ்யக் கூட்டமைப்பு, இந்தியக் குடியரசு, சீனா மக்கள் குடியரசு, தென்னாப்பிரிக்கக் குடியரசு ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு அமைப்பு பிரிக்ஸ். இந்த நாடுகளின் வளர்ந்து வரும் பொருளாதாரம், மக்கள்தொகை, அபரிமிதமான இயற்கை வளங்கள் இந்நாடுகளின் சர்வதேச செல்வாக்கு உள்ளிட்டவை உலக அளவில் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக இது உருவெடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விஷயங்கள் தவிர, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே இதர ஒத்துழைப்பு சம்பந்தமான விஷயங்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
(Release ID: 1646366)